Tamil News
Home ஆய்வுகள் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 5)...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 5) – புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

கிளிநொச்சியில் நான் ஆசிரியனாகப் பணியாற்றிய காலங்களில், பளையிலிருந்து கிளிநொச்சி வரையிலான எனது அன்றாடப் பேருந்துப் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட ஆனையிறவுப் பாலச் சோதனைச் சாவடி அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

ஒரு நாட்டின் இராணுவக் கலாச்சாரத்தை அதுவும் ஓர் இனவெறியின் கோர முகம் தாங்கிய, மானிடத்தை மதிக்காத மக்களை அலட்சியப்படுத்தி, அவர்களை அச்சத்தின் பிடியில் நடுங்க வைக்கின்ற ஓர் இராணுவக் கலாச்சாரத்தை நேரிற் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதே இக்காலத்திற்தான். என் போன்ற மிகவும் காருண்யக் கொள்கைகளை நம்பி வாழுகின்றவர்கள் எதிர்கொண்டு அனுபவித்து, கஸ்டங்களையும், கனங்களையும் நான் கண்டதே இக்காலத்திற்தான்.

குறிப்பாக இளம் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் இராணுவத்தின் பார்வைக்கும்,  அவர்களது அதட்டல்களுக்கும் ஆளாகும்போது, அவர்கள் ஏதோ அடுத்த தேசத்துப் பிரஜைகள் போன்ற ஓர் உணர்வுக்கு உட்படுவதை நான் பல தடவைகளில் கண்டு பொருமியிருக்கிறேன்.

நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த காலங்களில் சங்கானைக் காவல் நிலையத்தைக் கடக்கும் போது, ஏதோவொரு பயம் எம்மைச் சூழ்ந்து கொள்ளத் தவறுவதில்லை. இத்தனைக்கும் ஒரு தவறும் இழைக்காத போதுகூட ‘பொலிஸ்காரன்’ என்றாலே பயப்படுகின்ற ஒரு சந்ததியில் வளர்ந்த இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

பொலிஸையோ, இராணுவத்தையோ எதிர்த்துப் பேசும் வல்லமையோ, வாழ்க்கைப் பின்னணியோ இல்லாத பயந்தாங் கொள்ளிகளாகவே நாம் இருந்தோமென்பதை என்னால் மறந்துவிட முடியாது.

இரவில் தனியே போவதற்கு அஞ்சியவன் நான். ஒரு நாயைக் கல்லால் அடிப்பதற்குக்கூடத் துணிவற்று, நாய், பூனை, புறாக்களின் துன்பம் கண்டு விழிநீர் வடித்த அனுபவங்கள் எனக்கு உண்டு. ஒரு பூச்சியையோ புழுவையோ நசுக்கும் சுபாவமோ, மனோபாவமோ அற்ற ஒரு பண்பாட்டில் என் தாயால் வளர்க்கப்பட்டவன் நான். புறாவினைக் கூண்டில் அடைக்க முயன்றதற்காக என் தாயால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் நான்.

1970களின்  முற்பகுதியில் எனது கொழும்பு வாழ்வின் போது யாழ்ப்பாணம் –கொழும்பு தொடருந்திற் பயணம் செய்யும் வேளைகளிலெல்லாம் சிங்களப் பௌத்த இராணுவ முகங்களையும், இவை சார்ந்த ஏனைய காடைத் தனங்களையும் நான் சந்தித்துள்ளேன். எனினும்.. இத்தனைக்கு மத்தியிலும் என்னால் சாதாரண சிங்கள மக்களையோ அல்ல பௌத்த மதத்தையோ – புத்தரின் அன்புக் கொள்கைகளையோ வெறுக்கும் உளப்பாங்கினைப் பெறமுடியவில்லை. யாரையும் வெறுக்கும் கலாச்சாரத்தை எமது பள்ளிக் காலத்திலோ, கல்விக் காலத்திலோ நாம் பெறவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போல 1956இன் சிங்கள மொழித் திணிப்பு, 1958இன் கொடிய இனக்கலவரம் எனத் தொடர்ந்து இழைக்கப்பட்ட பல அநீதிகளை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதனைப் பின்னின்று நிகழ்த்திய சிங்கள இனவாதக் கட்சிகள், அவற்றின் தலைமைகள், அரசுகள், ஆட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், ஊடகங்கள், கூலிப்படைகள் என இவற்றின் மீது எனக்கு வெறுப்பும் அதிருப்தியும், விரக்தியும் விளைந்ததேயொழிய, சாதாரண சிங்கள மக்கள் மீது எதுவித காழ்ப்பும், கசப்பும் உருவாகவில்லை. ஏவி விட்டவர்களையும், ஏவப்பட்டவர்களையும் இனங்காணும் ஓர் உணர்வு நிலை எமக்கு எப்போதும் இருந்தது.

எனது இளமைக்காலக் கவிதை, கலைப் படைப்புகளில் எமது சொந்த இனத்தில் காணப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக்கெதிராகவே எமது படைப்புகள் யாவும் இருந்து வந்தன எனலாம். சாதி, சமய, இட ஏற்றத் தாழ்வுகள் மலிந்த ஒரு சமுதாயமாக திகழ்ந்த தமிழர் சமுதாயத்தினைத் தட்டியெழுப்புகின்ற ஒரு தாகமே பல இளங் கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் இதயங்களில் இடம்பிடித்தன என்றால் அது மிகையாகாது.

