Tamil News
Home செய்திகள் இலங்கையில் முஸ்லிம்கள் உடல் தகனம்: உதவிக்கு முன்வந்த மாலைதீவு

இலங்கையில் முஸ்லிம்கள் உடல் தகனம்: உதவிக்கு முன்வந்த மாலைதீவு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிராக தகனம் செய்யப்படுவது சர்ச்சைக்குள்ளான நிலையில், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய உதவுவதற்கு மாலத்தீவுகள் முன்வந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தகனம் செய்ய இலங்கை சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைக்கு மாறாக இலங்கை அரசு வலுக்கட்டாயமாக தகனம் செய்ததால் சர்ச்சையானது.

அண்மையில், இலங்கையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 20 நாள் குழந்தை உட்பட குறைந்தது 15 முஸ்லீம்களின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு மாறாகவும் தகனம் செய்யப்பட்டதை அடுத்து அம்மக்களிடையே கோபம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்களை இலங்கையில் அடக்கம் செய்ய மாலத்தீவு அரசு முன்வந்துள்ளது.

முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய இறுதிச் சடங்குகளை எளிதாக்குவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் சிறப்பு கோரிக்கையின் பேரில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முஹமது சோலிஹ் மாலத்தீவு அரசு அதிகாரிகளை ஆலோசித்து வருவதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்தார்.

இது குறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், அதிபர் சோலிஹின் முடிவு இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள உதவுவதை உறுதி செய்வதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்துல்லா ஷாஹித் கூறுகையில், “இந்த உதவி எங்கள் இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு அன்பானவர்களை அடக்கம் செய்வதில் ஆறுதல் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version