Tamil News
Home செய்திகள் வரவு செலவு வாக்கெடுப்பும் – வழுக்கிய ‘தமிழ்’ கட்சிகளும் – செய்தி ஆக்கம்- பிரபா

வரவு செலவு வாக்கெடுப்பும் – வழுக்கிய ‘தமிழ்’ கட்சிகளும் – செய்தி ஆக்கம்- பிரபா

தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு குரல்கொடுப்பதாக கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வண்ணமே அமைந்துள்ளது.

சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பாதுகாப்புக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை.

தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை தொடர்புகெண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானது அல்ல எனவே வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு ஆதரவானது என்பதற்காக கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போட்டுவரும் அரசின் வரவுசெலவுத் திட்டத்தை தமது கட்சி மௌனமாக ஆதரித்துள்ளது என்பதை அவர் கூறவில்லை. எனினும் மாகாணசபைக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் என்ன இடம்பெற்றது என்பதை அவர் இந்த கலந்துரையாடலில் கூறிவிட்டார். வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவு ஏற்கனவே புதுடில்லியில் எடுக்கப்பட்டு விட்டதுடன் அது தொடர்பில் கூட்டமைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறீலங்காவில் உள்ள இந்தியா கவுஸ் இல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்திருந்தார். அது மட்டுமல்லாது கூட்டமைப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு ஒன்றும் விரைவில் இடம்பெறவுள்ளது. இந்தியா மீண்டும் தனது பழைய கொள்கையை பயன்படுத்துகின்றது. தமிழ் மக்களின் அரசியலை பயன்படுத்தி சிறீலங்கா அரசுக்கு செய்தியை அனுப்ப முற்பட்டுள்ளது.

எனவே தமிழ் அரசியல் கட்சிகளின் பேச்சுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களும், தேசியச் செயற்பாட்டாளர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டுள்ளது என அரசியல் அவதானி ஒருவர் இலக்கு மின்னிதழுக்கு கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு அமைவாக நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறும்முகமாக எமது ஊடகக் குழுவினர் கடந்த வாரம் நேர்காணல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் செயல்பட்டனர் என்பது தொடர்பில் ஐந்து கேள்விகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்னேஸ்வரனிடமும் கருத்துக்ககளை கேட்டிருந்தோம்.

நாம் முன்வைத்த கேள்விகள் வருமாறு:

கேள்வி: வரவு செலவுத் திட்டத்தின் போது பாராளுமன்றத்தில் அரசை எதிர்த்து காரசாரமாக உரையாற்றியவர்கள், அதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பை காட்ட தயங்கியது பேச்சு ஒன்று செயல் ஒன்றாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகாதா?

கேள்வி

முள்ளிவாய்க்காலின் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்த மக்களின் விருப்பங்களுக்கு அபிலாசைகளுக்கு மாறாகவே செயற்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதுவே வரவு செலவு திட்ட விவாதத்திலும் இடம்பெற்றுள்ளது. இது எப்படி சனநாயகமாக இருக்க முடியும்? வழிகாட்டுவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான எங்களது விடுதலை அமைப்பின்றிப் போனதே இதற்கான பிரதான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

கேள்வி: சிறீலங்கா அரசின் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் நீங்கள், அந்த படையினருக்கு அதிக நிதியை ஒதுக்கி ஒரு திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தயங்கியது ஏன்?

கேள்வி: வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என இந்தியா கூறியதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கொழும்பில் இருந்து வெளிவரும் சன்டே ரைம்ஸ் என்ற ஊடகத்திற்கு வழங்கிய கருத்து தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

கேள்வி: தமிழர்களின் இன்றைய தேவை இணக்க அரசியலா? நடுநிலை அரசியலா? எதிர்ப்பு அரசியலா? என்ற கேள்வி தமிழ் தேசியக் கட்சிகளிடம் இன்று எழுந்திருப்பது பேரினவாத அரசியலிடமும் பிராந்திய அரசியலிடமும் சரணாகதி அடைந்துவிட்டதன் வெளிப்பாடாக கொள்ளலாமா?

இந்த கேள்விகள் பின்வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்டது.

திரு எம். சுமந்திரன்

திரு செல்வம் அடைக்கலநாதன்.

திரு எஸ். சிறீதரன்

திரு சார்ள்ஸ் நிர்மலநாதன்

திரு வினோ நோகராதலிங்கம்

ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் தர மறுத்த உறுப்பினர்கள், கேள்விகளை வாசித்த பின்னர் எமது ஊடகவியலாளர்களின் அழைப்புக்களை துண்டித்து விட்டனர். கடந்த வாரம் முழுவதும் நாம் பல வழிகளில் முயற்சித்தும் அவர்கள் அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.

சில சந்தர்ப்பங்களில் நேரிடையாக தொடர்பு கொண்டபோது பதிலளிக்காதவர்களுக்கு அவர்களின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ஊடாக முயற்சி செய்தோம். அதற்கும் அவர்கள் பதில் தர மறுத்து விட்டனர்.

சிலர் பதில் தருவதாக கூறியபோதும், கேள்விகளை பார்த்த பின்னர் அதனை முற்றுமுழுதாக நிராகரித்து ஒளிந்து கொண்டனர். ஒரு நாளில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் இவர்கள், இந்த கேள்விகளை பார்த்ததும், தப்பியோடியதன் மூலம் அவர்கள் மக்களை ஏமாற்றுவது வெளிப்படையாக தெரிகின்றது.

கட்சித் தலைமையிடம் தான் இந்த கேள்விகளை கேட்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

வாக்களிக்கும் போது நான் அங்கு இருக்கவில்லை, சிறீதரனிடம் தான் கேட்க வேண்டும் கேட்ட பின்னர் கூறுகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் பின்னர் பதில் தரவில்லை.

இருந்தபோதும் பின்வரும் இரு கேள்விகளுக்கு சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகின்றோம்.

கேள்வி

முள்ளிவாய்க்காலின் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்த மக்களின் விருப்பங்களுக்கு அபிலாசைகளுக்கு மாறாகவே செயற்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதுவே வரவு செலவு திட்ட விவாதத்திலும் இடம்பெற்றுள்ளது. இது எப்படி சனநாயகமாக இருக்க முடியும்? வழிகாட்டுவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான எங்களது விடுதலை அமைப்பின்றிப் போனதே இதற்கான பிரதான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

பதில்: சிக்கலான கேள்வி, வேறு கேள்வி தரமுடியுமா?

கேள்வி: வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என இந்தியா கூறியதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கொழும்பில் இருந்து வெளிவரும் சன்டே ரைம்ஸ் என்ற ஊடகத்திற்கு வழங்கிய கருத்து தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: கேள்வி தெளிவில்லாதது.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்னேஸ்வரனிடம் கேட்டபோது, தான் தனது நடவடிக்கைக்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்து பதில் தர மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவங்களின் ஊடாக நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அதாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலனர்களின் பேச்சுக்கும் செயற்பாடுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. அதாவது தமிழ் மக்களை அவர்கள் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர்.

Exit mobile version