Tamil News
Home செய்திகள் இலங்கையில் பாஜக கட்சி தொடங்குமா? – அரசியல் கட்சி, அமைப்புக்கள்  கூறுவது என்ன?

இலங்கையில் பாஜக கட்சி தொடங்குமா? – அரசியல் கட்சி, அமைப்புக்கள்  கூறுவது என்ன?

இலங்கை மீது கண் வைப்பதற்கு முன்பாக முதலில் இந்தியாவிற்குள் முழுமையாக ஆட்சி அமைய பாஜக முயற்சிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தமது அரசியல் கிளையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், இலங்கையில் உள்ள பல்வேறு தரப்பினர் தமது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனோ கணேசன் இது குறித்து கூறுகையில்,

“இந்தியாவின் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி வென்று அங்கெல்லாம் ஆட்சி அமைக்க வேண்டும் என தான் விரும்புகின்றேன். அது சாத்தியமான பிறகே, இந்தியாவிற்கு வெளியில் இருக்கக்கூடிய இலங்கையில் ஆட்சி அமைப்பது பற்றி அக்கட்சி கவலை கொள்ள வேண்டும். வேண்டுமானால், சுமார் 100 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கலாம். இந்த விடயத்தில் நேபாளத்தில் தனது கிளையை பாஜக விரிவுபடுத்துவது தொடர்பில் நான் கருத்து வெளியிட போவதில்லை. இதேவேளை, பாரதிய ஜனதா கட்சியில் வளர்ந்து வரும் இந்தியாவின் திரிபுரா மாநில முதலமைச்சரை பார்த்து, ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் அவரது எண்ணத்தை ரசிக்கின்றேன்” என்றார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைவது தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை என இந்து சமயப் பேரவையின் தலைவர் சக்தி கிரீவன் தெரிவித்திருந்த நிலையில்,

“அரசியல் நோக்கங்களுடன் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளையை ஸ்தாபிக்க முயற்சிக்கப்படுமாயின் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை“ என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்சிகள் வருவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள தயார்“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களே ஆள வேண்டும். ஒருவேளை தமிழர்களின் பகுதிகளுக்கு அவ்வாறான கட்சிகள் வருவதாக இருந்தால், அதனை தாம் எதிர்க்கப் போவதில்லை. சிங்கள மக்களின் இறைமைகள், சிங்கள மக்களின் சுயாதீபத்தியம், சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள், சிங்கள மக்களின் மொழி ஆகியவற்றை நான் அங்கீகரிப்பேன். அதேபோன்று, தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாடு, சுயாதீபத்தியம், இறைமை, தமிழ் தேசியகம், மொழி ஆகியவற்றை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களை அங்கீகரிக்கும் கட்சியொன்று, ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்வேன் என்று சிறிதரன் குறிப்பிட்டார்.

நாடு விட்டு நாடு வந்து, அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கவில்லை. எனினும், இலங்கை அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு செய்தியை கூறக்கூடிய வகையில் இந்த விடயத்தை அக்கட்சியை சேர்ந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கலாம்.

எவ்வாறாயினும், பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் இலங்கையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,அதனூடாக தமிழர்களுக்க தீர்வொன்று கிடைப்பதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வேன்” என்றார்.

Exit mobile version