இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம்

இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது.

பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது.

இந்நிலையில் தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகை கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றை பின்னர் சிறிய இந்திய கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு செல்கின்றன.

இதுதான் பல பத்தாண்டுகளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்பு துறைமுகமே ஓடுகின்றது. கொழும்பு துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், ஹம்பந்தோட்டை, திருகோணமலை…) ஓடுகின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஒரு ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால “இலவு காத்த கிளி வெளிநாட்டு கொள்கை”, இதுவாகும்.

புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா, இலங்கையை சந்தோஷப்படுத்தும் ஒரே காரணத்துக்காக, இணங்கியது. இது இலங்கை வாழ் மலையக தமிழருக்கு இந்திய மத்திய அரசு செய்த பெரும் வரலாற்று துரோகமாகும். இதனால், இலங்கையில் தமிழரின், மலையக தமிழரின் அரசியல் பலம் குன்றியது. அதை தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.

விஷயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.

இப்போதும், இந்தியாவின் “இலங்கை கொள்கை” காரணமாக, ஒரு பிராந்திய களஞ்சிய துறைமுகமாக, இந்திய பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்பு துறைமுகம், இந்திய துறைமுகங்களை விட சிறப்பாக செயற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பொருளாதரத்தில் பலமடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், “பிராந்திய களஞ்சிய துறைமுகம்” என்பதை விட, கொழும்பை “உலக களஞ்சிய துறைமுகமாக” மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்க திட்டம் போடுகிறார்கள்.

sl china india இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம்இலங்கையை தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிக கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும், கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவை புறக்கணித்து விட்டு, இந்த கனவு திட்டத்திற்காக சீனா ஆதரவுடன் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். (இதில் சைனாவின் நோக்கம் என்னவென்பது சைனாவுக்கு மட்டுமே தெரியும்.)

இதற்காக, கொழும்பு துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான South Asian Gateway Terminal (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்கு கீழ் கட்டுகிறார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்கு கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட எதிர்காலத்தில் அவசியமானால் ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51%, ஜப்பான் நிறுவனத்துக்கு 29%, இந்திய நிறுவனத்துக்கு 20% என்ற கிழக்கு முனைய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்கிறார்கள்.

முதல் SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கபட்ட போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது “இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுகிறது” என கூச்சல் எழுப்புகிறார்கள்.

ஆகவே இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்புதான் தெரியுது. இந்நிலையில், இன்று நரேந்திர மோடியின் இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கிறது.

china missile இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம்இததனை பத்தாண்டுகளாக கொழும்பு துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய தென் கோடி எல்லைக்கு அண்மையில், கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவதையும் இந்தியாவால் சகிக்க முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியில் கொளச்சல் என்ற இடத்தில் புது துறைமுகம் ஒன்றை கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கிறது. மேலும் கேரளத்திலும், அந்தமானிலும் புது துறைமுகங்கள் கட்டவும் முனைகிறது.

இவை உருவாகிவிட்டால் இந்திய கொள்கலன்கள் கொழும்பு வர தேவையில்லை. இது இலங்கைக்கு பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்திய துறைமுகம் இறக்கி வைத்து, அவ்வந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

தூரத்து உறவுகாரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனை பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய “ரிஸ்க்” எடுக்கிறது.

இன்றைய இருக்கும் பொருளாதார வருவாயை மறந்து, இல்லாத வருவாயை தேடி ஓடுகிறது. “இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும்” இந்த “ரிஸ்க்”, வெறும் பொருளாதார “ரிஸ்க்” மட்டுமல்ல, அரசியல் “ரிஸ்க்கும்” கூட என்பதை உடனடி எதிர்காலம் காட்டலாம்.

நன்றி: மனோ கணேசன் முகநூல்