Tamil News
Home செய்திகள் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறை

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன், நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி, நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மகல்கந்தே சுநந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர் சுனில் பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இன்று, நீதித்துறையை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை உச்ச நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால், ரஞ்சன் ராமநாயக்கா, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கா, இலங்கையின் சிங்கள சினிமாத்துறையில் பிரபல நடிகராவார். இவர் அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த 40 இலட்சம் ரூபா நாடாளுமன்ற அமர்வுப்படியை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

Exit mobile version