ஜனாஸா தகனம் விவகாரம் – கிளிநொச்சியில் போராட்டம்

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்புப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.

கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இதையடுத்து சிசு தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக வழக்கு ஒன்று இலங்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்,  ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதோடு, பதாதைகளும் ஏந்தப்பட்டுள்ளன.

குறித்த போராட்டத்தில், பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.