Home ஆய்வுகள் கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு – பகுதி 2

கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு – பகுதி 2

சடங்குகள் நடைபெறும் பருவ காலம்

கிழக்கிலங்கையில் பத்ததிச் சடங்குகள் மிகப் பெரும்பாலும் நடத்தப்படும் பருவ காலமாக சித்திரை தொடக்கம் ஐப்பசி வரையான மாதங்கள் விளங்கி வருகின்றன. இக்காலப்பகுதி பெரும்பாலும் வரட்சியான காலமாகவே அமைந்து வருகின்றது. இக்காலத்தில் இயற்கையிலிருந்து வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வது கடினமானதாக இருப்பதுடன் மனிதர்கள் வழமைபோல் இக்காலத்திலும் இயற்கையினை நுகர்வு செய்ய முற்பட்டால் பிற ஜீவராசிகளுக்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால்கள் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

Jeyashanger33 கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு - பகுதி 2
அதாவது வரட்சியான காலங்களில் இயற்கையான பல்லுயிர் பேணும் உணவுச் சங்கிலியில் மனிதத் தலையீடுகள் தவிர்க்கப்படும் போதோ! அல்லது மட்டுப்படுத்தப்படும் போதோ! பல்லுயிர் பேணுகை நிலைத்து நிற்கும் தன்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நடைமுறைக்கு ஏதுவாகவே வரட்சியான காலங்களில் சடங்குகளை நடத்தும் முறைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது எனலாம். அதாவது சடங்குகளின் பொருட்டு மனிதர்கள் ஆறுகள், வாவிகள், குளங்கள் முதலான நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களை நுகருவதை நிறுத்துகிறார்கள், வேட்டையாடலைத் தவிர்த்துக் கொள்கின்றார்கள், சடங்கு நடைபெறும் சூழலிலேயே தங்கி வாழுகிறார்கள். இது மனிதரல்லாத பிற உயிரினங்களின் பல்வகைமையினை வரட்சியான பருவ காலத்தில் பாதுகாக்கும் நடைமுறையாகப் பத்ததிச் சடங்குகளை மையப்படுத்தி கிழக்கிலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையே மட்டக்களப்பு தாமரைக்கேணி மாரியம்மன் ஆலய பூசகரின் பின்வரும் குறிப்பு உறுதிப்படுத்துகின்றது. ‘கிழக்கிலங்கையில் மட்டக்களப்பிலே ஆண்டு தோறும் பல்வேறு பிரதேசங்களிலே இச்சடங்கு விழாக்கள் பெரும்பாலும் வெப்ப காலமாகிய சித்திரை மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரையான காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றன. இக்காலப்பகுதியை அக்கினி நாட்கள் எனவும் கூறுவர். இக்காலப்பகுதியில்தான் எமது நீர் நிலைகளில் நீர் வற்றும், மழை இராது, வெப்பம் தகிக்கும் எனவேதான் இக்காலப்பகுதியில் மக்கள் மாரியம்மன், காளியம்மன், வைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், கண்ணகையம்மன் போன்ற தெய்வங்களுக்கு சடங்கு விழாக்கள் கொண்டாடி மழையை வேண்டி நிற்பர்.

சடங்குகள் நடைபெறும் இடங்கள்:


கிழக்கிலங்கையில் பத்ததிச் சடங்குகள் நடத்தப்படும் இடங்கள் உயிர்ப்பல்வகைமையினைப் பாதுகாக்கும் சூழல்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. சடங்கு வழிபாட்டிடங்கள் புனிதமானதாகவும், வழிபாட்டுக்குரிய சிறப்புப் பண்புகளைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன. இவை வரலாற்று ரீதியாகவும், இயற்கையின்பாலும் சமூகத்தால் முக்கியப்படுத்தப்படும் இடங்களாக விளங்குகின்றன. இவ்வாறான இடங்களாக நீரூற்று, ஆறு குறுக்கிட்டுப் பாயுமிடம், அறுவடை செய்யும் இடம், மரங்கள், மலை அல்லது குன்று போன்றன விளங்குகின்றன10

‘ஆலயங்கள் தோன்றும் முன்னரே சடங்கு முறையான வழிபாடு தமிழரிடையே தோன்றி விட்டது. இவ்வழிபாட்டை நடாத்துவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்ய வேண்டும். அதனை களன் இழைத்தல் எனக் கூறுவர். கிழக்கில் தோட்டங்களிலும், நதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், காட்டோரங்களிலும் இத்தகைய சடங்குகள் நடைபெற்று வந்தன

