நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன்

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

பரதன் அண்ணா 83ஆம் ஆண்டு தன்னை முழுநேர உறுப்பினராக புலிகளுடன் இணைத்துக் கொண்டார். 1987இல் தான் எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1074564 4491707990324 759261644 o நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! - நவீனன்

ஆரம்பத்தில் திலீபன் அண்ணாவுடன் நிதர்சனம் முகாமிற்கு செல்வேன். அப்போது பரதன் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் செல்வதோ நடுச்சாமம். அப்போது அவர் அடுத்த நாள் ஒலிபரப்பிற்கான வேலைகளை செய்து கொண்டிருப்பார். பரதன் அண்ணாவின் முகாமிற்கு செல்வதென்றால் எமக்கு பெரும் ஆசை. காரணம் அந்த சாமத்திலும் சுடச்சுடப் பாணும் ஜாம் அல்லது பட்டரும் இருக்கும். ஆனால் அவருக்கு வெறும் தேநீர் மாத்திரம் போதும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எமது போராளிகள் இராப் பகலாக கண் விழித்து தங்கள் வேலைகளை திறம்பட செய்தவர்கள். பரதன் அண்ணாவைப் பொறுத்தவரை வளமில்லாத காலத்திலும் வளமான படைப்புக்களை தான் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமான பிடிவாதத்தில் இருந்தார்.

தன்னை விளம்பரப்படுத்தாத ஒரு மனிதர். தலைவரின் கனவை கிட்டண்ணாவுடன் சேர்ந்து நனவாக்கியவர். நேர்த்தியென்ற பேச்சு வருகின்ற போது கிட்டண்ணாவையே உதாரணமாகக் காட்டுவார் பரதன் அண்ணா. காரணம் ஒருமுறை அவர்களது முகாமிற்கு காலையிலேயே கிட்டண்ணா போயிருக்கின்றார். முகாம் துப்புரவாக இல்லை. ஒருவர் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவரே முகாமை சுத்தம் செய்யத் தொடங்கி விட்டார். அயர்ந்த தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பவுமில்லை. இரவிரவாக வேலை செய்து களைத்துத் தூங்குகின்றனர் என்று அவருக்குத் தெரியும். ஆயினும் சத்தம்கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அசடுவழிய நின்றனர். இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது என்று பரதன் அண்ணா அடிக்கடி கூறுவார்.

Capture 3 நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! - நவீனன்

இந்திய இராணுவத்துடனான போரின் போது ஒலி, ஒளி நாடாக்களை பத்திரப்படுத்துவது மிகவும் சவாலான விடயம். ஈரத்தன்மை புகாதவாறு புதைக்க வேண்டும். அதனை திறம்படச் செய்து முடித்தார் பரதன் அண்ணா.

இந்திய இராணுவத்தின் முதற்குறியே நிதர்சனமாக இருந்தது. காரணம் நிதர்சனத்தின் செய்திகள் ஒளிப்படங்கள் எல்லாம்  இந்திய வல்லரசிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கு மூலமாக இருந்தவர் பரதன் அண்ணா.

88 காலப்பகுதியில் கொழும்பில் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருக்கும் வெவ்வேறு வேலைகள். அவர் அப்பொழுது முதலாவது ஒலிநாடா உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அது ‘புயல்கால ராகங்கள்’ என்ற பெயரில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பால் தரமான ஒலிநாடாவாக வெளியிடப்பட்டது. அதில் பாடிய மனோ, வாணி ஜெயராம் ஆகியோர் பாடி முடித்த பின்னர் அழுதுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது ஆரம்ப முயற்சி. இதற்கான பாடல் வரிகளை காசியண்ணா, புதுவையண்ணா, இன்குலாப் ஆகியோர் எழுதியிருந்தனர்.

