கொரோனா தொற்று : 50ஆயிரம் பேர் இறப்பார்கள் என்ற செய்தி போலியானது- WHO

இந்தியாவில் கொரோனா தொற்று என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இது வரையில்  1,28,01,785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 1,66,177 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுமக்கள் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள, அரசுடன் கைகோத்து பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் கொரோனா தொற்றினால் 50 ஆயிரம் பேர் வரையில் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக  செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார  நிறுவனம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஏப்ரல் 15ம் திகதிக்குள் இந்தியாவில் கொரோனாவால் 50ஆயிரம் பேர் இறப்பார்கள் என்ற செய்தி போலியானது. இது போன்ற எந்த எச்சரிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.