ஜெனீவா தீர்மானம் – இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா முயற்சி

ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு பிரித்தானியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் தரிக் அகமட் அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் ஜெனீவா விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஸ் வி சிறிக்லா ஆகியவர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பிராந்திய உறுதித்தன்மை, இந்திய மற்றும் பிரித்தானிய உறவு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் ஜெனீவா விவகாரங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா வழமை போல தமிழ் மக்களுக்கு எதிராக இந்த வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்க்க முற்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தி வருகின்றது.

அதேசமயம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சா தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.