Home செய்திகள் சிறுமி வீடொன்றில் இருந்து சடலமாக மீட்பு – விசாரணை கோரி மக்கள் போராட்டம்

சிறுமி வீடொன்றில் இருந்து சடலமாக மீட்பு – விசாரணை கோரி மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் பெரியகல்லாறு பிரதான வீதி மற்றும் கல்முனை வீதிகளை மறித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG 20210113 WA0283 சிறுமி வீடொன்றில் இருந்து சடலமாக மீட்பு - விசாரணை கோரி மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன்  சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி, அவரது பாட்டியின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்த சிறுமியை அவரின் சிறிய தாயார் அழைத்துச்சென்ற நிலையில், சிறுமி சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்  மரணம் அடைந்த சிறுமி சித்திரவதைக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த சிறுமி நீண்டகாலமாக துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த  நிலையில்,  சிறுமியை துன்புறுத்தியவர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணையைக் கோரியும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறுமியின் மரணம் கொலையெனவும் குறித்த சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் எனவும்  கோசங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் 48மணித்தியாலத்திற்குள் அவர்களை கைதுசெய்வோம் எனவும் வழங்கி உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரண வீட்டுக்கு சென்று இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டனர்.

Exit mobile version