Home ஆய்வுகள் “விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார்

“விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார்

விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன.  இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த  பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழிப்புலனற்றோரின் வாழ்விற்கு வழிகாட்டிய அவரை நினைவுகூரும் விதமாக அவரின் பிறந்த தினமான ஜனவரி 4ம் திகதி சர்வதேச பிரெய்லி தினமாக 2019 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை ஒட்டி இலங்கை வடகிழக்கு விழிப்புலனிழந்தோர் சங்க செயலாளர் கிஸ்ணன் மகிந்தகுமார் அவர்களின் நேர்காணல் இங்கு வழங்கப்படுகிறது.

கேள்வி –

தங்கள் அமைப்பை பற்றி…? எத்தனை பேர், எங்கு, எவ்வகை வலு இழப்புகளுடன்? என்பது பற்றிக் கூறுங்கள்?

பதில் –

எமது சங்கத்தின் பெயர் ‘வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்’ வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பார்வையிழந்தவர்களையும், வடக்கில் ஏனைய காரணிகளால் பார்வையிழந்தவர்களையும் உள்ளடக்கி 278 பார்வையற்ற பயனாளிகளுடன் இயங்கி வருகின்றது.

இதில் பார்வையிழப்புடன் இரு கைகளை, இரு கால்களை, ஒரு கையினை, ஒரு காலினை இழந்தவர்களும் உள்ளார்கள். தலைக் காயத்தினால் பார்வையிழந்தவர்களும் உள்ளார்கள். இதில் 81 பெண்களும், 197 ஆண்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

IMG 0408 "விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்" - கிஸ்ணன் மகிந்தகுமார்

பார்வையற்றவர்களை மாத்திரமின்றி அவர்களின் குடும்பங்களிலுள்ள 235 சாதாரண பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளையும் கவனித்து வருகின்றோம். தமிழர்களின் உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுவதால் போராட்ட அமைப்பிலிருந்து பார்வையிழந்த நபர்களை அரசும் ஏற்க மறுத்தது. அடைக்கலம் கொடுக்க பார்வையற்றோர் நலன்பேணும் நிறுவனங்களும் தயக்கம் காட்டியதால், அனைவரையும் அரவணைத்து செயற்படும் நோக்கிலேயே எமது சங்கமானது 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

“விழியின் இழப்பு வாழ்வின் இழப்பல்ல” என்பதே எமது கொள்கை. வாழ்க்கை என்பது போராட்டம். அதில் விழியின் இழப்பு வாழ்வின் இழப்பல்ல. பார்வையிழப்பு பாவத்தின் பலன் என்பார் சிலர். ஆனால் இயற்கையின் சூட்சுமம் புரிந்தவர் இதனை இயல்பாய் கொள்வார்.

ஒரு மனிதனுக்கு ஒற்றைக்கண், ஒற்றைக்காது, ஒற்றை ஈரல், ஒற்றை நுரையீரல், ஒற்றை சிறுநீரகம் என ஒன்றே போதுமானது. ஆனால் இயற்கை இவற்றை இரண்டாய் படைத்திருக்கின்றது. இழப்பு என்பது இயற்கையும் அறியாமல் நிகழலாம். தடுக்க தன்னால் இயலாவிட்டாலும் தற்காப்பிற்காய் இன்னொரு அவயத்தை இழப்பிற்கு ஈடுசெய்ய படைத்தது இயற்கை. முயற்சிக்கு முற்றுப்புள்ளி மூச்சடங்கும்பொழுதுதான் இடவேண்டும். இரு விழியிழந்தால் மொழிபடிக்க வழியென்ன? இன்னொரு வழிக்கு தொடக்கப்புள்ளி வைக்க நினைத்த இயற்கை, லூயி பிரெயில் என்பவரை படைத்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பர். 1809ஆம் ஆண்டு தை 4ஆம் நாள், பிரான்சு நாட்டில் கூப்விரே என்னும் கிராமத்தில் இவர் பிறந்தார்.

இவர் கண்டறிந்த குற்றெழுத்தையே நாமும் பயன்படுத்துகின்றோம். தற்சமயம் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டதால், கணினியின் உதவியுடன் பார்வையுள்ளவர்களுடனான தொடர்பாடலை பேணி வருகின்றோம்

கேள்வி –

தற்போது உள்ள வளங்கள் என்ன?

