பிள்ளையான் கட்சி தலைமையகமாக செயற்பட்ட வீட்டை, பூர்வீக உரித்துடையவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

50
137 Views

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,

“பிள்ளையான் அவர்கள் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார். மட்டக்களப்பு நீதிமன்றில் அதற்கு எதிரான வழக்கினை நான் தொடுத்திருந்தேன். தற்போது எனக்கு நீதி கிடைத்திருக்கின்றது. நீதிமன்றில் தாங்கள் மூன்று கோடிக்கு மேல் செலவழித்திருந்ததாகவும் அதனைப்பெற்றுத்தருமாறு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னுமொருவருடைய காணிக்குள் பலாத்காரமாக சென்று இருந்துவிட்டு அதற்குள் நாங்கள் மூன்று கோடி செலவிட்டுள்ளோம் நியாயம் அற்ற விடயமாக எடுத்துக்காட்டப்பட்டது.

எனது பாரம்பரிய வீடு ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க வீடு.தயாரின் தந்தையார் தமிழரசுக்கட்சியின் செனட் சபை உறுப்பினரான மாணிக்கம் அவர்கள் வாழ்ந்த வீடு. அந்த வீட்டுக்கு பல ஆண்டுகால வரலாறு இருக்கின்றது.

குறித்த வீட்டினைவிட்டு எழும்பி அந்த வீட்டினை என்னிடம் ஒப்படையுங்கள் என்று நான் பிள்ளையானிடம் பல தடவைகள் கோரிக்கைவிட்டிருந்தேன். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது குறித்த வீட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம் வீட்டினை விற்றுவிடுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் பிறந்து  14வயது வரையில் நான் வாழ்ந்த வீடு அது. அந்த வீட்டினை விற்பதற்கு எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.

முக்கியமாக அரசியலில் இருக்கும் நான் கூட மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே இந்த வழக்கினை முன்னெடுத்தேன். இலட்சக்கணக்கில் எனக்கு செலவு ஏற்பட்டது. இறுதியாக மட்டக்களப்பு நீதிமன்றம் உண்மையினை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கினறது.

நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பினை மதிப்பதற்கான சந்தர்ப்பம் பிள்ளையானுக்கு கிடைத்திருக்கின்றது. இன்னொருவரின் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு நான் எவ்வளவு வேண்டுமானாலும் தருகின்றேன் எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்பது தவறான விடயமாகும்.

எனக்கு அவர் நாமல் ராஜபக்ஸ ஊடாகவும் அந்த வீட்டினை விற்குமாறு கூறியிருந்தார்.  “உங்களது வீரஹெட்டியவில் இருக்கும் வீட்டினை விற்பீர்களா? அதேபோல்தான் இது எனது பாரம்பரிய வீடு, அதனை விற்கமுடியாது“ என அவரிடமும் கூறியிருந்தேன்.

இன்னும் சில வாரங்களுக்குள் அந்த வீட்டுக்குள் நாங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கை  இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பினை மதித்து பிள்ளையான் அவர்கள் வீட்டினை என்னிடம் ஒப்படைத்தார் என்றால் அது நன்றாக இருக்கும்.

காலத்தினைப்போக்குவதற்காக சில வாரங்கள்,சில மாதங்கள் இருக்கவேண்டும் என்று செயற்படுவாரானால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கையினை நான் முன்னெடுப்பேன்.

30வருடமாக எனது வீட்டுக்குள் போகமுடியாத நிலை காணப்பட்டு மீண்டும் போவதற்கான சந்தர்ப்பம் வரும்போது நான் அதனை விட்டுச்செல்லமுடியாது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here