Tamil News
Home ஆய்வுகள் உலக சமூக நீதி நாள்

உலக சமூக நீதி நாள்

உலக சமூக நீதி நாள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல். பெப்ரவரி 20ஆம் திகதி உலக சமூக நாளையொட்டி அவரின் நேர்காணல் பிரசுரமாகின்றது.

இன்று உலக சமூக நீதி நாள். சமூக நீதி என்பது பல்வேறு பொருள்களை உள்ளடக்கிய சொல்லாகும். அது மனித உரிமையை இழந்தவர்களுக்கு மனித உரிமையை மீட்டுத் தருகிற நாளாக; வறுமையில் வாடுகிறவர்களுக்கு வறுமையிலிருந்து மீட்சி கொடுக்கிற ஒரு நாளாக; சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு சமத்துவ உரிமையைக் கொடுக்கிற நாளாக; பெண்ணடிமைத்தனம் திகழ்கிற நாளில் பெண்ணடிமைத்தனம் குறித்து சிந்திக்க வைக்கிற நாளாகத் தான் அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்ற ஒரு நாளாகும்.

கேள்வி: உலக சமூகநீதி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் தற்போதைய  உலக நாடுகளில் உள்ள மக்களிடம் சமூக நீதி எவ்வாறு உள்ளது?

பதில் : உலக மக்களின் சமூக நீதி என்பது, கடந்த முப்பது ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள  உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் என்ற கொள்கையின் காரணமாக பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. பெரும்பாலான மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை உலகத்தின் இன்றைய நிலையாக நாம் காண்கிறோம்.

கேள்வி: மக்களுக்கான சமூக நீதி தற்போது எவ்வாறு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் தமக்கான சமூக நீதியை அனுபவிக்கின்றனரா?

பதில் : பொதுவாகவே சமூக நீதி என்பது, சொல்லாக மட்டும் தான் அறிமுகமாகியிருக்கின்றதே தவிர, நடைமுறையில் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை நாம் எண்ணிப் பார்க்கின்ற போது, அதற்கு சாதகமான பதிலை நம்மால் பெற முடியவில்லை. மூன்றாம் உலக நாடுகள், இன்று இருக்கிற வளராத நாடுகள், வளர்ந்த நாடுகளால் சுரண்டப்பட்டு வருவது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உரிமை, சுதந்திரம் என்பது, பறிக்கப்பட்ட நிலையில் தான்; இனங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதை தான் இன்றைய நிலையில் நாம் காண்கிறோம். பல நாடுகளில், அந்த நாட்டில் வாழ்கிற குறிப்பிட்ட பகுதி மக்களை விலக்கி வைக்கிறதைப் பற்றி சமூகம் இன்று பேசுகிறது. விலக்கி வைத்திருப்பதையும், அந்த மக்களுக்கான உரிமைகளை, இருந்த உரிமைகளை பறிக்கிற நாளாகவும், விரும்புகிற உரிமையை தடுக்கிற போக்கையும் தான் இப்போது நாம் காண்கிறோம்.

கேள்வி: பல பத்து வருடங்குளுக்கு முன்னர் இருந்த சமூக நீதிக்கும் தற்போதைய உலக ஒழுங்கில் உள்ள சமூக நீதிக்கும் இடையில் என்ன வேறுபாடுகளை காண்கின்றீர்கள்?

பதில் : நான் ஏற்கெனவே குறிப்பிட்து தான். உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் என்ற கொள்கையில் வளரும் நாடுகளை பெருமளவில் சுரண்டுகிற போக்காக, அவர்களுக்கு தங்களுக்கு தனித்த உரிமையாய் இருந்த பலவற்றை இழக்கிற நாளாக, வளம் பொருந்திய நாடுகள் பலவீனமான நாடுகளின் அரசியலில் தலையிட்டு தங்கள் விருப்பத்திற்கும் பொருளாதாரத்திற்கும் சாதகமான சூழலை மாற்றி வைக்கிற, மாற்றி அமைக்கிற போக்கைத் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். அது எவ்வித கேள்வியும் இல்லாமல், கேள்விக்கு உட்படுத்தாமல் இருந்து வந்துள்ளது என்பது தான் நம் கருத்தாகும்.

கேள்வி: தற்போது உள்ள உலகில் சமூக நீதி என்பது மக்களுக்கு எவ்வளவு அவசியமானது என்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

 பதில் : தற்போதைய அரசியல் நிலவரமாக சிறு சிறு மாறுதல்களை நாம் காணத் தொடங்கியிருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக வலதுசாரி சிந்தனையாளர்  கையில் தான் உலகம் முழுதும், உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் அரசியல் தலைமைகள் இருந்து வந்திருக்கின்றன. ட்ரம்ப்பின் வீழ்ச்சி தொடங்கி ஒரு சிறு மாற்றத்தை அது கண்டிருக்கிறது.

அரசியல் ஒழுங்கமைவைப் பொறுத்தவரையில் நம்முடைய நம்முடைய தெற்காசிய மண்டலங்களில் இப்போதும் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உள்ள முரண்பாடு வேறு வகையான ஒரு அரசியலை எதிர்நோக்கி நிற்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் இருக்கிற தமிழ்நாடும், இலங்கையில் இருக்கிற தமிழீழமும் தங்களுக்கான உரிமையைப் பெறுவதற்கு இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

குறிப்பாக மனித உரிமை ஆணையம் கூட இருக்கிற இந்த சூழலில் இப்போது மாறிவரும் உலக ஒழுங்கமைவைக் கருத்தில் கொண்டு நமக்கு சாதகமான நகர்வுகள், தமிழீழத்திற்கு சாதகமான நகர்வுகள் இருக்கலாம் என்று நம்மால் எதிர்பார்க்க முடியும். இப்போது ஈழத் தாயகத்தில் இருந்திருக்கிற மக்கள் போராட்டங்களும், கொடூரமான அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்திருக்கிற இந்த மக்கள் போராட்டம், அது வெளிப்படுத்துகிற உணர்ச்சியலைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிற ஈழத் தமிழர்களுக்கும், இன வழித் தொடர்பு கொண்டுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஒரு உந்துதலைக் கொடுத்து அதன் வழியாக எழுகிற போராட்டங்கள், முன்னெடுக்கிற நடவடிக்கைகள், முன்னகர்வுகள் ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என நம்புகிறோம். உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம்.

Exit mobile version