Home ஆய்வுகள் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு...

முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா)

மகிந்தவிடம் அவசரமாக ஓடிய இந்தியத் தூதுவர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது தொடர்பில் அதிர்ச்சி அடைந்த இந்தியத் தூதுவர் சிறீலங்கா பிரதமரை அவசரமாக சந்தித்தன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

நினைவுத்தூபி இடித்ததும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபச்சாவை சந்திப்பதற்கு இந்தியத் தூதுவர் கோபால் பக்லே முயன்றபோதும், மகிந்த குருநாகல் பகுதிக்கு சென்றதால் அவரால் சந்திக்க முடியவில்லை. எனினும் கடந்த ஞாயிறு மாலை மகிந்த கொழும்பு திரும்பியதும் உடனடியாக மகிந்தவை அவரின் இல்லத்துக்கு சென்று இந்திய தூதுவர் சந்தித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறீலங்காவை விட்டு வெளியேறிய 24 மணிநேரத்தினுள் தூபியை இடித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியத் தூதுவர் மகிந்தாவை எச்சரித்ததுடன், உடனடியக நிலமையை சீர் செய்யுமாறும் கடுமையான தொனியில் கேட்டிருந்தார்.

Capture 5 1 முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு – சிறீலங்காவையும், இந்தியாவையும் உலுக்கிய நிகழ்வு – (செய்தித் தொகுப்பு –பிரபா)

இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மகிந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்காவை தொடர்புகொண்டு பேசியதுடன், அமரதுங்கா உடனடியாக யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்பு கொண்டிருந்தார்.

அதன் பின்னர் திங்கட்கிழமை (11) அதிகாலை துணைவேந்தர் மாணவர்களுடன் இணைந்து புதிய தூபிக்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார். தூபி இடிக்கப்பட்ட 60 மணிநேரத்திற்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்துள்ளன.

மகிந்தவுக்கு தெரியாமல் தூபியை இடித்தாராம் சிறீசற்குணராஜா

தூபி இடிக்கப்பட்டது தமக்கு தெரியாது எனவும், அதற்கு யார் அனுமதி தந்தது எனவும் சிறீலங்கா பிரதமரின் செயலாளர் அலுவலகம் யாழ். பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நடந்தவை எல்லாவற்றையும் உரிய விளக்கங்களுடன் பிரதமரின் செயலாளர் அலுவலக்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வுத்துறையினரை தோற்கடித்த துணைவேந்தர்

தூபி இடிக்கப்பட்ட நடவடிக்கையானது சிறீலங்கா அரசுக்கும், நாட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது நாட்டின் தேசிய புலனாய்வுத்துறையின் தோல்வி; அதாவது அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை என்பன ஒருங்கிணைந்து செயலாற்றவில்லை என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா புலானாய்வுத்துறையின் முற்றான தோல்வியின் வெளிப்பாடு இது. எந்த ஒரு அமைப்பும் இதனை அரச அதிகாரிகளுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

அதன் எதிர்வினையையும் அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர். அதாவது அரச இயந்திரங்கள் தன்னிச்சையாக செயற்படுவதாக அரச வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தூபி இடிப்பு விவகாரம் ஐ.நாவில் பாரப்படுத்த வேண்டும்

– பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி விவகாரத்தை பிரித்தானிய அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கும் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டோனா தெரிவித்துள்ளார்.

இது மத சுதந்திரத்தை மறுக்கும் செயலாகும்; எனது பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் வசிக்கினறனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கனேடிய தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி கண்டு அதிசயித்த கொழும்பு ஊடகம்

சிறீலங்கா அரசினாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்கள் கடந்த வாரம் வாகனப் பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் கொடியை தாங்கியவாறு பல நூறு வாகனங்கள் வீதியால் அணிவகுத்து சென்றதுடன், ஒலிகளை எழுப்பி மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.

இந்த வாகனத் தொடரணியின் காணொளியை தாம் பார்த்ததாகவும், அதில் புதிய வகை மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, அவுடி மற்றும் டபிள் கப் போன்ற வாகனங்களே அதிகளவில் சென்றதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் த சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியை காட்டுவதுடன், தமிழ் மக்களின் இந்த பொருளாதார வளர்ச்சி அந்த நாடுகளின் அரசியல் தலைவர்களின் கவனத்தை திருப்பவல்லது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அழிப்பு தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையில் நிறைவேறிய தீர்மானம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்ததற்கு எதிராக யாழ் மாநகரசபையில் கடந்த புதன்கிழமை (13) கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தூபியை அதே இடத்தில் மீள அமைக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுட்பமாக காய் நகர்த்திய துணைவேந்தர்

யாருக்கும் தெரியாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை துணைவேந்தர் எவ்வாறு இடித்து அழித்தார் என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் தூபியை இடிக்குமாறு அறிக்கை ஒன்று இரகசியமாக துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருடன் துணைவேந்தர் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும், அது தொடர்பில் பேசப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நினைவுத்தூபியை இடிப்பதற்கு துணைவேந்தரும் பதிவாளர் வி. காண்டீபனும் இரகசியமாக திட்டம் தீட்டினர். தமது நடவடிக்கைகளை இரகசியமாக பேணிய அவர்கள், கோவிட்-19 நெருக்கடியை அதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

பொறியியலாளர்கள் மற்றும் கனரக வாகன நிறுவனம் போன்றவற்றுடனான தொடர்புகளும் இரகசியமாக பேணப்பட்டன. வெள்ளிக்கிழமை (8) இரவு 10 மணிக்கு இடிப்பது என திட்டமிடப்பட்டது. அன்று இரவு வேறு காரணங்கள் கூறப்பட்டு மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

துணைவேந்தரும், பதிவாளருமே அங்கு இருந்தனர். தெல்லிப்பளையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தூபியை இடிக்கும் கூரையில் வெளிச்ச விளக்கு பொருத்தப்பட்ட கனரக வாகனம் வாடைகைக்கு  அமர்த்தப்பட்டது.

திட்டமிட்டபடி 10 மணியளவில் இடிக்கும் பணிகள் இரகசியமாக ஆரம்பமாகின. ஆனால் இடிக்கும் சத்தம் கேட்டு பொன் இராமநாதன் வீதி மற்றும் பரமேஸ்வரா சந்தி ஆகியவற்றில் இருந்த அயலவர்கள் விழித்துக் கொண்டனர்.

பொதுமக்களும், மாணவர்களும் வளாகத்திற்கு வெளியே அணிதிரண்டனர். அவர்கள் அணிதிரளும்போது தமிழ் மக்கள் சந்தித்த இனஅழிப்பின் வரலாற்றை சுமந்து நின்ற நினைவாலயம் வெறும் கற்குவியலாக இருந்ததுடன், அதனை கனரக வாகனம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலை

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது தமக்கு மிகுந்த கவலை அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தயராக இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version