Tamil News
Home செய்திகள் இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாக்குமாறு ஐ.நாவிடம்  கோரிக்கை

இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாக்குமாறு ஐ.நாவிடம்  கோரிக்கை

இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐ.நாவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுக்கு இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதம்   ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக சட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வனப் பகுதியில் எவ்விதமான அழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டங்களின் ஊடாக மட்டுமன்றி சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version