Tamil News
Home ஆய்வுகள் 2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன்

2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன்

சிறீலங்காவின் இறைமை இழப்பு

பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி

இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு.

ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகநாடுகள் ஏற்று, அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வைப்பதற்கான திறவுகோலாக அமைகிறது.

இப் பெருங்கலக்கத்தில் சிறீலங்கா உள்நாட்டுத் தூண்டுதல்கள், அயல்நாட்டுத் துணைகள் மூலம் தீர்மானத்தைச் செயலிழக்கவைக்க தனது முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர்.

இந்த நடைமுறைத் தன்மையை உணர்ந்து ஈழத்தமிழர்கள் தாயகத்திலும், புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்கக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும்.

“2.8 மில்லியன் டொலரைச் செலவழித்து சிறீலங்காவின் முப்படையினரையும் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் செயல், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் என ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் கருதுகிறது. சிறீலங்காவிற்கான சட்டங்களை உருவாக்குவது, அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கோருவது முப்படையினரதும் நியமனங்களை விமர்சிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுகிறது. இதனை அனுமதிக்க வேண்டுமா? இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்ன? இவைகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என சிங்கள மக்களிடம் ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானமாக மடைமாற்றுச் செய்து காட்டி பௌத்த சிங்கள பேரினவாதத்தைத் தூண்டி அதன்வழி கட்சி பேதமற்ற முறையில் தீர்மானத்திற்கு எதிரான சிங்கள பௌத்த நிறவெறியைக் கட்டியெழுப்பும் பேருரையைச் சிறீலங்காவின் கல்வி அமைச்சரும் சட்டத்துறைப் பேராசிரியருமான ஜி. எல். பீரிஸ் சிங்கள பௌத்தத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கண்டியில் வைத்து நிகழ்த்தியுள்ளார்.

சட்டரீதியாக அனைத்துலக சட்டங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை சிங்கள மக்கள் சக்தியைக் கொண்டும், பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியும் பாதுகாப்பதற்கான சூழ்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை, இவ்வகையில் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் திரிபுவாதம் செய்துள்ளார். கூடவே இது குறித்து நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனக் கேள்வியும் எழுப்பிப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தினை சிறீலங்காவின் ஆதிபத்திய இறைமையுள்ள இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்படாது தடுக்கக் கூடிய வகையில் அரச அதிபருக்கு அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்குப் பாதுகாப்பை படையினருக்கும் வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பு ஆவன செய்ய வேண்டும் என்னும் அரசகொள்கை உருவாக்கத் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் ஐ.நா. தீர்மானத்தின்படி இனஅழிப்புச் செய்த தனி ஆட்கள் மேலேயே அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை நெறிப்படுத்தப்படும். ஆகவே தங்களது படையினரைப் பாதுகாக்க ஜி எல். பீரிஸ் படையினருக்கும் தண்டனை விலக்களிக்கும் முறைமையை அரசியலமைப்புச் சட்டமாக்க முயல்கின்றார்.

மேலும் மனித உரிமைகள் ஒழுங்காற்றலுக்கான நெறிப்படுத்தலை சிறீலங்காவின் இறைமையுள் தலையிடுவதாக மடைமாற்றம் செய்து, அதன்வழியாக ஐக்கியநாடுகள் சபை ஒரு நாட்டின் இறைமைக்குள் தலையீடு செய்யக் கூடாதென்ற இறைமைப் பாதுகாப்பு விலக்கை சிறீலங்காவுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும் சட்டத்துறைப் பேராசிரியரான ஜி.எல். பீரிஸ் முயற்சிக்கின்றார். இதன்வழி சிறீலங்கா மனித உரிமை வன்முறைகள் மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றையயே தனது அரசியல் நோக்காகவும், நிர்வாகப் போக்காகவும்,  சட்ட அமுலாக்கச் செயலாகவும் கொண்டு செயற்பட்டுத்  தானே தனது இறைமையை இழக்க வைத்துள்ளது என்ற உண்மையை முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைப்பது போல ஜி. எல். பீரிஸ் அவர்கள் சிங்களப் பேரினவாதம் என்னும் தனக்கு உணவளிக்கும் சோற்றுக்குள் புதைத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இறைமை இழப்பை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்ட முற்பட்டுள்ளார்.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சோ கலக்கத்தில் ஒருபடி மேலே போய்,  ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை நிறவெறியாகவும், ஆசிய ஊடுருவலாகவும் காட்டி ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைப் பகிரங்கமாகக் கொச்சைப்படுத்தி வருகின்றது. “வெள்ளையினத்தவர்கள் வாழும் 35 நாடுகளை ஒன்றிணைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்தியாவின் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானமென இதனைத் தெரிவித்து வாக்கெடுப்பைத் தவிர்த்துக் கொண்டார்” என்னும் சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேயின் யேர்மன் தொலைக்காட்சிக்கான செவ்விப் பேச்சு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் பொறுப்புமிகு பதவியில் உள்ளவர் வெள்ளையின முயற்சி எனப் பச்சை நிறவாதத்தைக் கக்கி, ஆசிய மேற்குலகப் பகைமையை உருவாக்கி உலகின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவிக்க – வளர்க்க முயற்சிப்பதை உலகு கூர்மையாக அவதானிக்கிறது. அதேவேளை பௌத்த சிங்கள நாட்டை வெள்ளையர்கள் நடத்த முற்படுகிறார்கள் என்ற சிங்கள பௌத்த இனவெறியைச் சிங்களர்களிடை தூண்டி, தீர்மானத்தின் நடைமுறைச் செயலாக்கத் திறனை இலங்கைக்குள் தடுக்க முயற்சிக்கும் இக்கூற்றுக்கள் எந்த அளவுக்குச் சிறீலங்கா ஐ.நா. தீர்மானத்தால் கலங்கிப் போயுள்ளது என்பதை உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி நாடுகளை இலக்கு வைக்கும் தீர்மானம் எனக் கூறியிருப்பதாக ஜயநாத் கொலம்பேயின் கூற்று ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தை ஆசிய நாடுகளாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், யப்பான், இரஸ்யா, சீனா போன்றனவும் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளும் ஏன் எதிர்த்தும், நடுநிலையாக வாக்களிக்காமல் விட்டும் எதிர் கொண்டன என்பதற்கான அவரின் விளக்கமாக அமைகிறது. இந்த விளக்கத்தின் மூலம் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைத் தன் சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்டையின் முன்னரங்கக் காவற்காரர்களாக வைத்துத், தங்களின் ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பை முன்னெடுப்பதே இதன் பின்னணியாக உள்ளது.

