Tamil News
Home செய்திகள் சிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும்...

சிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில், சிறீலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்த விவாதத்தில்,  சிறீலங்காவுக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், எனவே பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா தொடர்பான விவாதம் நேற்று முன்தினம்  ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றது. இதில் சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகள் உரையாற்றியிருந்தன. அதில் 20 நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றிய அதே வேளை 14 நாடுகள் பொறுப்புக்கூரலை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“சிறீலங்கா தொடர்பான பிரேரணையானது சிறீலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்கு போதுமான திருப்திகரமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றது. 20 நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றி இருந்தாலும் 10 நாடுகள்  தான் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.  இதே வேளை பிரித்தானியா,ஜேர்மனி,கனடா, உள்ளிட்ட நாடுகள் சிறீலங்கா தொடர்பான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

அதேபோன்று இணை அனுசரணை நாடுகளில் புதிதாக மாலாவி என்ற நாடு இணைந்து கொண்டுள்ளது. இதனால் பேரவையின் தென் பகுதிப் பிரிவு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு பார்க்கும் போது பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகின்றது.

மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன. குறிப்பாக சிறீலங்காவின் இறைமை மற்றும் நில ஒற்றுமையை அங்கீகரிப்பதாக கூரிய இந்தியா, தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை மிகவும் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இது எமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் உற்சாகமூட்டியிருக்கின்றது.” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version