Tamil News
Home செய்திகள் இனவாத சிங்கள அமைப்புகளை தடை செய்யாதது ஏற்க முடியாது – முஜுபூர் ரஹுமான் 

இனவாத சிங்கள அமைப்புகளை தடை செய்யாதது ஏற்க முடியாது – முஜுபூர் ரஹுமான் 

இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11  முஸ்லீம்களின் அமைப்புகளுக்கு தடை விதிக்க இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள  பரிந்துரைக்கு அமைய முஸ்லீம் அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட போதும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புகளை தடை செய்யாது விடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான்  தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இந்த தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாக தடைசெய்யப்பட்டுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைப்பு உள்ளிட்ட 6 தவ்ஹீத் அமைப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு துறைக்கு சஹரான் ஹஷிமின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகளில் தமது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள், சமூக பணிகள் உள்ளிட்டவற்றை, ஆதாரங்களுடன் தாம் முன்வைத்திருந்ததாகவும்  அது தெரிவித்துள்ளது.

இவ்வாறு தமது முழுமையான கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், சட்ட மா அதிபர் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளமை, அடிப்படையற்றது என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு  நாள் அன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகளில்  குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.   இதனால் 260க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு முஸ்லீம் பயங்கரவாத அமைப்புக்களே காரணம் என இலங்கை அரச தரப்பில்  குற்றம்சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version