Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும்.

சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும்.

இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதிவு செய்துள்ளது. அதே வேளை காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய அமைக்கப்பட்ட அலுவலகத்தின் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட சான்றாதாரங்களுடன் கூடிய புகார்களுக்குக் கூட அந்த அலுவலகமும் எவ்வித தீர்வையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு சிறீலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளின் போது யாவரும் பார்க்கச் சிறீலங்காப் படைகளிடம் சரணடைந்தவர்களையும், பின்னர் சிறீலங்காப் படைகளால் கைதாக்கப்பட்டு சரணடைந்தவர்களையும் யுத்தத்தின் விளைவால் இறந்தவர்கள் என்பதால் விசாரணைகள் மேற்கொள்ளப்படத் தேவையில்லை என உண்மைக்கு மாறான அறிவிப்பை சிறீலங்கா அரசத் தலைவரே வெளியிட்டமை உலக மனித உரிமைகள் பேணும் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சிறீலங்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் நெறிப்படுத்தல்களுக்கு முதலில் அணுசரணையாக நடப்பதாகக் கூறிக் காலஅவகாசத்தைப் பெற்றதன் பின்னர் அந்த அணுசரணையையும் சிறீலங்கா கடந்த ஆண்டில் விலத்திக் கொண்டது. கூடவே ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனிதஉரிமை வன்முறைப்படுத்தல்கள் என்பனவற்றில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் எனப் பட்டியலிடப்பட்ட படைத்தலைமைகளிடமே இன்று மக்களின் நாளாந்த நிர்வாகத்தை நடாத்தும் அமைச்சர்களையும், அமைச்சுக்களையும், கொடுத்துள்ளமை சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான சாட்சிகளை முடக்குகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. கூடவே சிறீலங்காவின் நீதிமன்றத்தால் கொலைக்குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கப்பட்டவர்களையே அரச அதிபரின் நீதிமன்றச் சுதந்திரத் தலையீட்டின் மூலம் விடுவித்து சட்டத்தின் ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிப்படுத்தி, நிலைமாற்று நீதி என்பதற்கு இடமில்லை என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலிலேயே சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் விசாரணைக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தித் தங்களுக்கான நீதியை வழங்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் கிட்டிய உறவினர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரும் சிறீலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தி விசாரிக்க வேண்டுமென தனது உரையில் ஏற்கனவே விதந்துரைத்தமை இவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையக இவ்வாண்டுக்கான அமர்வுகள் தொடங்கவுள்ள இந்நேரத்தில், ஐக்கிய இராச்சிய அரசிடம் பிரித்தானியத் தமிழர்களின் அமைப்புக்கள், சிறீலங்காவின் மேல் இனஅழிப்பு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அனைத்துலக குற்ற நீதிமன்றத்திற்கு விதந்துரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கு பிரித்தானியாவின் வெளிநாட்டு பொதுநலவாயநாடுகள் அபிவிருத்தி அலுவலகத்தின் தெற்காசியத்துறையினர், பிரித்தானியத் தமிழர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளில் தாங்கள் கவனம் செலுத்துவதாக அளித்துள்ள பதிலில் பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டைக் குறித்து விளக்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையே ஒருநாட்டின் மேலான குற்றவியல் விசாரணைக்கு அந்நாட்டை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை மனித உரிமைகள் ஆணையம் முன்மொழியும் பொழுது அதனை சாதாரண மேலதிக வாக்கால் நிறைவேற்றி அந்நாட்டை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்தலாம். அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணயை ஒருநாடு ஏற்றுக்கொண்டாலே அதனை நடைமுறைப்படுத்த முடியும். ஒருநாட்டை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குப் பாரப்படுத்துவதற்கு அந்நாடு இதுகுறித்த உரோமைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் சிறீலங்கா அதில் கையெழுத்திடவில்லை. எனவே இந்த முயற்சி எதிர்பார்க்கும் பலனை தராது எனப் பிரித்தானியா கருதுவதைத் தெரிவித்துள்ளது.

இங்குதான் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை சிறீலங்காவின் மனித உரிமைப்பிரச்சினையாகவே உலகம் பார்க்கின்றது என்பது தெளிவாகிறது. இந்நிலைமாற்றப்பட்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினை இனஅழிப்புக்கான நீதி கோரும் பிரச்சினை என்ற தெளிவை உலகத் தமிழர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக உழைப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உடனான பேச்சுக்களின் போது அந்நாடுகளின் நலன்களுக்கு ஏற்ற மாதிரி தாங்கள் தங்களை மாற்றி உறவாடும் நிலையை விடுத்து ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உறுதியுடன் முன்னிறுத்தி அதனை அவர்கள் ஏற்க வைக்க வேண்டும். இந்த விட்டுக் கொடுப்பு இல்லா உறுதிப்பாடே உரிய தீர்வை நோக்கி அவர்களை நகர்த்தும். இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இடையில் உள்ள செயற்பாட்டு மாறுபாடுகளை மதித்து அதே வேளையில் ஒரே குரலாக ஒலிக்கும் தமது கடமையைச் செய்ய வேண்டும். இந்தக்கடமையுணர்வே ஈழத்தமிழர்களின் உரிமைகளை சிறீலங்காவின் உரிமைகளிலிருந்து வேறுபட்டதென்ற உண்மையை உலகை உணரவைக்கும் கருவியாகும்.

Exit mobile version