Home செய்திகள் பேரணி மூலமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வே விசாரணைகளுக்குக் காரணம்- எஸ்.சிவயோகநாதன்

பேரணி மூலமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வே விசாரணைகளுக்குக் காரணம்- எஸ்.சிவயோகநாதன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்த விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின் சம்மேளன இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டாதாகத் தெரிவித்து இன்றைய தினம் (23) சிவயோகநாதனிடம் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வாக்குமூலங்களும் பதிவுசெய்யப்பட்டன.

திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு  காவல்துறையினரால் இந்த வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன் பேரணி தொடர்பில் பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG 20210223 110910 பேரணி மூலமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வே விசாரணைகளுக்குக் காரணம்- எஸ்.சிவயோகநாதன்

தமிழ் பேசும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ்.சிவயோகநாதன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விசாரணையை தொடர்ந்து ஊடக சந்திப்பொன்றினையும் அவர் நடாத்தினார். அதில் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை நடாத்தியதாக இன்றைய தினம் மட்டக்களப்பு மற்றும் திருக்கோவில் காவல்துறையினரால் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பேரணி தொடர்பிலான எந்தவொரு காவல்துறை நிலையத்தாலும் நீதிமன்றத் தடையுத்தரவும் எனது கைக்குக் கிடைக்கவில்லை. நான் அவர்களிடம் கூறியிருந்தேன் நீதிமன்றத் தடையுத்தரவு வழங்காதவிடத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக எவ்வாறு என்மீது விசாரணை நடத்துவீர்கள் என்று கேட்டிருந்தேன். அதற்கு இப்படியொரு விசாரணை உள்ளது. நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதைச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதன் பிரகாரம் எனது விளக்கத்தை அவர்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான இந்தப் பேரணி சட்டத்திற்குப் புறம்பானது போலவும், இந்த நாட்டில் பாரியதொரு குற்றம் நடைபெற்றிருப்பது போலவும் கதை கட்டுவதற்காகவும். ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் முகமாவும், ஜனநாயகக் குரல்வளையை நசுக்கும் சம்பவமாகவுமே இந்த விசாரணைகளை நாங்கள் நோக்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் எமது மக்கள் நீண்டகாலமாகப் போராடுகின்ற விடயங்களுக்காகவும், இஸ்லாமிய சகோதரகள் மற்றும் மலையகத் தமிழர்களின் நியாயமான விடயங்களில் இந்த அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்த்தும் தான் நாங்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தினோம்.

அதேபோல் காலாகாலமாகத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற அநீதிகளை எதிர்த்தும், சுயநிர்ணய கோட்பாடுகளை வலியுறுத்தியும், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு நாங்கள் அனுப்பியிருக்கின்ற பரிந்துரைகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாகவுமே இந்தப் பேரணி நடாத்தப்பட்டது.

இதன் மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்த விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. எத்தனை விசாரணைகள் நடைபெற்றாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடாத்தப்பட்ட மக்கள் பேரெழுச்சி இயக்கமானது தொடர்ச்சியாக எமது மக்களுக்கான நீதியினைக் கோரும் முகமாக பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்ய இருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது பல விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு பல ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றோம். அதனடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட ஆலோசனை மையத்திற்கான தற்காலிக காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிசன் தேவாலய வளாகத்திலும் (தொலைபேசி இலக்கம் 0779661797) யாழ்ப்பாணத்தில் நல்லூர் சிவகுரு ஆதீனத்திலும் (தொலைபேசி இலக்கம் 0778568417) அமைக்கப்பட்டுள்ளன.

எனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் ஏதேனும் சட்ட நடவடிக்கைகள், வழக்குகள், காவல்துறையினரால் அச்சுறுத்தல்கள், விசாரணைகள் இருப்பின் மேற்சொன்ன விலாசத்தில் அல்லது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நிவாரணமும் பெற்றுக் கொள்ள முடியும்.

காவல்துறையினர் மூலமாக ஒரு ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்து அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டினை அரசு மேற்கொள்கின்றது. எனவே இது போன்ற செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது” என்று தெரிவித்தார்.

Exit mobile version