Home ஆய்வுகள் தேசிய பாதுகாப்பு மீதான அதீத அக்கறையும், போலியான தேசப் பற்றும் – பி.மாணிக்கவாசகம்

தேசிய பாதுகாப்பு மீதான அதீத அக்கறையும், போலியான தேசப் பற்றும் – பி.மாணிக்கவாசகம்

258 Views

பயங்கரவாதச் சட்டம் எங்கேயும் பாயும். எப்படியெல்லாமோ அதனைப் பயன்படுத்தலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களை இந்தச் சட்டத்தைக் கொண்டு இயலுமான வரையில் விருப்பப்படி ஆட்டிப்படைக்கலாம். இது தான் சிறீலங்கா என்ற இலங்கையின் இன்றைய நிலைமை. யாழ். நகர மேயர் – அந்தப் பெரு நகரின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த அரசியல் யதார்த்தத்தை சட்டெனப் புரிய வைத்திருக்கின்றது.

 

 

 

 

ஒரு நகர முதல்வர் என்பது சாதாரண பதவியல்ல. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதி – மக்கள் தலைவன் ஒருவருடைய முக்கியமான பதவி அது.

ஆனால், அந்தப் பதவியில் உள்ள ஒருவரை சாதாரண குற்றவாளியைப் போல பொலிசார், கேட்டு கேள்வியின்றி விசாரணைக்கு உட்படுத்தலாம். நாட்டின் மிக மோசமான, கொடூரச்  சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கலாம். துருவித் துருவி விசாரணை செய்யலாம் என்ற தான்தோன்றித் தனமான சட்டவாட்சி நிலைமையின் கீழ்தான் தமிழ் மக்கள் இன்று வாழ்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் இதனை நடைமுறையில் அப்பட்டமாகக் காட்டி இருக்கின்றது.

தமிழர்களின் கலாசாரத் தலைநகராகிய யாழ். நகரைச் சுத்தமாக – புனிதமாக வைத்திருக்க வேண்டும். ஒரு நடைமுறை ஒழுங்கின் கீழ், அங்கு மக்கள் ஒழுக வேண்டும் – நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, யாழ். முதல்வர் மணிவண்ணன் எடுத்திருந்த ஒரு நடவடிக்கையை பொலிசார் பயங்கரவாதச் செயற்பாடாகக் காட்டி இருக்கின்றார்கள். அந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற அபாய அறிவித்தலைச் செய்திருந்தார்கள்.

யாழ். நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சில விதிமுறைகளை, நடைமுறை ஒழுங்கு விதிகளை அறிவித்து, அதனை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டம் விதிக்கப்படும். தண்டிக்கப்படுவார்கள் என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக மேயர் மணிவண்ணன் நடவடிக்கை எடுத்திருந்தார். அந்த விதி முறைகளைக் கண்காணித்துச் செயற்படுத்துவதற்காக யாழ். மாநகர சபைக்கென தனியான சில காவலர்களை நியமித்து, அவர்களுக்கென ஒரு சீருடையையும் தெரிவு செய்து அவர் வழங்கி இருந்தார்.

இந்தச் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. இதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கை ஒன்றை முதல்வர் மேற்கொண்டிருக்கின்றார். விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்துள்ளார் என குற்றம் சுமத்திய பொலிசார் அவரிடம் விரிவானதொரு வாக்குமூலத்தைப் பெற்றார்கள். உடனடியாகவே அங்கு பிரசன்னமாகிய பயங்கரவாதப் புலனாய்வு பொலிசார் அவரை யாழ்ப்பாணத்தில் கைது செய்து வவுனியாவுக்குக் கொண்டு சென்று தடுத்து வைத்தார்கள்.

யாழ். நகர முதல்வர் என்ற ரீதியில் அந்த நகரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது தனது கடமை என்றும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைக்காகத் தன்னைக் கைது செய்ய முடியாது என்று மணிவண்ணன் வாதாடினார். தனக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்டுத்திச் செயற்பட்டதற்காகத் தன் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாய்ச்ச முடியாது என்பதை, ஒரு சட்டத்தரணி என்ற நிலையில் பொலிசாருக்கு அவர் இடித்துரைத்தார்.

இதனையடுத்து, சாதாரண சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்திய பொலிசார், அவரை யாழ். மாவட்ட நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தினார்கள்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடுநர் மற்றும் எதிர்த்தரப்பினர் ஆகிய இரண்டு பக்க சாட்சியங்களையும் சட்ட விவாதங்களையும் செவிமடுத்த நீதிபதி மணிவண்ணனை சரீரப் பிணையின் கீழ் செல்ல அனுமதித்து, அவருக்கு எதிரான வழக்கை ஜுன் மாதத்திற்குத் திகதியிட்டு ஒத்தி வைத்தார்.

