ஈழத் தமிழர்களுக்கான தீர்வுக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் – இந்தியத் தூதுவரிடம் விக்கி

 

“பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு அவசியம். அதற்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். ஜெனிவா விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த நிலையிலிருந்து இந்தியா சிந்திக்க வேண்டும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியத் தூதுவர் கோபால் பக்லேயிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று இடம்பெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரம் இடம் பெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர்சி.வி.விக்னேஸ்வரன், ரி.சிற்பரன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய சுயாட்சிக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தவை வருமாறு:

“மாகாண சபைகளை முன்னெடுப்பதில் உள்ள நெருக்கடிகள், இதன் மூலம் அபிவிருத்திக்குள்ள தடைகள் குறித்து விளக்கினோம். தமிழ் மக்களுடைய இருப்பைக் கேள்விக்குறியாக்கும் விடயங்களே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்பதை நாம் கூறினோம். மாகாண சபைகள் செயற்படுமானால், இவற்றில் பலவற்றைச் செய்யக்கூடியதாக இருந்திருக்கும் என்பதைக் குறிப்பிட்டோம்.

பலாலி விமான நிலையம் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனைவிட பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறிப்பாக – ஓடுபாதை விஸ்த்தரிப்புச் செய்யப்பட வேண்டும். மன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

இந்தியாவில் இருக்கும் தமிழ் அகதிகள் மீளத் திரும்பினால் அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்கும் என்பதற்காக ஆக்கபூர்வமான திட்டம் ஒன்று அவசியம் என்பதையும் வலியுறுத்தினோம். இவை தொடர்பில் அக்கறை எடுப்பதாக அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

இதனைவிட ஜெனிவா விடயம் குறித்தும் பேசினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு அவசியம். அதற்காக இந்தியா குரல் கொடுக்கவேண்டும். இந்த நிலையிலிருந்து இந்தியா சிந்திக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம். அதனை தாம் கருத்தில் எடுப்பதாக இந்தியத் தூதுவர் பதிலளித்தார்” என்றார்.