Home ஆய்வுகள் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்?

200 Views

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி.

கேள்வி: 

               எதிர்வரும் 2021 மார்ச் மாதம் ஐ.நாவின் 46ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இலங்கையில் சுமந்திரன் அவர்கள் 7பக்க அறிக்கையொன்றை தயாரித்து, அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக நீதியரசர் விக்னேஸ்வரனிடமும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அதை நிராகரித்துள்ளனர். சர்வதேச அமைப்புகள் தமிழர்களிடையே ஒற்றுமையின்மையை கவனித்து வருகின்றனர். தமிழ்க் கூட்டமைப்பு; முக்கியமான சுமந்திரன் என்ற தனிப்பட்ட மனிதர் ஏன் இவ்வாறான ஒரு செயற்பாட்டில் இறங்க வேண்டும். இது எவ்வளவு பின்னடைவைக் கொண்டு வரும் என்பதை விளங்கப்படுத்துவீர்களா?

பதில்:

                உங்கள் கேள்விக்கான பதிலை வழங்குவதற்கு முன்னர், நான் ஐ.நா.வின் செயற்பாடுகள் தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஐ.நா.வில் பங்குபற்றியவன், பங்குபற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் ஓர் அறிமுகத்தை தருகின்றேன். இலங்கையில் தமிழருக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பிற்கான நீதி என்பது ஐ.நாவின் மனித உரிமைக் கழகத்திற்குள் இருந்து வரப்போவதி ல்லை. மனித உரிமைக் கழகம் என்பது இலங்கை அரசாங்கத்தையும் ஏற்று செயற்படும் ஒரு தளமாகவே இருக்கின்றது. இதனால் இலங்கை அரசின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாட்டில் அவர்கள் நகர்வதில்லை. இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பான விசாரணைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், இலங்கை அரசாங்கம் தாங்கள் ஐ.நா.வுடன் சேர்ந்து செயற்படுவதாக ஒரு அறிக்கையை விடும். பின்னர் அரசு மாற்றம், அரசாங்க மாற்றம் என வரும்போது பின்வாங்குவதும் போன்றதான தன்மையை கடைப்பிடித்து வருகின்றனர். இதை அவர்களின் மூலோபாயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

                காலத்திற்குக் காலம் ஐ.நாவுடன் இணைந்து செயற்படப் போகின்றோம் என்று சிலர் சொல்வதையும், சில தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகச் சொல்வதையும், சில தீர்மானங்களிலிருந்து வெளியே போவதாகச் சொல்வதையும் இலங்கை ஒரு இராஜதந்திரமாகக் கையாண்டு வருகின்றது. கடந்த காலங்களிலான இந்த பட்டறிவுகள் முக்கியமானவை.

தமிழ் மக்கள் தரப்பில் மிக முக்கியமான தீர்மானத்தை 2014, 2015 காலப்பகுதிகளில் வெளியக விசாரணையாக இருக்கக்கூடிய அல்லது ஐ.நா.வின் அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஏதோ ஒரு வகையிலே தமிழ் அரசியல் தலைமைகள் காரணமாகி விட்டார்கள். இந்த அடிப்படையிலேயே புதிய ஆட்சி மாற்றத்தின் ஊடாக சில ஆட்சி மாற்றங்களை அல்லது அரசியல் தீர்வுகளை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சில புலம்பெயர் அமைப்புகளும் செயற்பட்டு, அதில் படுதோல்வியடைந்துள்ளனர்.

                இந்த அடிப்படையிலே இன்று மனித உரிமைக் கழகத்திலே மீண்டும் ஒரு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச சமூகம் முற்படுகின்றது. ஆனால் இந்த அழுத்தம் வெறுமனே  தமிழர்களின் நலன் சார்ந்ததாக, அல்லது தமிழர்களுக்கான நீதியைக் கொடுப்பதற்கான அழுத்தமாக நான் பார்க்கவில்லை. இது அவர்களின் இராஜதந்திர மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த ஒரு அழுத்தமாக  இலங்கையில் அண்மையில் நடந்த ஆட்சிமாற்றம், கோத்தபாயா ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் பூகோள அரசியலில் சீனாவின் ஆதிக்கத்தை கையாள்வதற்காகவும் பாவிக்கப்படும் ஒரு பகுதியாகவுமே இந்த மனித உரிமைக் கழகத்தில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

                இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் கருத்து, நிலைப்பாடு என்பது, மிக முக்கியமாகின்றது. அதாவது ஐ.நாவின் மனித உரிமைக் கழகம் அரசுகளுக்கு மட்டுமேயான ஒரு கழகமாக இருக்கின்றது. அதேவேளை மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புக்கள் கருத்துச் சொல்லக்கூடிய ஒரு கழகமாக இருந்தாலும், தீர்மானங்கள் என்பது அரசுகளின் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானமாகவே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நாம் கூறும் கருத்து மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அரசுகளின் பிரதிநிதிகள்தான் முடிவெடுப்பதாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிக முக்கியமானதாகும்.