உட்கட்சிப் பிரச்சினைகள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நிலைமைகளுக்கு மத்தியில் நகர முதல்வர்  பதவி பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு வந்த மணிவண்ணனின், யாழ். நகரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையைக்  காட்டிக் கொடுத்ததன் மூலம்தான், பொலிசார் அவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார்களோ என்று சிலர் சந்தேகிக்கின்றார்கள்.

ஒரு மாநகர சபையின் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான பாதுகாவலர்  நியமனமும், அதற்கான சீருடையும் பற்றி நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், தேசிய பாதுகாப்புக்குப் பெரிய அளவில் ஏதோ குந்தகம் விளைவிக்கப்பட்டு விட்டது போன்ற பதட்டமான உணர்வு நிலையில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

யாழ். முதல்வர் யாழ் மாநகரசபைக்கென காவல்படையொன்றை உருவாக்கி அதற்கு விடுதலைப்புலிகளின் காவல்துறையினருடையதை ஒத்த சீருடை வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் குறிப்பிட்டிருந்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்றால், சிறீலங்கா பொலிசாரின் கடமையை எவ்வாறு யாழ். முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும், என்று அவர் காட்டமாக அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேவேளை, யாழ் முதல்வர் தனது பதவிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்கு உட்பட்டு, கொழும்பு மாநகரசபையில் உள்ளது போன்ற சீடையைக் கொண்ட தனியான காவலர்களையே நியமித்திருந்தார். யாழ். நகர எல்லைக்குள் குப்பைகளைப் போடுபவர்களுக்கும் வெற்றிலை எச்சிலைத் துப்புபவர்களுக்கும் எதிராக தண்டம் விதிக்கின்ற தண்டனை நடைமுறையைக் கொண்ட ஒரு செயற்பாட்டையே அவர் முன்னெடுத்திருந்தார்.

இதனை விடுதலைப்புலிகளின் காவல்துறையைப் போன்ற படையணி உருவாக்கப்பட்டு, அதற்கென அவர்களுடைய சீருடையை ஒத்த சீருடை வழங்கப்பட்டிருப்பதாகவும், பொலிசார் செய்ய வேண்டிய கடமைகளை இந்தப் படையணியே செய்யத் தொடங்கி விட்டதாகவும் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடயத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

யாழ். முதல்வர் மணிவண்ணன் சாதாரண ஒரு செயற்பாட்டையே முன்னெடுத்திருந்தார் என்றும், அதற்காக பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தி இருந்தார்கள்.

கொழும்பு மாநகரசபையில் நடைமுறையில் உள்ளது போன்றதொரு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும்போது, அதனை எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கையாகக் கூற முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், அது ஜனநாயக நடைமுறைகளை மீறிய நடவடிக்கை எனவும் குறிப்பிட்டு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர்  பொலிஸ் அதிகாரங்களை யாழ். முதல்வர் கையில் எடுக்க முடியாது. அதற்கு இடமளிக்க முடியாது என காட்டமாகத் தெரிவித்தனர்.

நாட்டின் பிரபலமான ஒரு தொலைக்காட்சியே முதலில் இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்ததுடன், பொலிசாரின் கடமைகளை யாழ். மாநகரசபையே செய்கின்றதா என்றும், இந்த நாட்டின் சட்டம் எங்கே என்றும் அந்த ஊடகமே கேள்வி எழுப்பியிருந்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எனவே சட்டம் சரியாகச் செயற்பட்டாக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

நாட்டில் சட்டம் சரியாகவே செயற்படுகின்றது என்பதைக் காட்டுவதற்காகவே யாழ். முதல்வர் பயங்கரவாதத் தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தொனி செய்யும் வகையில் அந்த அமைச்சரின் கருத்து அமைந்திருந்தது.

அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரினால் ஆராய்ந்து படிப்படியான நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் மாத்திரமே தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற தோரணையிலேயே பொலிசாரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

தேசிய பாதுகாப்பு குறித்து அதீத பற்று கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கின்ற இதே பிரதிதிகள்தான் முன்னைய அரசாங்கத்திலும், நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் பற்றி பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான தகவல்களை முன்கூட்டியே அயல்நாடாகிய இந்தியா அறியத் தந்திருந்தது. ஆனால், உரிய பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்ய அப்போதைய அரசு தவறிவிட்டது. மிக மோசமான குண்டுத் தாக்குதல்கள் இரண்டு வேறு வேறு மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் ஆலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலும், உல்லாச விடுதிகளில் அப்பாவிகளான விருந்தினர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோதும், நித்திரையில் இருந்து எழுவதற்குத் தாமதமாகிய நிலையில் இருந்தவர்களும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.