(பயிற்றப்பட்ட மனித வலு, நிதி, பௌதீக வளங்கள், நிர்வாக ஒழுங்கு)

பதில் –

பிரெய்லி முறை பயிற்சி வழங்கும், தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் வளம் உள்ளது. ஆனால் பௌதீக வளங்கள் போதுமானதாக இல்லை. இட வசதி, பயிற்சியளிப்பதற்குரிய சில கருவிகள். இரு கட்டட வசதி, மின்சார வசதி, சில தளபாட வசதி போன்ற வளங்கள் எம்மிடம் உள்ளது. தகவல் தொழில்நுட்ப பயிற்சியளிக்கும் வல்லமையுள்ள ஐந்து பார்வையற்றவர்கள் வடக்கு கிழக்கில் உள்ளார்கள். ஐந்து பார்வையற்றவர்கள் பிரெய்லி முறை பயிற்சி வழங்கக்கூடிய வல்லமையுள்ளவர்களாக உள்ளார்கள். இந்த பயிற்சிகள் வழியே கல்வி கற்று தற்சமயம் வடக்கிலே பார்வையற்ற இரு சட்டவாளர்களும், சட்டக்கல்வியினை தொடரும் ஒரு மாணவனும் உள்ளார்கள்.

அரச உத்தியோகத்தர்களாக 19 பார்வையற்றவர்கள் பணியாற்றுவதுடன் மூவர் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுகின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே எட்டு அரச உத்தியோகத்தர்களும் இரண்டு ஆசிரியர்களும் உள்ளார்கள். இதனைவிட பல்கலைக்கழக கற்கைநெறியினை பூர்த்தி செய்த ஆறு பேரும் இக் கற்கைநெறியினை தொடர்கின்ற ஒன்பதுபேரும் வடக்கு கிழக்கில் உள்ளார்கள்.

நிதி நிலைமையினை பொறுத்தவரை அவ்வப்பொழுது உதவியளிக்கின்ற கொடையாளிகளின் உதவியினூடாகவே விழிப்புலனற்றவர்களுக்கான எமது செயற்திட்டங்களானது முன்னெடுக்கப்படுகின்றது. யாப்பு அடிப்படையிலேயே எமது சங்கமானது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்பது பார்வையற்றவர்கள் கொண்ட இயக்குநர் சபையால் எமது சங்கமானது நிர்வகிக்கப்படுவதுடன், சமூகப்பணி செய்யும் வெளிநபர்களையும் இணைத்து நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் தத்துவம்கொண்ட ஐவர் அடங்கிய காப்பாளர் சபையால் காப்பளிக்கப்பட்டிருக்கின்றது. மூவர் கொண்ட ஆலோசகர் குழுவால் வழிநடத்தப்படுகின்றது. அத்துடன் சங்கம் சாரா வெளிநபர் ஒருவர் நிதிக்கட்டுப்பாட்டாளராக செயற்படுகின்றார். நிதி விடுவிக்கும்பொழுது பொருளாளருடன், தலைவர் அல்லது செயலாளர் கையெழுத்திடவேண்டும் அதனை நிதிக்கட்டுப்பாட்டாளர் உறுதிசெய்ய கையொப்பமிட வேண்டும். இரண்டாண்டிற்கு ஒருமுறை பொதுச் சபையினரை கூட்டி நிர்வாகத் தெரிவு இடம்பெறும்.

கேள்வி –

பிரெய்லி முறை பயிற்சி பெற்றோர் எத்தனை பேர்? எங்கெங்கு உள்ளனர்?

பதில் –

பிரெய்லி முறை பயிற்சி என்பது இலங்கையில் அனைத்துப் பார்வையற்றவர்களும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சியாக உள்ளது. ஏனெனில் பார்வையற்ற ஒருவர் குற்றெழுத்திலேயோ அல்லது சாதாரண தட்டச்சிலேயோ தான் பரீட்சை எழுத முடியும். இதனால் வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலை சென்ற பார்வையற்றவர்கள் அனைவரும் இப்பயிற்சியினை பெற்றிருக்கின்றார்கள்.

கேள்வி –

வேறு நவீன தொடர்பாடல் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர் எங்கெங்கு உள்ளனர்?

