நினைவுத்தூபி விவாகாரம்- தமிழகத்தின் எழுச்சிக்கு அஞ்சியதா இலங்கை?

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமிழகத்தின் எழுச்சியே அதனை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர வழி வகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்த ஒரு கருத்து வெளிப்படுத்தி உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடாவடியாக இடித்தழிக்கப்பட்டதையடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்திருந்தன. ஆர்ப்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் திடீரென நினைவுத்தூபிக்கான புதிய கட்டிடத்துக்கு உரிய அடிக்கல்லை யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சற்குணராஜா நாட்டி வைத்துள்ளார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னதாக தமது அதிகாரிகள் புடைசூழ பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியிடம், அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைவாகவே அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் ‘இந்தப் பிரச்சினையை சுமுகமாகக் கையாளச் சொல்லி கவர்மெண்டிடம் இருந்து ஓடர வந்துள்ளது. இதுபற்றி நான் யுசிஜிக்கு (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு) எழுதியுள்ளேன். என்னென்றால் இதனால் இந்தியாவில் தமிழ் நாட்டில் கன பிரச்சினைகள்…, பில்டிங் உரிய அனுமதியுடன்தான் நடக்கும். இன்றைக்கு அடிக்கல் மாத்திரம் நாட்டப்படும்.

இரண்டு கற்களை வைத்து இந்தப் பிள்ளைகளை சாந்தப்படுத்தி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் என்னுடைய பிள்ளைகள் அல்லவா அந்த மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் வளாகத்திற்குள் வருவார்கள்’ என்று பொலிஸ் அதிகாரிகளிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறினார்.

அதேவேளை மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பொலிசார் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தத் திடீர் திருப்பத்தையடுத்து மாணவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு பல்கலைக்கழக வளாகத்தினுட் பிரவேசித்து அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். துணைவேந்தர் நினைவுத்தூபி அமைந்திருந்த அதே இடத்தில் மாணவர்கள் புடைசூழ தேவாரம் பாடி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

ஆனால் “இந்தத் திடீர் திருப்பம் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி பெரிய அளவில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்து முறியடிப்பதற்காகவே இடம்பெற்றுள்ளது” என்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம்  சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உண்மையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருந்தால்; அடிக்கல் நாட்டும் நிகழ்வை நாளை நடத்தியிருக்கலாம் அல்லவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோதமான கட்டிடமாகிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்குமாறு அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே இடித்தழித்ததாகக் காரணம் கூறிய துணை வேந்தர், உரிய அனுமதியை பெற்று அதனை உடைக்காமலே அரசாங்கத்திடம் இருந்து பெற்றிருக்கலாம்தானே என்றும் சிவாஜிலிங்கம் வினவியுள்ளார்.

முன்னதாக அழைப்பு விடுத்தமைக்கமைவாக வடக்கு கிழக்குப் பிரதேசமெங்கும் இன்று திங்கட்கிழமை கடைகள் மூடப்பட்டு முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆயினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னெடுத்திருந்த மாணவர்களின், கோரிக்கைக்கு அமைவாக புதிய நினைவுத்தூபி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வு பற்றிய தகவல்கள் வெளியாகியதும் யாழ் நகரில் சிலர் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களைத் திறந்துள்ளனர்.