சூழலிலுள்ள பல்வேறு உயிரினங்களும் வாழ்வதற்கான மனிதத் தலையீடுகள் அற்ற சரணாலயமாக சடங்குகள் நடத்தப்படும் கோவில்களும் அவற்றின் சூழலும் விளங்கி வருகின்றன. வருடத்தில் குறித்த சில தினங்களுக்கு மாத்திரமே இச்சூழலில் சடங்கு வழிபாடுகள் இடம்பெறுவதால் ஏனைய காலங்களில் பல்லுயிர்களினதும் நடமாட்டத்திற்கும் வாழ்தலுக்கும் உரிய சாதகமான ஏது நிலைகள் கொண்ட இடமாக இவை விளங்கி வருகின்றன.

‘தாவரங்கள் தெய்வங்கள் உறையும் இடம், தாவர மூலங்கள் நோய் நீக்கத்திற்குரிய சக்தியைக் கொண்டமைந்துள்ளன என்னும் நம்பிக்கைகள் கிழக்கிலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளன.  ஒவ்வொரு சடங்குக் கோவில்களிலும் தெய்வங்கள் உறையும் மரங்கள் எனப் பல மரங்கள் பேணப்பட்டும,; பாதுகாக்கப்பட்டும், வழிபடப்பட்டும் வருகின்றன.

இத்துடன் சடங்கு வழிபாட்டில் வேம்பு மரத்தின் இலை மிகவும் முக்கியமான வழிபாட்டுப் பொருளாக இருக்கின்றது. வேம்பு இலைகளை வைத்தே கும்பம் வைக்கப்படும், வேம்பு இலைக் கொத்தினைக் கையில் கொண்டே கலையேறி ஆடுவோர் இயங்குவர். இதனால் சடங்குக் கோவில்களில் வேம்பு மரங்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. கிழக்கின் சடங்குக் கோவில் வளாகங்கள் மரச்சோலைகளாகவே காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக நகர மயமாக்கம் எனும் அச்சுறுத்தல்களுக்குள், பறவைகளும் பூச்சி புழுக்களும் தம்மைப் பாதுகாத்து வாழ்வதற்குரிய மரங்கள் நிறைந்த வனப்பு மிகு உயிர்ப்பல்வகைமைக்கான சரணாலயங்களாக பத்ததிச் சடங்குக் கோவில்களின்; வளாகங்கள் விளங்கி வருகின்றன.


கிழக்கிலங்கைச் சடங்குகளில் தோரணம் கட்டுதல் பிரதானம் பெறுகின்றது. இது சமூகப் பங்குபற்றல் செயற்பாடாக நடைபெற்று வருகின்றது. தோரணம் கட்டி அதனை வீதி உலாக் கொண்டு வந்து கோவில் முகப்பில் கட்டுதல் தோரணச் சடங்கின் செயல்முறையாக உள்ளது. இத்தோரணத்திற்கான மரங்களும், கொடிகளும், செடிகளும் கிழக்கிலுள்ள காடுகளிலிருந்தே பெறப்படுகின்றன. தோரணம் கட்டுவதற்கான மரஞ்செடி கொடிகளைப் பெறுவதற்குச் செல்லுதல், மரங்களை வெட்டுதல் என்பன பயபக்தியுடன் காடுகளின் பேண்தகு தன்மையினை உறுதிப்படுத்தும் வகையிலான சடங்காசாரங்களுடனேயே நடைபெற்று வருகின்றன. இத்தோரணச் சடங்கானது காடுகளின் தேவையினையும், அக்காடுகளில் வாழும் பல்லுயிர்களின் அவசியத்தையும் தலைமுறைகளுக்குக் கடத்தும் ஒரு சடங்காகவும் நடைபெற்று வருவது அவதானத்திற்குரியது.

இதேபோல் கிழக்கிலங்கைச் சடங்குகளில் நடைபெறும் கல்யாணக்கால், கன்னிக்கால் வெட்டும் சடங்குகளும், கொம்புமுறி ஆற்றுகையும் பல்லுயிர்களும் வாழ்வதற்கான பாரம்பரிய மரங்களின் இருப்பினை மீள மீள வலியுறுத்தி வருகின்றன.

