Tamil News
Home உலகச் செய்திகள் நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 317 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.  முன்னதாக, கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று, 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். டிசம்பர் மாதத்திலிருந்து இது மூன்றாவது கடத்தல் சம்பவம். இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை. அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும். கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள், இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version