Home ஆய்வுகள் ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல்...

ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மிகவும் சின்னம் சிறிய சிறீலங்கா அரசு உலக நாடுகளை ஒரு அணியில் இணைத்து தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியிருந்தது. இந்த அணியில் எதிரும் புதிருமாக இருப்பதாக நாம் கருதும் இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன, அமெரிக்காவும் ரஸ்யாவும் இருந்தன.

ஏன் தற்போதைய எதிரிகள் என நாம் கருதும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் யப்பானும் இருந்தன. சிறீலங்காவின் இந்த வெற்றியானது அதன் இராஜதந்திரத்திர அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும்.

தனது அணுகுமுறையில் சிறீலங்கா அரசு மேலும் முன்நகர்ந்துள்ளதையே தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பான தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிறீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்த விவாதத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள் தமது வாதங்களை முன்வைத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (26) கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. அதற்கு எதிராக 15 நாடுகளே உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைத்த தீர்மானம் என்பது யாருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட தவறியதே அதன் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது.

alaina tna ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தபோதே, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகளும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அதில் போர்க்குற்றம், தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரல் என்பன தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

அதனை உள்வாங்கி வெளிவரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு அளித்து பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பூச்சிய வரைபு தீர்மானம் என்பது சிறீலங்காவில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான அடையாளத்தையும், அங்கு தமிழ் மக்கள் மீது போர் மேற்கொள்ளப்பட்டது, அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர், அவர்களுக்கு எதிராக மனிதாபிமான குற்றங்கள் இழைக்கப்பட்டது என்ற வரலாறுகளையும் முற்றாக மறைத்துள்ளது.

அதாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் உள்வாங்காது, பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி வரையப்பட்ட வரைபாகவே இதனை நாம் பார்க்க முடியும்.

இதனை வரைந்த இணைக்குழு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்தபோதும், புலம்பெயர் அமைப்புக்களால் அந்த நாடுகள் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது, புலம்பெயர் அமைப்புக்கள், அந்த நாடுகளில் பதவிகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த தோல்வியாகும்.

இவர்கள் சந்தித்த இந்த தோல்வி என்பது எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் மக்கள் வைக்கும் நம்பிக்கையை சிதறடிக்கும் என்பது உண்மையானது. தற்போது கூட புலம்பெயர் அமைப்புக்களால் ஒழுங்கமைக்கப்படும் போராட்டங்களில் பங்குபற்றும் மக்களின் தொகையை கொண்டு நாம் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கையை கணிப்பிட்டுக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளையோ அல்லது அங்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளையோ வென்றெடுக்காது, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று தமிழ் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளதையும் போர் நிறைவடைந்து 12 வருடங்களின் பின்னர் வெளிவந்துள்ள இந்த தீர்மானம் எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது தமது இருப்பை தக்கவைப்பதகே இந்த அமைப்புக்கள் போராடுவதாக கருதப்படுகின்றது.

புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பல அமைப்புக்கள் தமது இருப்பை தக்கவைப்பதற்கான போராட்டங்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அல்ல என்ற உண்மையையும் தமிழ் மக்கள் தற்போது மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர்.

தற்போதைய தோல்வி என்பது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எமக்கு எடுத்துரைப்பாதகவே நாம் பார்க்க வேண்டும். எமது சிந்தனைகள், செயற்பாடுகள், போராட்ட வழிமுறைகள், இராஜதந்திர அணுகுமுறைகள், அதனை வழிநடத்துபவர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன கடுமையான மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப் படவேண்டும்.

 

செயற்பட முடியாத புலம்பெயர் அமைப்புக்கள், ஆளுமையற்ற தலைமைகள் தமது தவறுகளை உணர்ந்து ஆளுமையுள்ள அடுத்த சந்ததியிடம் போராட்டத்திற்கான கடமைகளை ஒப்படைத்து ஒதுங்குவதே தமிழ் இனத்திற்கு அவர்கள் ஆற்றும் மிகச் சிறந்த பணியாகும்.

ஏன் இந்த முடிவை கூறுகின்றேன் என்றால்,

பிரித்தானியா தீர்மானத்திற்கான வரைபை மேற்கொண்ட போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் என தம்மை பிரநிதித்துவப்படுத்தும் சிலர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து கனடாவில் உள்ள அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும், போராட்டங்களையும், இராஜதந்திர அணுகுமுறைகளையும் மேற்கொண்டிருந்தனர்

ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் என்றே சொற்பதமே இல்லை. நாசிகள் இனப்படுகொலையை மேற்கொண்டனர் எனக்கூறும் போது அது யூதர்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்படுகின்றது. கொசோவோ இனப்படுகொலை என்னும்போது அது சேர்பியர்கள், அல்பேனியர்களுக்கு எதிராக மேற்கொண்டதாகவே குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் தனது உரிமைகளுக்காக போராடியாதாகவோ, அவர்கள் மீது இந்த போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவோ எந்த தடயங்களும் இல்லை.

இது தமிழ் மக்களை வழிநடத்துகின்றோம் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்கள் சந்தித்த மிகப்பெரும் தோல்வியாகும். எனவே தற்போதுள்ள கேள்வி என்னவெனில், இந்த தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது?

அரசியல்வாதிகள் தவறிழைக்கும் போது பதவிவிலகுமாறு கோரிக்கை விடும் நாம் ஏன் இந்த அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தவறுகளை கண்டுகொள்வதில்லை? இவர்களின் இயலாமையால் ஒரு இனம் மிகப்பெரும் அழிவின் விழிம்பில் நிற்கின்றது. இந்த நிலையை தமது பதவிக்காகவும், கதிரைக்காகவும் தெருச்சண்டியர்களாக மாற்றம் பெற்றுவரும் அமைப்புக்கள் உணர்ந்துகொள்ளுமா?

தவறானதும், தகமையற்றதுமான அமைப்புக்களையோ, அரசியல்வாதிகளையோ அல்லது செயற்பாட்டாளர்களையோ தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் இனம் ஒருபோதும் தமது இலக்கை அடையப்போவதில்லை. அவ்வாறு அடைந்ததற்கான வரலாறும் இல்லை.

Exit mobile version