அமெரிக்காவுக்கு கியூபா கண்டனம்

கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக  அமெரிக்கா அறிவித்து, பொருளதாரத்திற்கு தடை விதித்தமைக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரி்க்க அதிபராக விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோபைடன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. கியூபா பயங்கரவாத நாடு அல்ல என அவர் நம்புவார் என்று கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ வந்தபின் 1959-ல் இருந்து அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை. இதனால் கியூபாவை பயங்கரவாதத்தை பரப்பும் நாடு என அறிவித்து பல்வேறு பொருளாதாரத் தடைகளை  விதித்து வந்தது அமெரிக்கா.

ஆனால், இந்தத் தடைகள் அனைத்தும் அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா காலத்தில் விலக்கப்பட்டு, கியூபா,  அமெரிக்கா இடையே நல்லுறவு மலர்ந்தது, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளும் உருவாக்கப்பட்டன.

ஆனால், அதிபராக ட்ரம்ப் வந்தபின் மீண்டும் கியூபாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தார்.

அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ,  கியூபா மீதான பயங்கரவாத நாடு எனும் அறிவிப்பு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

அகதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் அளித்தல், கொலம்பியா கொரில்லா படைகளுக்கு அடைக்கலம் அளித்தல், வெனிசுலா அதிபர் மதுராவோவுக்கு ஆதரவாக இருத்தல் ஆகியவற்றால் கியூபாவை பயங்கராவாத நாடுகள் பட்டியலில் மீண்டும் நீடிப்பதாக அவர் மேலும் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு கியூப அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் பெர்னான்டஸ் டி காசோ கூறுகையில் “ கியூபா பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு அல்ல என்பதை அமெரிக்காவில் விரைவில் அதிபராக பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடனும் அவரின் அரசாங்கமும் உறுதியாக நம்பும் என நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையுடன், இந்த உண்மை நிச்சயம் அமெரி்க்க அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஜனவரி 20-ம் திகதியை எதிர்பார்க்கிறோம்.  அதிபர் ட்ரம்ப் அரசு கடைசி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்தது கண்டனத்துக்குரியது.

இது முழுமையான சந்தர்ப்பவாதம். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி” எனத் தெரிவித்தார்.