Home ஆய்வுகள் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நீங்காத நினைவலைகள்! -பா.அரியநேத்திரன்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நீங்காத நினைவலைகள்! -பா.அரியநேத்திரன்

அன்று 1987, ஜனவரி 28ஆம் நாள். மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலமெலாம் மானாவாரி நெல் அறுவடைக் காலம். அப்போது படுவான்கரை பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்.

ஆம்! அன்று அதிகாலை வடக்கே வவுணதீவு பாலம் ஊடாகவும், தெற்கே பட்டிருப்புப் பாலம் ஊடாகவும், மேற்கே பாலையடிவட்டை வெல்லாவெளி ஊடாகவும் மூன்று முனைகளில் இராணுவப் படையணிகள் கவசவாகனம், பீரங்கி பூட்டிய வாகனங்களுடன் மூன்று பக்கங்களிலும் இருந்து படுவான்கரை பெருநிலத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

news 100224 untitled kki3 கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நீங்காத நினைவலைகள்! -பா.அரியநேத்திரன்

அந்தப் படைகளுக்கு துணையாக இரண்டு வான் ஊர்திகளில் இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு படைகள் மெதுவாக நடந்து செல்லும் அதேவேளை, தாண்டியடி, மணல்பிட்டி சந்தி, அம்பிளாந்துறை தாமரைப்பூ சந்தி, பழுகாமம் தும்பங்கேணிசந்திகள் எல்லாம் தாழப்பறந்து வானூர்திகள் படையினரை இறக்கிவிட்டு பேரிரச்சலாக கொக்கட்டிச்சோலை பகுதிகளை அண்டிய அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு ஊடாக ஒரு படையடணியும், மணல்பிட்டி கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு பகுதிகளில் வட்டம் இட்டுக் கொண்டிருந்தன. நிலத்தால் இராணுவம் நகர்ந்து சென்றது.

இதனால் அச்சத்தால் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை பகுதிகளைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் தமக்கு பாதுகாப்பு அரணாக முதலைக்குடா வாவியை அண்டிய அமரிக்கன் நிறுவனத்தின் அணுசரணையுடன் இயங்கிய ‘இறால்வளர்ப்பு பண்ணை’ யில் தஞ்சம் அடைந்தனர். அந்த பண்ணையில் தொழில் புரியும் அலுவலர்கள், ஊழியர்களும் அங்கு சமுகமாய் இருந்தனர்.

வயல்களில் அறுவடை செய்தவர்கள், வீதியால் சென்றவர்கள் என பலபேரை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொலை செய்த வண்ணம் கோர முகத்துடன் மணல்பிட்டி சந்தியை கடந்து கொக்கட்டிச்சோலை ஊரை அண்டியதும், அங்கு பிரபல தனியார் வைத்தியசாலையை நடத்திவரும் வைத்திய கலாநிதி கந்தையா என்ற பெரியவர் படையினருடன் ஆங்கிலத்தில் உரையாடியபோது, அவரையும் அவரின் இளைய மகனையும் அதே இடத்தில் சுட்டுக்கொலை செய்துவிட்டு, ஈற்றில் இறால் பண்ணைக்குள் நுழைந்தவர்கள் அங்கு இருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.

அன்று மாலைநேரம் இறால் பண்ணையில் இறந்தவர்களின் உடலங்களை ஒவ்வொன்றாக உழவு இயந்திரத்தில் ஏற்றி, மகிழடித்தீவு சந்தியில் வேலிக்கட்டைகளை அடுக்குவது போன்று பரப்பி வைத்து, அவர்களில் சிலர் கைகளில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் சட்டைப் பைகளில் இருந்த பணம் பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் உழவு இயந்திரங்களில் உடலங்களை ஏற்றி அம்பிளாந்துறை தாமரைப்பூ சந்தி முருகன் கோயிலுக்கு முன் குவித்து, பக்கத்தில் இருந்த ஒலை வீட்டு கூரையை பிரித்து சடலங்களுக்குமேல் போட்டு பெற்றோல் தெளித்து எரிக்கப்படனர்.

இந்த படுகொலையில் இறால் வளர்ப்பு பண்ணையில் மட்டும் சுமார் 87, தமிழர்களும், இறால் வளர்ப்பு தவிர்ந்த படுவான்கரை பெருநிலம், ஊர் வயல் வாடி கிராமங்கள் எல்லாம் பலர் கொலை செய்யப்பட்டதாக அப்போது பலர் தெரிவித்தனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு பிரஜைகள் குழு கோரிய போதிலும், அதனை அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு நிராகரித்திருந்திருந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது அவ்வேளை வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருந்தன.
இதன் பின்னர் செரன்டிப் சீபூட் நிறுவனம் தமது இறால் பண்ணை தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்க வோஷிங்டன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இச்சம்பவங்களின் நேரடி சாட்சிகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று, சாட்சி சொல்ல வைத்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் இவ்வழக்கிற்கு சமுகமளிக்கவில்லை. இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என்றும், இவர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இறந்தவர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் தலா 60ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் இறந்தவர்களுக்கோ காயமடைந்தவர்களுக்கோ நஷ்டஈட்டை வழங்கவில்லை.

சர்வதேசம் கண்டனம் மட்டுமே தெரிவித்தது. எந்த நீதி விசாரணையும் இலங்கையில் இல்லாமல், காலம் கடந்து, இன்று 34, வருடங்கள் நினைவுகளை மட்டுமே எம்மால் அனுஷ்டிக்க முடிகிறது. அதுகூட சுதந்திரமாக நினைவுகூர முடியாத பல தடைகள், கண்காணிப்புகள், அச்சுறுத்தல்கள் மத்தியிலேயை இந்த நினைவும் கடந்து செல்கிறது.

இந்த படுகொலைச் சம்பவம் இடம் பெற்று சரியாக 14 வருடங்களின் பின்னர் 1991 யூன் மாதம் 12ஆம் திகதி இடம் பெற்ற மற்றுமோர் படுகொலைச் சம்பவம் மகிழடித்தீவு ஊரில் அரங்கேறியது. இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட 152 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் சர்வதேச சமூகம் முன் மகிழடித்தீவு படுகொலையை கொண்டு சென்றதால், ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இலங்கை அரசை சர்வதேசம் கண்டித்தது. ஆனால் எந்த நீதியும் அதற்குக் கிடைக்கவில்லை.

1987, ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும், 1992, யூன் 12ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்ந்து மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட ஏறக்குறைய 239, தமிழர்களையும் நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி’ 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவுச் சந்தியில் அமைக்கப்பட்டது.

இந்த தூபியில் உயிர் நீத்த எல்லோரினதும் பெயர்கள் இடம்பெறா விட்டாலும், அந்தக் காலப்பகுதியில் கிடைத்த பெயர்கள் மட்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version