அக்காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக இருந்த பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தைக் காலம். ஒலி – ஒளிபரப்பு சாதனங்களை எல்லாம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகவும் திட்டமிடப்பட்ட நேரமாகவும் காணப்பட்டது. அதற்கு முன் தலைவரை சந்திக்க வேண்டும். வன்னிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பரதன் அண்ணாவிற்கு அதுவொரு புது அனுபவம். நானே அடிக்கடி சென்று வருவேன்.

சில நேரங்களில் தலைவரை சந்திக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கள் வவுனியாவில் கிடாய்ச்சூரி என்னுமிடத்தில் ஒரு ஆதரவாளர் வீட்டில் நின்றிருந்தோம். ஆதரவாளரின் மகன் வந்து உங்களுக்கு பால் பிளேன் ரீயோ, சும்மா பிளேன் ரீயோ வேணும்? என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு சும்மா பிளேன் ரீ என்று சொல்லி விட்டு அவர் பிளேன் ரீ கொண்டு வந்த பின் அவரை இருத்தி சரியாக சொல்வது எப்படியென பரதன் அண்ணா சொல்லிக் காட்டினார். பின்பு அவர் புத்தகத்துடன் வந்து பரதன் அண்ணாவிடம் பாடம் கற்றது வேறு விடயம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு விடயத்தை பகிடியாக சிரித்து விட்டு கடந்து செல்பவரல்ல அவர். சரியானதை சொல்லிக் கொடுத்து நேர்ப்படுத்தும் சீரிய பண்பு கொண்டவர் தான் பரதன் அண்ணா.

தலைவரை சந்திக்க வந்த பின்பு இலத்திரனியல் கொள்வனவிற்காக நித்தியண்ணாவுடன் சிங்கப்பூர் சென்று அங்கு தான் பெரிய கொள்வனவை முடித்து வந்தார். லொறி நிறைய இலத்திரனியல் சாதனங்கள். அந்த நேரமே கோடிக்கணக்கான பெறுமதி கொண்டவை. கட்டுநாயக்காவிலிருந்து மணலாறு செல்லும் வரை STF இன் பாதுகாப்பிலேயே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பின்னாளில் இதை வைத்து தான் தர்மேந்திரா கலைக்கூடம் உருவானது.

1990இல் இந்திய இராணுவம் வெளியேறி எமது கட்டுப்பாட்டில் எமது பிரதேசம் வந்த பின், இருவரும் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். ஆரம்பமே பெரும் சவாலாகத்தானிருந்தது. புதிதாக எல்லாவற்றையும் நிறுவ வேண்டும். ஒரு ஒழுங்கான வடிவமைப்பின் கீழ் நேர்த்தியாக செய்து முடித்ததில் அவரின் சகலதுறை ஆளுமையும் புலப்பட்டது.

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலிச் சேவைகள் 90இல் மிகுந்த தரத்துடன் தொடங்கப்பட்டது. சொற்ப ஆட்களுடன் ஆரம்பித்த இச் சேவை மிகப்பெரும் விருட்சமாக பரிணமித்தது. பரதன் அண்ணாவின் நிர்வாகத் திறமையால் பலாலி வீதியில் பெரிய அலுவலகம் உருவாக்கப்பட்டு அங்கு அமலன் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கேயே ஒலி – ஒளிப் பதிவுகள் செய்யப்பட்டன. ஒலி – ஒளிபரப்பின் தரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பரதன் அண்ணா. எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்காது.

நிலக்கீழ் ஒலி – ஒளிப்பதிவுக்கூடம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கான வரைபடம் பரதன் அண்ணாவால் வரையப்பட்டு, அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலிருந்த மரங்கள் வெட்டப்படாமல் அதனைச் சுற்றியே நிலம் அகழப்பட்டு, நிலக்கீழ் அறை உருவனது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் பலமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பாதுகாப்பனதாகவும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும். படப்பிடிப்பு போராளி தர்மேந்திரா நினைவாக தர்மேந்திரா கலையகம் உருவானது. குறைந்த செலவில் தரமானதாக உருவானதில் தலைவராலும் பாராட்டப்பட்டோம்.

அடுத்த வாரமும் தொடரும்….