இந்த இடத்தில் தான் நீங்கள் கூறிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னகர்த்தும் தலைவர்கள் ஒரு கருத்தை அல்லது சரியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு  தவறுகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் சுமந்திரனின் ஆரம்பகட்ட வேலையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை அல்லது வரைபை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியரசர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளாத தன்மையும் இருக்கின்றது. கேள்வி என்னவென்றால், தமிழர்களின் நிலைப்பாடுஎன்ன? அதை நாங்கள் எப்படி முன் வைக்கப்போகின்றோம்?

                இந்த நிலைப்பாட்டை மிக விரைவாக வைக்க வேண்டியது கட்டாயம். இந்தக் கூட்டத் தொடர் 2021 பெப்ரவரி 22இல் ஆரம்பித்து, மார்ச் மாதம் 19ஆம் திகதி முடிவடைய இருக்கின்றது. இதில் முக்கியமான 2 நிகழ்ச்சிகளில் இலங்கை பற்றிய விவாதம் வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால் இதற்கான தயார் வேலைகள் எல்லாமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எல்லா வேலைகளும் எதிர்வரும் ஜனவரி மாத முதல், இரண்டாம் வாரங்களில் முடிவடைந்து விடும். எல்லா அரசுகளும், தங்கள் முடிவுகளை – வரைபுகளை தயார் செய்து விடுவார்கள். இதற்கிடையில் தமிழ்த் தரப்பு தங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும். உரக்கவும் கூறவேண்டியுள்ளது. அந்த இடத்திலே தான் இந்த ஒற்றுமை முக்கியம் பெறுகின்றது.

கேள்வி:

               மனித உரிமைகள் கழகத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழியும் போது அவர்கள் தமிழர்களின் மீதான கருணையால் அதனைக் கொண்டு வராமல், புவிசார் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் இலங்கைத் தீவிற்கு அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் இப்படியான நகர்வுகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்று கூறினீர்கள். கடந்த ஐ.தே.க. அரசாங்கம் இருந்த பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசாமல் அவர்களுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 2015இல் அந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட போது நல்ல ஒரு சந்தர்ப்பம் இருந்தும் அதை நாங்கள் நழுவ விட்டு விட்டோமா? அப்படி அதை நழுவ விட்டிருந்தால், இனி அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளதை மக்கள் உணர்கின்றார்கள். அதை நாங்களும் பார்க்கக்கூடியதாய் இருக்கின்றது. இப்படியான காலகட்டத்தில் சுமந்திரன் அரசாங்கத்தைக் காப்பாற்றும் நிலையில் மீண்டும் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பது பெரிய பின்னடைவைக் கொண்டு வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

 பதில்:

                தமிழ்த் தேசிய அரசியல் என்பது மிகவும் பரந்து விரிந்த ஒரு அரசியலாக இருக்கின்றது. தாயகத்தில் இருக்கும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும், புலம்பெயர்ந்த பிரதேசங்களில் இருக்கின்ற பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்களும் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர். பேரம் பேசாது விட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்முற்று முழுதான காரணம் என்று கூற முடியாது. ஏனெனில், புலம்பெயர் செயற்பாடுகளில் இருப்பவர்கள்கூட இவர்களுடன் இணைந்து இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார்கள் என்பதை நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.

              அதேவேளை சுமந்திரனின் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. எனது அனுமானத்தின்படி சர்வதேசம் எதைச் செய்யப் போகின்றதோ அதை தாங்கள் கேட்டு அந்த விடயங்கள் சார்ந்து ஒரு கடிதத்தை எழுதும்போது, அதை செயற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும். அது தான் நடக்கப்போகின்றது. நடந்த தும் நாங்கள் கேட்டு இது நடந்தது என்ற ஒரு தேர்தல்கால அரசியல் (Electoral politics) இற்காக பாவிக்கப்படுகின்றது என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கின்றது. இதைத்  தான் மற்றக் கட்சிகளும் செய்யப் போகின்றன போன்ற தோற்றப்பாடு தெரிகின்றது. சந்தர்ப்பங்கள் வரும். சந்தர்ப்பங்கள் தவறவிடப்படும்.  இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கின்றது.

              இலங்கையின் அரசியல் மட்டுமல்ல, பொருளாதாரமும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மீது தமிழ் மக்கள் எவ்வாறான ஒரு நெருக்கடியை அல்லது அழுத்தத்தைக் கொடுக்கப் போகின்றார்கள் என்பது முக்கியம். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

              இன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்ற கட்சிகள் இணைந்து ஒரு நிலைப்பாட்டை  முன்வைத்து, அந்த நிலைப்பாட்டை சர்வதேச அனைத்து அமைப்புகளும் முக்கியமாக அரசியல் தளங்களில் செயற்படுகின்ற அமைப்புகள் முன்னகர்த்துவார்களாக இருந்தால், ஐ.நா. சபையில் முக்கியமாக மனித உரிமைக் கழகத்தில் இருக்கின்ற நாடுகளுக்கான ஒரு அழுத்தமாகவும், தண்டிக்கப்பட்டவர்கள் தரப்பில் இதைத்தான் கேட்கின்றார்கள் என்ற விடயமும் முன்வைக்கப்படும். ஆகவே இது முக்கியமானதாக இருக்கின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version