மட்டக்களப்பு திராய்மடு எனும் ஊரிலுள்ள வீரவள் அல்லது வீரபத்தினி என அழைக்கப்படும் கோவிலுக்குரிய சடங்கு விழாக் காலத்தில், இக்கோவிலுக்குரிய சமூகத்தினர் பறவைகளின் முட்டை வகைகளை உண்ணக்கூடாது என்பதும், திராய் சாப்பிடக் கூடாது என்பதும், மரங்களை வெட்டக் கூடாது என்பதும் நியதிகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இக்காரியங்கள் இக்கிராமத்தில் வாழும் பிற சீவராசிகளின் இனப்பெருக்கத்திற்கான முழுச் சந்தர்ப்பத்தையும் வழங்கும் நாட்களாக சடங்கு நடைபெறுங் காலத்தை ஆக்கியிருக்கின்றது.

கிழக்கிலங்கைச் சடங்கில் தெய்வங்களுக்காக மனிதர் வழங்கும் நேர்த்திப் பொருட்களுள் அதிகம் முக்கியத்துவம் பெற்றவையாக மாடு, ஆடு, கோழி என்பன விளங்குகின்றன. மனித உயிர்களின் நீண்ட ஆயுளுக்காக பிறிதொரு விலங்கையோ! பறவையினையோ! பயபக்தியுடன் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் ஓர் உள நல மருத்துவ முறையாக இந்நேர்த்தி வழிபாடு அடையாளங் காணப்படுகின்றது.

இன்று ஏகாதிபத்திய வணிகம் மரபணு மாற்றம் செய்துள்ள மாடு, ஆடு, கோழி முதலியனவற்றைப் பரவலாக்கி வரும் சூழலில், சடங்குகளில் பாரம்பரியமான உள்ளூர் மாடு, ஆடு, கோழி என்பவையே நேர்த்திக்காகக் கையளிக்கப்படல் வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளதால், உள்ளூர் மாடு, உள்ளூர் ஆடு, உள்ளூர் கோழி முதலிய விலங்கு, பறவைகளின் உயிர்ப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, இவற்றின் இனப்பெருக்கம் வலுவாக்கப்பட்டு வருகின்றது எனலாம். கிழக்கிலங்கையில் சடங்குக் காலத்தில் உள்ளூர் நாட்டுக் கோழிகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகின்றது. இக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கத்தை சாதகமாகக் கையாளும் ஓர் உத்தியாகவும் நேர்த்திக்காக உள்ளூர்க் கோழிகளை வழங்கும் நடைமுறை விளங்குகின்றது என்பதும் கவனத்திற்குரியது.

இத்துடன் கிழக்கிலங்கைச் சடங்குகளில் தோல் வாத்தியங்கள் பிரதானம் பெறுகின்றன. ‘மட்டக்களப்பில் சடங்குக் கோயில்களில் சடங்கு நிகழ்வின் போது பறை அடிக்கப்படும், சடங்கு நிகழ்த்துகைகளின் பல்வேறு கட்டங்களிலும் உடுக்கிசைத்தல் பிரதான அம்சமாக இடம்பெற்று வருகின்றது13 இவ்வாத்தியங்களுக்கான தோல் உள்ளூர் மிருகங்களிலிருந்து பெறப்படுவதால் பத்ததிச் சடங்கு, சூழலில் வாழுகின்ற மிருகங்களின் இருப்பினையும் அவற்றின் தொடர்ச்சியினையும் வேண்டி நிற்கின்றது.

அதாவது தோல் வாத்தியங்களின் உருவாக்கம் உயிர்ப்பல்வகைமையினைப் பாதுகாப்பதாகவே விளங்கி வருகின்றது. ‘மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் தோல் வாத்தியக் கருவிகளை உருவாக்கும் கலைஞர்கள் வாழ்கின்றனர். நவீன முறைமைகள், சாதனங்களை உள்வாங்காது பாரம்பரிய முறைப்படியே இவர்கள் வாத்தியங்களை உருவாக்குகின்றனர். தோல் வாத்தியக் கருவிகளின் உருவாக்கத்திற்கு மான், மரை, உடும்பு, ஆடு, மாடு, குரங்கு முதலிய மிருகங்களின் தோலையும், பலா, வேம்பு முதலிய மரங்களையும் மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர்14 பாரம்பரிய முறையுடனான தோல்வாத்தியத் தொழில்நுட்பமானது உயிர்ப்பல்வகைமையினைப் பாதுகாத்து, உயிர்களின் பேண்தகு தன்மையினைப் பேணுகின்ற கருத்தியலுடன் கூடிய பொறி முறையுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் நிலையில், கிழக்கிலங்கைச் சடங்குகள் அதற்குத் தேவையான வாத்தியங்களின் பயன்படுத்துகை மூலமாக, பல்லுயிர் பேணும் தன்மையினை முக்கியத்துவப்படுத்திப் பாதுகாத்து வருவதனைக் காண முடியும்.

கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்கு வழிபாட்டில் வதனமார் சடங்கு பிரதானமானது. ‘விவசாயம் மற்றும் கால்நடைகளுடன் தொடர்புடையவர்கள் தங்களின் வளங்கள் பெருக வேண்டும் என்ற நோக்கில் வழிபடும் கடவுளாக வதனமார் காணப்படுகின்றார்15 இச்சடங்கு பிற உயிர்களைத் தெய்வமாக வழிபடும் சடங்காக இடம்பெற்று வருகின்றது.

மேலும் கிழக்கிலங்கைச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பூசைக்குரிய பொருட்களான நிலத்து நீர், வேப்பம் பத்திரம், தாமரைப்பூ, கமுகம் பாளை, தென்னம் பாளை, தென்னங்குருத்து, பனையோலைப் பெட்டி, பாய், பலாப்பழம், மாம்பழம், கதலி, மொந்தன் வகையைச் சேர்ந்த வாழைப்பழங்கள், தேன், பால், நெய், தயிர், மண்பானை, மாவிலை, வெற்றிலை, கமுகம் பாக்கு, இளநீர், தேங்காய் முதலிய பொருட்கள் யாவும் இயற்கையுடன் நெருங்கியவைகளாகவும் குறிப்பாக உயிர்ப்பல்வகைமையினைப் பாதுகாக்கும் இயற்கையின் வளங்களாகவும் இருக்கின்றன. எனவே சடங்கின் வழிபாட்டுப் பொருட்கள் யாவும் பல்லுயிர் பேணுதல் எனும் அடித்தளத்திலிருந்தே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இதனூடாக இனங்காண்கின்றோம்.

இவ்விதமாக கிழக்கிலங்கையில் நடைபெற்று வரும் பத்ததிச் சடங்குகள் அதன் தத்துவார்த்த அடித்தளத்திலும் நடைமுறைப் பிரயோகங்களிலும் பல்லுயிர் பேணுதல் எனும் பண்பினைக் கொண்டதாக இயக்கம் பெற்று வருவதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்புக்கள்.

1.   வடிவேல் இன்பமோகன், கிழக்கிலங்கைச் சடங்குகள் சமயம் – கலை – அழகியல், குமரன் அச்சகம், கொழும்பு 2012, பக் 64 வடிவேல் இன்பமோகன், மே.கு.நூல் பக் 40

  1.   ந.இரவீந்திரன், இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள், சவுத் விஷன், சென்னை 2003, பக்கம் 30
  1. கலாநிதி சி.ஜெயசங்கர் ‘மாரி’ அமிர்தகளி மாரியம்மன் ஆலய விழா மலர் 2007, அமிர்தகளி, மட்டக்களப்பு பக் 23
  2.   க.கைலாசபதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், பக் 67
  3.   வடிவேல் இன்பமோகன், மே.கு.நூல் பக் 40
  4. ந.இரவீந்திரன், மே.கு.நூல் பக்கம் 30
  5.  வடிவேல் இன்பமோகன், மே.கு.நூல் பக் 40,41
  6. ஜோ.கருணேந்திரா, பூசகர், ‘மாரி’ அமிர்தகளி மாரியம்மன் ஆலய விழா மலர் 2007, அமிர்தகளி, மட்டக்களப்பு பக் 41
  7.  வடிவேல் இன்பமோகன், மே.கு.நூல் பக் 45
  1. வி.ரி.சகாதேவராஜா, கூடல் கண்ணகி கலை இலக்கிய விழா மலர் 2012, பக் 35
  2.  வடிவேல் இன்பமோகன், மே.கு.நூல் பக் 33
  3.  மொழிதல், ஆய்விதழ், தொகுதி 2 எண் 2 – 2015, பக் 94,95
  4.  மேலது பக் 96
  5. ச.தரேஸ்வரன்,  016 ABSTRACTS பக் 69

(முற்றும்)

து.கௌரீஸ்வரன்,  tud -B.A.M. PHIL

விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 

Exit mobile version