அத்தகைய கொடூர சம்பவத்தைத் தடுக்க முடியாமல் கையாலாகாத நிலையில் இருந்த அதே மக்கள் பிரதிநிதிகள்தான் இப்போது தேசிய பாதுகாப்பின் மீது அளவற்ற பாசமும் பற்றும் கொண்டவர்களாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

குறிப்பாக பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்காமல் தடுப்பதில் தங்களைவிட அக்கறையுள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என்ற தோரணையில் பேரின அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் உரிமைகளுக்காக உயிர்களைத் துச்சமென மதித்துப் போராடியவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அளவுக்கு மிஞ்சிய ஆயுத பலத்தையும் ஆட்பலத்தையும் பயன்படுத்தி மிகைபட்ட இராணுவ சக்தியைப் பிரயோகித்து முள்ளிவாய்க்காலில் அபயம் தேடி இருந்த அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள்.

கோரமான முறையில் யுத்தத்திற்கு முடிவுகண்டு வெற்றிவாகை சூடியபோதிலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அக்கறையற்றவர்களாக இருக்கின்ற அரசியல்வாதிகளே இனவாதப் போக்கில் புலிப்பயங்கரவாதம் மீண்டும் உயிர்பெற்றுவிடும் என்று போலியான அச்சத்தை வெளியிட்டு தமது ‘சிங்கள பௌத்த தேசப்பற்றை’ வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இந்த போலி தேசியப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலேயே மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கூறி யாழ் முதல்வர் மணிவண்ணனைக் கைது செய்திருந்தார்கள்.

ஆனால் நீதிபதியின் முன்னிலையில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினருடையதைப் போன்ற சீருடையை அணிந்திருந்து பொலிசாரின் கடமைகளைச் செய்ய முற்பட்டிருந்தனர் என்றும் தமது குற்றச்சாட்டுக்கு ஆதராமாகத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் காவல்துறையினருடைய சின்னத்தை அவர்கள் அணிந்திருக்கவில்லை என நீதிபதி எழுப்பியிருந்து கேள்வி ஒன்றுக்கு அவர்கள் பதிலளிக்க நேர்ந்திருந்தது.

அது மட்டுமல்லாமல், முதல்வர் மணிவண்ணன் நியமித்திருந்த காவலர்களுடைய சீருடை கொழும்பு மாநகர காவலர்களின் சீருடையை ஒத்திருந்ததுடன், யாழ் மாநகரசபையின் சின்னத்தையே அந்த சீருடைகளில் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் சட்டத்தரணிகளின் ஊடாக நிதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனையடுத்தே முதல்வர் மணிவண்ணனை பிணையில் செல்வதற்கு நீதிபதி அனுமதித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய அந்த காவலர்கள் ஒரு குண்டாந்தடிகூட இல்லாத நிராயுதபாணிகளாகவும், முதல்வரின் உத்தரவை மீறிச்செயற்படுபவர்களைக் கண்காணித்து, அவர்களிடம் இருந்து தண்டப்பணத்தை அறிவிடுவதற்காகவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

மாநகரசபை எல்லைகளிலும் மற்றும் உள்ளூராட்சி சபைகளுடைய எல்லைகளிலும் நிறுத்தப்படுகின்ற வாகனங்கள் வரிசெலுத்த வேண்டும் என்ற நடைமுறை நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கடமையை எந்தவோர் இடத்திலும் பொலிசார் செய்வதில்லை. அது அவர்களுக்கென குறித்தொதுக்கப்பட்ட கடமையாகவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் யாழ். மாநகர எல்லைக்குள் வீதிகளில் குப்பைகளைப் போடுபவர்களையும் வெற்றிலை எச்சிலைத் துப்பி அசுத்தப்படுத்துபவர்களையும் கண்டறிந்து தடுப்பதற்கும் கண்காணித்து தண்டப்பணம் அறவிடுவதற்குமாகவே மணிவண்ணனினால் விரல் விட்டு எண்ணக் கூடிய காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் அரச தரப்பிலும் எதிர்க்கட்சித் தரப்பிலும் கூறப்பட்டதைப் போன்று விடுதலைப்புலிகளின் காவல்துறையினரது சீருடையை அணிந்த படையணி உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு அப்பட்டமான பொய்களைக் கூறியும், மிகைப்படுத்தப்பட்ட கதைகளைக் கூறியும் செயற்படுகின்ற போலித் தேசிய நடவடிக்கைகளை பேரினவாதிகளும், பொலிசாரும், அரசினரும் கைவிட வேண்டும். இல்லையேல் மிக மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற அவச்சொல்லுக்கும், அவமானத்திற்குமே அவர்கள் ஆளாக நேரிடும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version