பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: குடியரசு தின பேரணி நடக்கும்- விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே நடந்த 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமலே முடிந்தது.

இந்நிலையில், குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிரக்டர் பேரணி முன்னெடுக்கப்படும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை இரத்துச் செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59ஆவது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஏற்கனவே பத்து கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள போதும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை முழுவதும் இரத்துச் செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். எனினும், சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரவும், சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு சார்பில் கடந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 11ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் கூறுகையில், “மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை. நாங்களும் எங்கள் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டோம். அப்படி செய்தால் அது தற்கொலைக்கு சமம்” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில், ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 26ஆம் திகதி குடியரசு தினத்தில் ட்ரக்டர் பேரணியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.