Tamil News
Home செய்திகள் அரசுக்கு மீண்டும் காலக்கெடு பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பு முயற்சி – கஜேந்திரகுமார்

அரசுக்கு மீண்டும் காலக்கெடு பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பு முயற்சி – கஜேந்திரகுமார்

“அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்துவருகின்றார்.

வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார்.

இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன.

மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.

Exit mobile version