உண்மையில் இங்குதான் உலகத் தமிழர்கள் இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளுடனும், ஆபிரிக்க நாடுகளுடனும் சரியான முறையில் ஈழத்தமிழர்கள் இனங்காணக் கூடிய அச்சத்திற்குள் சிறீலங்காவால் நாளாந்த வாழ்வில் வாழவைக்கப்பட்டு, உயிருக்கும், உடைமைகளுக்கும், நாளாந்த வாழ்வுக்கும்  பாதுகாப்பு ஏதுமற்ற முறையில் வாழ்ந்து வரும் அவல வாழ்வை வெளிப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இனஅழிப்புக்குள்ளாகும் மக்களை இந்நாடுகள் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்குள் மேற்குலகத் தலையீட்டிற்கான வழியாக அமைந்து விடும் என அச்சப்படுகின்றன என்கிற உண்மை தெளிவாகிறது.

அத்துடன் சிறீலங்கா செய்தது போன்ற மனிதத்துவத்தையே தலைகுனிய வைக்கும் செயற்பாடுகளை எந்த நாடு செய்தாலும் அதன் விளைவை அவர்கள் அனுபவிக்க வேண்டி வருமே தவிர, ஈழமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சி எவ்வாறு அந்த நாடுகளை இலக்காக்கும் எனக் கூற முடியுமென்ற கேள்வியை உலகத் தமிழர்கள் இந்த நாடுகளிடம் சரியான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. இதனை உணர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்களின் அச்சங்களைச் சந்தேகங்களைப் போக்கக் கூடிய வகையில் இந்நாடுகளுடன் தோழமையை வளர்க்கக் கூடிய ஓரு உயராய்வு மையத்தை நிறுவ வேண்டிய காலமாக இது உள்ளது.

அதேவேளை  உள்நாட்டு மனித உரிமைப் பிரச்சினைகளுள் அனைத்துலகத் தலையீட்டை விரும்பாத இந்தியாவின் போக்குத்தான் ஈழத்தமிழர்களின்  பிரச்சினையை மனித உரிமை மீறல் விசாரணையாக அனைத்துலக நாடுகளால் முன்னெடுக்க விடாது, தமிழரின் அரசியல் பிரச்சினையாக அதனை வெளிப்படுத்தி, இதற்கு அரசியல் தீர்வு காணப்பட்டாலே மனித உரிமைகள் ஒழுங்காற்றப்படுமென்னும் தனது கொள்கையை வெளியிட வைத்துள்ளது.  இதன்வழி ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய சிறீலங்காவின் பொறுப்புத் தான் இந்தியப் பிரதிநிதியின் பேச்சில் முதன்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களைச் சமத்துவமும் கண்ணியமுமாக வாழ வைத்தல் என்பதை முதலிலும்  சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பேண உதவுதல் என்பதை அடுத்தும் எடுத்துக்கூறி இவ்இருதளப் பொறுப்புக்கள் தங்களுக்கு உண்டெனவே இந்தியப்பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் விளக்கம் அளித்தார்.

