Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ‘மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி

‘மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி

ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர்.  இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடைமுறைப்படுத்தியது.

தமிழீழத் தேசியப் போராட்டம் என்பது பயங்கரவாதமல்ல – பிரிவினைவாதமுமல்ல.  22.05.1972 முதல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், தங்களின் பிரிக்கப்பட முடியாத பிறப்பு உரிமைகளான தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில்18.05. 2009 வரை  37 ஆண்டுகள் இலங்கைத் தீவில் அரசுக்குள் அரசு என்ற அடிப்படையில் தங்களுக்கான நடைமுறை அரசை அமைத்து, தங்களுக்கு இருந்து வந்த சிறீலங்காவின் இனங்காணக் கூடிய அச்சத்தை எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், வாழ்வையும், உடமைகளையும் தங்களின் சொந்த மண்ணில் பாதுகாத்த உலகின் தொன்மையும், தொடர்ச்சியுமான குடிகளான ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம்.

இந்த மக்கள் போராட்டம் உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் நிலைக்கு தன்னை வடிவமைத்த நேரத்திலேயே அதனை அனுமதித்தால் உலகின் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் விடுதலை முயற்சிகள் வேக எழுச்சி பெறும் என ஒடுக்கப்பட்டு வரும் உலக மக்கள் அனைவரதும் விடுதலைக்கு மேலான மரண அடியாகவே சிறீலங்காவின் பாசிச வெற்றியை உலக வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் ஊக்குவித்தன. எந்த வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் சிறீலங்காவுக்கு ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தை மௌனிக்க வைக்க உதவினவோ அவையே இன்றும், ஈழத்தமிழர்களின் நீதிக்கான அனைத்துலக மன்றத்தின் குரலை மௌனிக்கச் செய்வதன் மூலம் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் மேல் நடாத்தப்பெற்ற இனஅழிப்புக்கான உண்மைகள் உலகின் முன் தெளிவாக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளாதவாறு நீதியைக் கருக்கலைப்புச் செய்கின்றன.

மேலும் இம்முறை அனைத்துலக மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைமையே சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்த நிலையிலும், அந்த மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையில் உள்ள அனைத்துலக நீதியை நடைமுறைப்படுத்தக் கூடிய சட்டவலுவை உண்டாக்கும் சொல்லாட்சிகளை அகற்றி அல்லது மென்மைப்படுத்தி, வாக்கெடுப்புக்கு முன்வைக்கும் தீர்மானங்களை எழுதிக்கொண்டதன் மூலம், அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் மனச்சாட்சியுள்ள அலுவலர்களின் நேர்மையான உழைப்பின் மூலமான ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரலையும் மௌனிக்கச் செய்துள்ளன.

இந்நிலையில் இதனால் ஊக்கமும், வேகமும் பெறும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சி என்னும் மக்களாட்சியின் வேரையே பிடுங்கி எறியும் தனது செயலை வேகப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மை. இதனையே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் சனநாயக அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை ஆறு ஏழு காவல் நிலையங்களைச் சேர்ந்த நகரகாவலர்களின் கூட்டான விசாரணைக்கு உட்படுத்தி அச்சப்படுத்தும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையக அமர்வுகள் நடைபெறும் பொழுதே உலக முறைமைகளுக்கோ, சட்டங்களுக்கோ எவ்வித அச்சமுமின்றிச் செய்வதன் மூலம் சிறீலங்கா உறுதிப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு சிறீலங்காவின் நடைமுறை அரசியல் எதார்த்தம் உள்ள நிலையில் அவர்கள் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நிலைமாற்று நீதியையோ, வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோருடைய கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான நீதியையோ, புனர்வாழ்வையோ அளிப்பதற்கான கால அவகாசம் என்பது மக்கள் போராட்டங்களை களைக்கச் செய்து மௌனிக்க வைக்கும் உத்தியாகவே உள்ளது.

இவ்விடத்தில் உலக நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் ஈழத்தமிழர்களின் இனஅழிப்பை விளக்கி அவர்களுக்கான நீதியை கிடைக்க வைக்க முயற்சிக்கிறோம் என்னும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களும் கூட தாங்கள் இந்நாடுகளின் ஊதுகுழல்களாக நின்றால் தான் தமக்கும் இந்நாடுகளுக்கும் இடையிலான உறவாடல் இருக்கும் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர். இணைந்து பணியாற்றி இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் சகோதரத்துவ ஈழத்தமிழ் அமைப்புக்களுடனும் பகைமையும், வெறுப்பும் கொண்டு இணைந்து பணிசெய்ய மறுக்கின்றனர். இதுவே 12 ஆண்டுகளாகச் சிறீலங்காவுக்கு எதிராக உலக ஆதரவை நிலைப்படுத்துவதில் உள்ள ஈழத்தமிழினம் சார்ந்த சிக்கலாக உள்ளது.

ஈழத்தமிழர் உரிமைகளைப் பெறுவது என்பது அரசியல் அல்ல. விட்டுக் கொடுப்பு இல்லாத உரிமைப்போராட்டம். மௌனிக்க வைத்தல் என்னும் உத்திக்கு எதிரான சனநாயகப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டிய போராட்டம். ஈழத்தமிழர்களின் உரிமைகள் இனஅழிப்புக்களால், இனத்துடைப்புக்களால், பண்பாட்டு இனஅழிப்புக்களால் இன்றும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு அவர்களின் இனத்துவ, மொழித்துவ, தாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி, அதனை மீட்டெடுக்கும் போரட்டம். நாமும் இந்தப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் எனக் கருதும் ஒவ்வொரு வரும் விளைவுகளை விரைவாகப் பெற சகோதரத்துவத்துடன் இணைந்து ஒரே அணியில் செயற்பட வேண்டிய போராட்டம். இதற்கான நடைமுறைகளிலேயே மௌனிக்க வைத்தல் என்ற உத்தியை உடைத்து, ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளநிலைப்படுத்தப்படல் என்பதன் வேகம் தங்கியுள்ளது.

Exit mobile version