Tamil News
Home செய்திகள் ராஜதந்திர சூழ்ச்சிகளினால் சந்தர்ப்பத்தை இந்தியா தவறவிடக் கூடாது – விக்னேஸ்வரன்

ராஜதந்திர சூழ்ச்சிகளினால் சந்தர்ப்பத்தை இந்தியா தவறவிடக் கூடாது – விக்னேஸ்வரன்

“இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஏமாந்து இந்த பொன்னான சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிடக் கூடாது. கொழும்பு துறைமுக விடயம் சரி, அல்லது வடக்கின் மூன்று தீவுகள் விடயத்தில் சரி இலங்கை அரசாங்கம் இந்தியா சார்பில் மேற்கொள்ளும் விட்டுக்கொடுப்புக்களோ அல்லது இணக்கப்பாடுகளோ தற்காலிகமானவையே அன்றி நிரந்தரமானவை அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்” என்று கோரியிருக்கின்றார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும்இலங்கைத் தமிழரின் வருங்காலமும் – ஒரு சர்வதேச கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் நேற்று இரவு நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:

“கடந்த 11 வருடங்களாக ,லங்கையின் வடக்குகிழக்கு தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ ஐ. நா மனித உரிமைகள் சபையை மையப்படுத்தியதாகவே இருந்துவந்துள்ளது. இதன் அர்த்தம் மனித உரிமைகள் சபையின் ஊடாக தமக்கு நீதியும் சமாதனமும் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்து செயற்பட்டார்கள் என்பது அல்ல.

இனப்படுகொலையின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றபின்னர் மிகவும் பலவீனமும் சோர்வும் அடைந்து இருந்த எமக்கு ஐ. நா மனித உரிமைகள் சபை இலகுவான தெரிவாக தென்பட்டதால் அதனை நாம் இறுக்கமாக பற்றிக்கொண்டுவிட்டோம். சர்வதேச சட்டங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், மனித உரிமைக் கோட்பாடுகள், சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல் ஆகியவற்றை சரியான முறையில் கையாண்டு சந்தர்ப்பங்களை உருவாக்கி அல்லது இருக்கும் சந்தர்ப்பங்களை முறையாக கையாண்டு மனித உரிமைகள் சபைக்கு சமாந்திரமாக வேறு வழிகளில் செல்வதற்கு நாம் பெரியளவில் ஈடுபடவில்லை .இதற்குகாரணம், முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளின் நிழல் அரசின் இராணுவ மற்றும் அரசியலில் எமது மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் 2009 வரை தங்கி இருந்தமையே. 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டி இருந்தது. வடக்கு – கிழக்கிலே நாம் சுயாதீனமாக செயற்பட முடியாதளவுக்கு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. நன்கு கட்டமைக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் எம்மத்தியில் இருக்கவில்லை. சர்வதேச அரசியலும், ராஜதந்திரமும் எமக்கும் புதிதாக இருந்தன.

இதே நிலைமைதான் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் இருந்தது. கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் புதிதாக உருவாக்கி செயற்படவேண்டி இருந்தது. நிலத்திலும், புலத்திலும் பல குழப்பங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. தமிழர் என்ற இனத்தின் நிமிர்த்தமும், தமிழ் என்ற மொழியின் நிமிர்த்தமும் நாம் உலகில் மிகவும் பலமான ஒரு சக்தியாக இருப்பதற்கான எல்லாமே எம்மிடம் இருந்தும் துரதிஷ்டவசமாக வீழ்ந்துகிடந்த எம்மை கைகொடுத்து தூக்கி நிமிர்த்தி தெம்பூட்டும் நிலையில் தமிழகமும் இருக்கவில்லை. எமது புலம்பெயர்சமூகமும் ,ருக்கவில்லை . ஆதலால், நாம் அநாதரவாக இருந்தோம் என்பதே உண்மையானது.

ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் நாம் பலவற்றைக் கற்றிருக்கின்றோம். எமது தவறுகளை உணர்ந்து கொண்டிருக்கின்றோம். உலகத்தை புரிந்து கொண்டிருக்கின்றோம். பூகோள அரசியலை புரிந்து கொண்டிருக்கின்றோம். ஐ. நா மனித உரிமைகள் சபையை புரிந்து கொண்டிருக்கின்றோம். நாம் தெளிவுபட்டு வருகின்றோம். இந்த தெளிவு நிலத்திலும் ஏற்படுகின்றது, புலத்திலும் ஏற்படுகின்றது. ஆகக்குறைந்தது செயற்பாடுகளை மையமாக வைத்தேனும் நிலத்திலும், புலத்திலும் ஒற்றுமை துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.