பெண்ணடிமை, சீர்வரிசைக் கொடுமை, தீண்டாமை என்னும் தீச்சுவாலைகள் பற்றிக் கொண்ட ஒரு தாழ்வுற்ற சமுதாயமாகவே இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் தன்னை இயக்கி வந்தது ஒரு மிகவும் கசப்பான வரலாற்று உண்மையாகும்.

சமபந்தி போசனங்கள், ஆலயப் பிரவேசங்கள், கலப்புத் திருமணங்கள் என்னும் தலைப்புகளின் கீழ் தமிழ்த் தேசிய வாதம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

இதன் விளைவாக, திராவிடக் கொள்கை, மாக்சிசக் கொள்கை, நாத்திகக் கொள்கை, மதமாற்றங்கள் எனப் பற்பல பக்க விளைவுகள் எம்மிடை வந்து புகுந்து கொண்டன. இதன்வழி தமிழ்த் தேசியத்தின் தமிழர் தொல்குடி வரலாற்றின் ஆணிவேர்கள் நீரின்றிக், காற்றின்றி, நிலத்தின் வளமின்றி வாடிவந்தன. ஒருமுனையில் சிங்களப் பௌத்த இனவாத அரசியல், மறுமுனையில் தமிழ் சமுதாயச் சீர்கேட்டுக்கெதிரான அறச் சீற்றம். இவற்றின் மத்தியில் ஈழத்தமிழினம்.

உண்மையில் கூறப் போனால், நாம் சிங்கள மொழியைக் கற்காமல்போனதற்குக் காரணம், சிங்கள மொழி மீதோ, சிங்கள மக்கள் மீதோ நாம் கொண்ட வெறுப்பல்ல. சிங்கள மொழித் திணிப்பின்மீதும், சிங்களப் பௌத்த இன, மத வெறியர்களின் சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் அடிப்படை மனித உரிமைகட்கும் எமது தேச, தேசிய தெய்வ இறைமைகட்கும் எதிரான கெடுபிடிகள், கொடூரச் செயல்களின் மீது நாம் கொண்ட அதிருப்தியும், அருவெருப்புமே என்று கருத முடியும்.

அறியாமையும், ஆற்றாமையும், ஆதிக்க வெறியும் கொண்ட சிங்களத் தலைமைகளை அகிம்சை முறையில் சனநாயக முறையில் சமரச, சமத்துவக் கோட்பாடுகள் மூலம் கையாளலாம் என்ற குருட்டு நம்பிக்கையுடன் தான் நாமும், அக்காலத்தில் வாழ்ந்து வந்தோம்  என்பதே ஒரு வரலாற்று உண்மையாகும்! தமிழர்கள் தோலில் செருப்புத் தைப்பேன் என்றவர்கூடச் சிங்கள அரசியற் கூடாரத்தில் வலம் வந்த ஒரு வரலாறு உண்டு.

இதேவேளை, தமிழர்களிற்கான உரிமைகளை அவர்களது நியாயமான கோரிக்கைகளை வழங்குவது சிங்கள அரசுகளின் முக்கிய பொறுப்பும், கடமையும் என வலியுறுத்திய சிங்கள இடதுசாரியமைப்புகளு, அக்காலத்தில் எம்முட் பலரை ஈர்த்து வந்துள்ளன என்பதனை ஈண்டு குறிப்பிட்டேயாக வேண்டும்! எனினும் இந்த நல்ல உள்ளங்களின் கொள்கைகளை சிங்களப் பெரும்பான்மையின் அரசியற் கலாச்சாரம் ஏற்றுக் கொண்டதாக இல்லை. தமிழர்களோடு நெருங்கிப் பழகிய அதுவும் நட்பு நிலையில் – உறவு நிலையில் நெருங்கிப் பழகிய சிங்கள மக்களாலும் ஊடக நிறுவன சக்திகளாலும்கூட தமிழினத்திற்கு எதிரான – எமது தேசிய இறைமைகட்கு எதிரான – தமிழர் தம் தொல்குடி வரலாற்றுத் தொன்மைக்கும், தொடர்சிக்கும் எதிரான கூச்சல்களையும், கூப்பாடுகளையும், குற்றங்களையும் தடுக்கவோ, தணிக்கவோ முடியவில்லை! இதன் பின்னணியில்.. எவராலுமே முடியாததால், சிங்கள இனவாத அரசியலைப் பொறுத்தவரை எமது இளமைக்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளேயென்ற வாதமே வலுப்பெற்று வியாபித்து நின்றதெனலாம்.

இந்நிலையில்தான், கல்விக் கொள்கைகளிற் தரப்படுத்தல் என்னும் தீப்பந்தம் தமிழின சந்ததியின் மீது எறியப்பட்டது. பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை தமிழர்களின் கல்வித் தகைமைகள், திறமைகள் ஆற்றல்கள் இவற்றில் பற்றிய தீ ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டதெனலாம். அரசியல் மொழிக்கான ஒரு மாற்றம் தேவையெனும் நிலை ஈழத் தமிழர்கள் மத்தியில் முகிழ்த்து முனைப்படைந்தது.

1972 என நம்புகிறேன்! நான் அப்போது கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாட் காலை யாழ்ப்பாணம் பஸ்தரிபில் நின்று கொண்டிருந்தேன்.

(தொடரும்….)

Exit mobile version