Tamil News
Home உலகச் செய்திகள் ரோஹிங்கியா அகதிகள் முகாம் தீ விபத்து- 400 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

ரோஹிங்கியா அகதிகள் முகாம் தீ விபத்து- 400 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்  400 பேர் காணாமல் போயுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசமான நிலையில் சுமார் 45,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 34 அகதி முகாம்களில் ஒன்றில் திங்கட்கிழமை பாரிய தீவிபத்து ஏற்பட்டது.  இதில் சுமார் 2,000 வரையான முகாம் குடியிருப்புக்கள் தீயில் முற்றான எரிந்து நாசமாகின.

இந்தத் தீவிபத்தில், 15 பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர் மேலும் 400-க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பெரும் பேரழிவு என பங்களாதேஷில் இருந்து மெய்நிகர் வழியில் நேற்று ஜெனீவா கூட்டத்தொடரில் கருத்து வெளியிட்ட அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகத்தின் பிரதிநிதி ஜோகன்னஸ் வான் டெர் கிளாவ் கூறியுள்ளார்.

பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களில் மியான்மர் இனப்படுகொலைகளில் இருந்து தப்பிப் பிழைத்த சுமார் 10 இலட்சம் ரோஹிங்கியர்கள் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version