பதில் –

வடபகுதியிலே பார்வையற்ற இருவர் கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறியில் தேசிய தொழில் தகுதிகள் நிலை 4இல் (National Vocational Qualifications – NVQ Level 4) சான்றிதழ் பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் ஆறு பார்வையற்றவர்கள்  கணினி மென்பொருள் கற்கைநெறியில் தேசிய தொழில் தகுதிகள் நிலை 3 இல் சான்றிதழ் பெற்றிருக்கின்றார்கள். இதனைவிட கணினி மென்பொருள் கற்கைநெறியினை கற்ற 45 பார்வையற்றவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் உள்ளார்கள்.

கேள்வி –

எதிர்காலத்தில் எவ்வாறான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்கள் விழிப்புலனற்றோர் வாழ்விற்கு வழிகாட்டும் எனக் கருதுகிறீர்கள்?

பதில் –

இனம்காட்டும் கண்ணாடி (eg – MY Eye 2) தடைகள் காட்டும் பேசும் வெண்பிரம்பு (talking white cane) போன்றன எதிர்ப்படும் தடைகளை இனங்காட்டுவதுடன் எதிர்ப்படும் தடையின் தூரத்தையும் சொல்ல வல்லது. இனங்காட்டும் கண்ணாடியானது எதிர்ப்படும் தடைகளானது மனிதர்களென்றால் அதனைக்கூட இனங்கண்டு சொல்ல வல்லது.

இந்த வரப்பிரசாதம் பார்வையற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதினூடாக எதிகாலத்தில் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழி சமைக்கலாம். நவீன தகவல் தொழிநுட்ப வசதிகளில் திரைவாசிப்பான் (Screen Reader)  சேர்த்து கட்டப்படுவதால் பார்வையற்றவர்களும் அவற்றை கையாளக்கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு- சிமாட் கைத்தொலைபேசிகள், கணினிகள் போன்றன பார்வையற்றவர்களும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய நவீன உலகம் இணையத்திற்குள் சுருங்கி விட்டதால், இத்தகைய வசதிகளினூடாக பார்வையற்றவர்களும் இந்த தகவல் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி நவீன உலகோடு சேர்ந்து பயணிக்க முடியும். இதனைவிட நிறங்களை அடையாளம் கண்டுகொள்ளும் சாதனம், காசொன்றின் பெறுமதியை இனம்காணும் சாதனம் என பல சாதனங்கள் பார்வையற்றவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி –

அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உங்களுக்கு எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றன?

பதில் –

பொதுவாகவே பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளுக்கான கேள்விகள் குறைந்தளவே காணப்படுகின்றது. அதேசமயம் இத்தகைய கருவிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேதான் காணப்படுகின்றது.

பார்வையற்றவர்களுக்குரிய தொழில்நுட்ப கருவிகளை அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றன. இதனால் பார்வையற்றவர்களுக்காக தயாரிக்கப்படும் இலத்திரனியல் கருவிகள் மிகவும் விலையுயர்ந்ததாக காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எமது பார்வையற்ற பயனாளிகளால் இவற்றை பெற்றுக்கொள்ள இயலாது. முற்போக்கு சிந்தனையாளர்கள், உதவும் வசதியுடையவர்கள் பார்வையற்றவர்களுக்குரிய இத்தகைய இலத்திரனியல் கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப பயிற்சியளிப்பதற்கு தேவையான செலவீனத்தை பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

இலங்கை பாடப் புத்தகங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை யூனிக்கோட் முறைக்கு மாற்றினால் அதனை பார்வையற்றவர்கள் திரைவாசிப்பான் தொழில்நுட்ப  உதவியுடன் வாசித்தறிந்துகொள்ள முடியும்.

குறித்த காலம் ஒரு பணியாளர் சம்பளத்தினை பொறுப்பேற்க யாரேனும் முன்வருவதினூடாக இக்காரியத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அரச கல்வித் திணைக்கள பரீட்சைகளை கணினி மயமாக்கினால் பார்வையற்றவர்கள் பார்வையுள்ள எவரினதும் உதவியின்றி சுயமாகவே தேர்வில் பங்குகொள்ள முடியும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுத்தருவதற்கு உதவவேண்டும்.

Exit mobile version