ஆனால் சிறீலங்கா தனக்களிக்கப்பட்ட, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்பதே, இந்தியா சிறீலங்காவின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான உதவிக்கான முன்நிபந்தனை என்பதை கவனத்தில் கொள்ளாது, இந்தியா வெறுமனே தன்னை ஆதரிப்பதாக உலகிற்குக் காட்ட முற்படுவதை ஜயநாத் கொலம்பகேயின் கூற்றுக்கள் நிரூபிக்கின்றன. சிறீலங்காவின் இந்த இலங்கைத்தீவின் இன்றைய அரசு என்ற பதவி வழி அதிகாரப்போக்கை ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலையை மாற்றி, ஈழத்தமிழர்களின் இலங்கைத்தீவில் உள்ள சமவலுத்தன்மையை உலகறிய வைப்பதாயின், ஈழத்தமிழர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் தங்களுக்கு தாங்கள் ஆசியாவின் தொன்மையும் தொடர்ச்சியுமான குடிகள் என்ற வகையில் அமைந்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான பண்பாட்டு வர்த்தகத் தொடர்புகளை மீள்வாசிப்புச் செய்து கட்டி எழுப்பி,  அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் கோரிக்கை அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடன் வாழ்வதற்கான அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டமே தவிர, இவர்களுக்கு இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் இந்த ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஈழத்தமிழர் இந்தியா உட்பட ஆசிய, ஆபிரிக்க மக்களுடனான தங்கள் உறவாடல்களையும், உரையாடல்களையும் வளர்க்கக் கூடிய பண்பாட்டுப் பேரவைகளை உருவாக்கல், எல்லா மக்களும் ஒருங்கிணைந்து அவரவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வளர்ச்சிகளை வேகப்பட வைக்கக் கூடிய கலைத்துவ பண்பாட்டு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். இதுவே ஈழத்தமிழர்களின் தாயகத்தின் கரையாக நீண்டு கிடக்கும் இந்துமா கடல் பிரதேசத்தையும் அமைதிப்பகுதியாக உலகில் நிலைநிறுத்த உதவும். இவை எல்லாமே ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியை இந்நாடுகளும் தங்களது கட்டமைப்புக்களுக்கு ஊறுவிளைவிக்காது என்ற நிலையில் ஏற்பதிலேயே வளமும் பலமும் பெறும்.

இந்தப் பெரும் தாயகக் கடமையை இன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ள ஈழத்தமிழினத்தின் உலகப் பரம்பலாக உள்ள புலம்பதிந்த தமிழர்கள், இதனை எதிர்த்து தீர்மானத்தை உறுதியாகச் செயற்பட வைக்க வேண்டிய புலம் பதிந்த தமிழர்களோ, தீர்மானம் தமக்கு முழுஅளவில் சாதகமில்லையென விமர்சித்துக் காலத்தை வீணடிக்கின்றனர். இதனை விடுத்து எந்த நாடாயினும் தனது சந்தை இராணுவ நலன்களின் பின்னணியிலேயே எந்தப் பிரச்சினையையும் அணுகும் என்னும் நடைமுறைத் தன்மையை உணர்ந்து, இந்தச் சூழலுள் எமக்கான ஆதரவாக அவர்களை எவ்வாறு செயற்பட வைப்பது என்ற தந்திரோபாய அணுகுமுறைகளை புலம்பதிந்த தமிழர்கள் அந்த அந்த நாட்டுச் சட்டங்கள் ஒழுங்குகள் முறைமைகளுக்குள் எடுக்க வேண்டும்.

இவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் தாங்கள் தங்களுக்குத் தன்னாட்சி உரிமையுண்டு என்றாலே மற்றவர்களும் அதுகுறித்துச் சிந்திப்பர். எனவே ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் சிறீலங்காவிடம் மண்டியிட்டு உரிமை கோரும் அரசியலை விடுத்து, உலகத்திடம் வெளியக தன்னாட்சி உரிமை தங்களுக்கு இருக்கும் இயல்புநிலையை விளக்கி அந்த தன்னாட்சி உரிமையின் உள்ளகத் தன்னாட்சியை சிறீலங்கா மறுத்து அதனை உலகநாடுகளும் அமைப்புக்களும் பெற்றுத்தர இயலாதநிலையில், வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கக் கூடிய அனைத்துலக சட்டங்கள், ஒழுங்குகளின் வழி தங்களுடைய சனநாயக உரிமையை நல்லாட்சியை வளர்ச்சியை ஏற்படுத்த உதவக் கோரும் ஒன்றுபட்ட முயற்சிகளை காலதாமதமின்றி வேகப்படுத்த வேண்டும். இதுவே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளவும் நிலைபெறுவதற்கான ஒரே வழியாக இன்று உள்ளது.

சூ.யோ. பற்றிமாகரன்:

BA (Political Science), Special Dip. (Politics & Economics), BSc (Politics), MA (Politics of Democracy).

Exit mobile version