மனித உரிமைகள் சபைத் தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள முதலாவது தீர்மான வரைபு பெரும் ஏமாற்றத்தை எமக்கு அளித்திருக்கின்றது. இதுதொடர்பில் எனது ஏமாற்றத்தையும் கடும் அதிருப்தியையும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தேன். இந்த வரைபு காரணமாக இலங்கையின் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் நிச்சயம் அற்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதுடன் அவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பற்றிய ஒரு அச்சமும் உருவாகி வருகின்றது. இந்த வரைபு அப்படியே நிறைவேற்றப்பட்டால், தமிழ் மக்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தான ஒரு நிலைமைக்கு செல்லும். ஏற்கனவே எமக்கு எதிரான செயற்பாடுகள் கழுத்துவரை வந்துவிட்டன.

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் எதிர்காலத்தில் இடம் பெறுவதற்கான ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரைபு வலுவாக்கப்படுவதற்கு அல்லது மேலும் வலுவற்றதாக்கப்படுவதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவதற்கு ஐ. நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ. நா பொதுச்சபை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் வலியுறுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளினதும் கோரிக்கையாக இருக்கின்றது. இந்த வலியுறுத்தலை தீர்மானத்தில் கொண்டுவருவதற்கு இந்தியா முக்கிய வகிபாகத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதி மன்றத்துக்கும் கொண்டு செல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படு;த்த வேண்டும் .

தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் வடக்கு கிழக்கிலே சர்வதேச சமூகத்தினால் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுவதற்கு இந்தியா தலைமை தாங்கி செயற்படுவதானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும்; பல அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்வகையில் இலங்கையின் வடக்கின் சில கேந்திர முக்கியத்துவம்மிக்க இடங்களை சீனாவுக்கு கொடுப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்துவதற்கும் இந்தியாவின் தென் கோடியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கென உச்சபட்சமான நிரந்தரமான அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றமாகும் .அத்துடன் சர்வதேச நீதிமன்றம் மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியனவும் எமக்கு பரஸ்பரம் நன்மை கொடுப்பன .

இலங்கையின் ராஜதந்திர சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஏமாந்து இந்த பொன்னான சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிடக் கூடாது. கொழும்பு துறைமுக விடயம் சரி, அல்லது வடக்கின் மூன்று தீவுகள் விடயத்தில் சரி இலங்கை அரசாங்கம் இந்தியா சார்பில் மேற்கொள்ளும் விட்டுக்கொடுப்புக்களோ அல்லது இணக்கப்பாடுகளோ தற்காலிகமானவையே அன்றி நிரந்தரமானவை அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் மத்திய அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் பாரிய அழுத்தம்கொடுக்கும் பணியை தமிழ் நாடு செய்யவேண்டும். இதுவெறுமனே ஒரு அரசியல் வலியுறுத்தலாக அன்றி மக்கள் இயக்கத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்படவேண்டும். இன்றைய பத்திரிகைகளில் மூன்று தீவுகள் பற்றிய வுநனெநச தமக்கே தரப்பட்டுள்ளதாகவும் மூன்றாம் நபர்கள் எந்தவித குறுக்கீடுகளையும் செய்யப்படாது என்று சீனக்கம்பனியொன்று கேட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இரு பெரும் நாடுகளுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தினால் பாதிக்கப்படப்போவது இலங்கையின் வடமாகாணமக்களும் இந்தியாவின் தமிழ்நாடுமே. அதனாலத்; தான் இன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, மனித உரிமைகள் சபைக்கு சமாந்திரமாக எமக்கான நீதியையும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் பல வழிகளை திறந்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். எவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது,எவ்வாறு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஏற்பாடுசெய்வது, எவ்வாறு எமது மக்களை வலுவூட்டுவது, எவ்வாறு responsibility to protect (R2P) கோட்பாட்டை எமக்கு சாதகமாக பயன்படுத்துவது, எவ்வாறு ஆய்வு மற்றும் அறிவியலை பயன்படுத்திக் கொள்வது, எவ்வாறு “தமிழ்” என்ற அடையாளத்தையும் தமிழர் என்ற இனத்தையும் பயன்படுத்திக் கொள்வது என்றெல்லாம் நாம் பல வழிகளிலும் சிந்தித்து செயற்படுவதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.”

Exit mobile version