Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர்  இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை  

மியான்மர்  இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை  

மியான்மர்  இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்து இராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துள்ளது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. போரட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

மியான்மர் இராணுவத்தின் இத்தாக்குதலை ஐ. நா.பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் கூறும்போது,

 ”நாங்கள்  மியான்மர்  மீது கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம். மியான்மர்  மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின் வாங்க மாட்டோம். மியான்மர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள். ஜனநாயக அரசை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்றார்.

மேலும் மியான்மர் இராணுவத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் மீது கடந்த திங்கட்கிழமை அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது.

Exit mobile version