Home ஆய்வுகள் தமிழர் தரப்பின் தீர்மானம் ஜெனீவாவில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? – அகிலன்

தமிழர் தரப்பின் தீர்மானம் ஜெனீவாவில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? – அகிலன்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் மூன்றும் இணைந்து பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன. இதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ள மூன்று கட்சிகளின் தலைவர்களும், மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமது கோரிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார்கள். தொடர்ச்சியான இழுபறிகளுக்கு மத்தியில் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இதற்கான உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டிருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனை தான்.

பல்வேறு தரப்புகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் சிவகரன் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றிலேயே, பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கான இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கூட்டம் கூட, கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்தான் நடைபெற்றது. சிவகரன் தலைமை தாங்குவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, இறுதியில் வண பிதா ஒருவரின் தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெற்றது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உட்பட மேலும் சில தேசியக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இவ்வாறான இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

தமிழர் தரப்பினரின் பிரதான கோரிக்கை

தமிழர் தரப்பின் இந்த இணக்கப்பாட்டுக் கோரிக்கையில், “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை இணங்க வைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடந்த பத்து ஆண்டுகளாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் போதும். எதனையும் இலங்கை செய்யப்போவதில்லை. இனியும் இதில் மனித உரிமைகள் பேரவையில் சாதித்துச் செயலாற்றுவதற்கு எதுவுமில்லை. ஆகவே காலத்தை மேலும் வீணடிக்காமல், விடயத்தை ஐ.நா பொதுச் சபையிடமோ, பாதுகாப்புச் சபையிடமோ, சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திடமோ கையளிக்க நடவடிக்கை எடுங்கள்” என வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானதும், காலத்துக்குப் பொருத்தமான ஒன்றுதான். கடந்த பல வருடகாலமாக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களினால் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்திவிட முடியவில்லை. தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு இணை அனுசரணை வழங்குவதாகக் கூறி, களத்தில் இறங்கும் இலங்கைத் தரப்பு, தீர்மானத்தில் இருக்கக்கூடிய கடுமையான தன்மையைக் குறைப்பதில்தான் வெற்றிபெறுகின்றது. பின்னர் அதனைக்கூட இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுதில்லை. அதனால், நிலைமாறுகால நீதி என்பது தமிழர்களுக்குக் கிட்டாத ஒன்றாகவே இருந்துவருகின்றது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கு, குறிப்பிட்ட நாட்டின் ஒத்துழைப்பு – இணக்கப்பாடு அவசியம். இலங்கையின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், அதனை நிறைவேற்றச் செய்வதற்கான பொறிமுறை எதுவும் ஜெனீவாவிடம் இல்லை. அதனை இலங்கை தனக்கான வாய்ப்பாகவே இதுவரையில் பயன்படுத்திவந்திருக்கின்றது.

Capture 10 தமிழர் தரப்பின் தீர்மானம் ஜெனீவாவில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? - அகிலன்வெறுமனே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்துகொண்டு எதனையும் சாதிக்க முடியாது என்ற கருத்து வலுவடைவதற்கு இதுதான் காரணம். அதனால்தான் “பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. நீதியரசர் விக்னேஸ்வரனும் இந்தக் கருத்தையே வலியுறுத்தியிருந்தார். சுமந்திரனும் இதனை இப்போது ஏற்றுக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு திருப்பம்!

புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்படுமா?

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கினாலும், அதனை நிறைவேற்ற ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை என்பது வெளிப்படை. கடந்த வருடங்களில் இது தெளிவாக உணர்த்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தமிழ்த் தரப்பினரால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை, பேரவையின் உறுப்பு நாடுகளால் புறக்கணித்துவிடக்கூடிய ஒன்றாக இருக்கப்போவதில்லை. புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக திட்டமிடும் பிரதான நாடுகள் இந்தக் கோரிக்கையிலுள்ள அம்சங்களை உள்வாங்க வேண்டிய அழுத்தங்களுக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கலாம்.  பிரதான 3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டிருப்பதால், இந்தக் கோரிக்கை வலுவானதாகவே இருக்கும்.

தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் 4 முக்கிய விடயங்கள் உள்ளடங்குகின்றன. அவையாவன

  1. இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேசபொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
  2. ஐ. நா.மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும்செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
  4. மேலே 01 இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (IIIM) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்.

ஜெனீவாவிலிருந்து பிரச்சினையை வெளியே எடுப்பதற்கு முன்னர் அதனை மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது உடனடியாக சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அதற்கான ஒரு மாற்றுத் திட்டமாகத்தான் 04 ஆவது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்படுகின்றது.

Exit mobile version