Tamil News
Home செய்திகள் ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன்

ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம்

இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயக விழுமியங்களை எவ்வகையில் பாதிக்கும் என்ற வினாவை எழுப்புகின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்பதே மிகப் பெரிய சவாலான விடயம். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம். தமிழர்கள், வேறு சமூகத்தினருக்கு வேறு ஒரு சட்டம் என்ற பன்முக சட்டங்களை அங்கு நாங்கள் பார்க்கின்றோம். பொதுவாக நோக்கின், இந்த 20ஆவது சட்டத் திருத்தம் என்பது அரசியலை மீண்டும் 1978ஆம் ஆண்டிற்கே திரும்ப அழைத்துச் செல்கின்றது என்று தான் பார்க்கின்றேன். காரணம் என்னவெனில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னதான ஜே.ஆர். காலத்திற்கே ராஜபக்ஸ குடும்பத்தினரும் அதாவது பிரதமரான மகிந்த ராஜபக்ஸவும், அவரின் சகோதரரான ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவும் திரும்பவும் செல்கின்ற நிலையை அழுத்தம் திருத்தமாகப் பார்க்க முடிகின்றது.

இந்த திருத்தச் சட்டத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட முழு அதிகாரத்தையும் ஒரு தலைமையின்(பிரதமரின்) கீழ் கொண்டு வருவது என்பது தான். ஜே.ஆரிற்கு இரண்டு வகையில் எதிர்நிலைகள் இருந்தன. ஒன்று தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு இருந்தது. மற்றையது சிங்களவர்கள் தரப்பில் ஜே. ஆரிற்கு மிகப் பெரிய எதிரலை ஒன்று இருந்தது உண்மை. சோசலிச தத்துவாத்தம் மற்றும் உழைப்பாளர் சங்கங்கள் போன்ற அனைத்துமே அவருக்கு எதிரான நிலையில் இருந்தன. ஒரு முதலாளித்துவ அடிப்படையிலான அதிகாரத் தன்மையை அக்காலகட்டத்தில் பார்க்க முடிந்தது. சிங்களப் பேரினவாதம் என்பது ஜே.ஆரிற்கும், ராஜபக்ஸ குடும்பத்தினருக்கும் பொருந்தும். இந்த 20ஆவது திருத்தச் சட்டமானது நீதித்துறை, காவல்துறை ஜனநாயக அரசியல் கட்டமைப்பு என்பவற்றை அதிகாரமற்ற ஒரு நிலைப்பாட்டிற்கே கொண்டு போகும்.

18ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஒரு சில நிலைப்பாடுகள் 20ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவது, அத்துடன் பாராளுமன்ற அதிகாரம், நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் தேசிய அதிகாரத்தை பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயகத்திற்கு பாதிப்பு என்பதுடன், ஒரு குடும்ப அரசியல் அதாவது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரு தனிநபர், ஒரு கட்சி, ஒரு குடும்பத்திடம் உள்ளதை நாங்கள் பார்க்கிறோம். கட்சி என்பதுகூட ஒரு குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. பௌத்த குருமார்கள்கூட இதை எதிர்ப்பதாக சாட்சியங்கள் உருவாகியிருக்கும் நிலையிலும், இவற்றை எல்லாம் கடந்து இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை  நாங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.  ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலில் நிலைபெறுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்.  அத்துடன் அவர்களுக்குத் தேவையான நேரங்களில், அவர்களுக்குத் தேவையான சட்டத் திருத்தங்களை புதிதாக கொண்டுவரக் கூடிய வாய்ப்புகளும் இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் அதிகாரம் ஒரு உச்ச நிலையில் இருப்பதை நாங்கள் பார்க்க முடிகிறது.

வெளிநாட்டு இராஜதந்திர உறவுகளைப் பார்த்தால், அவை இவர்களுடன் புதியதொரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.  இந்த நிலை இந்தியாவிற்கு சாதகம் என்பதை விட பாதகம்கூட உள்ளது. ஏனெனில், முழு அதிகாரமும் ராஜபக்ஸ குடும்பத்தினரிடம் இருக்கும் போது, அவர்கள் எந்தவொரு முடிவையும் உரியவர்களிடம் கலந்தாலோசிக்காது; அதாவது பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியினரிடம், வடக்கு கிழக்கு தமிழர்களுடன் ஆலோசிக்காது, குடும்ப ஆதிக்கத்தைப் பயன்படுத்தி எடுப்பார்கள். தமிழர்களின் அபிப்பிராயங்களை அவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயக அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் இந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும்.

அப்படியான தன்னிச்சையான ஒரு முடிவை ஜனாதிபதியின் அதிகாரத்துடன் எடுக்கும் போது,  இந்தியா இவை அனைத்தையும் கவனத்தில் எடுக்கும் என நாம் நினைக்கின்றோம். அத்துடன் புவிசார் அரசியலில் இராஜதந்திர முடிவுகளை எடுக்கும் போது, அது கொழும்புத் துறைமுகமாக இருக்கட்டும், அல்லது திருகோணமலைத் துறைமுக விவகாரமாக இருக்கட்டும், புவிசார் அரசியலாக இருக்கட்டும், மேற்கத்தைய நாடுகளுடனான உறவுகளாக இருக்கட்டும் இவை அனைத்தையும் இந்தியா உன்னிப்பாகவும், கவனமாகவும் நோக்கும் என்று நாங்கள் பார்க்கின்றோம்.

 ஆனால் அமெரிக்கா, மேற்குலக நாடுகள் போன்றவை இலங்கையின் போக்கிற்கு துணை நிற்குமா? அல்லது எதிர்வினை ஆற்றுமா? என்று சிந்திக்கும் பொழுது, இதில் மனித உரிமை சார்ந்த விடயங்கள்கூட நிறைய அடங்கியிருக்கின்றன. இவை என்னவெனில், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, அரசியலில் உள்ள நீதித்துறை, அரசு அதிகாரம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கும் பொழுது,  அதாவது இலங்கை ஒற்றைப் பண்பைக் கையாளும் பொழுது -ஒரே குடும்பம், ஒற்றைத் தலைமை, ஒற்றை அரசியல் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொழுது – ஒரு சர்வாதிகாரம் தான் இலங்கையில் ஓங்கும் என்பதை சர்வதேசம் உணரும். அதை இந்தியாவும் உணரும் என நான் நம்புகின்றேன்.

இந்த நிலையிலிருந்து அடிப்படையான மனித உரிமைகளை எடுத்துரைப்பதற்கும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கையாள்வதற்கும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இதைக் கவனத்தில் கொள்வதற்கான  முக்கிய காரணமும் இருக்கின்றது. தற்போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்பில் இருக்கின்ற, அவர்களுக்கு எதிரான தீர்மானங்களில், தீர்ப்பாயங்கள், விசாரணைகளில் தேக்க நிலை இருக்கும் போது அமெரிக்க, மற்றும் மேற்குலக நாடுகள் இந்த தேக்க நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்றும் நாம் நம்புகின்றோம்.

சிங்களப் பேரினவாதம், குடும்ப அரசியல் இவை அனைத்தும் தமிழ் மக்களின் தேசிய உரிமையை முற்றாக நசுக்கி விடும் என்பதுடன், இதற்கான எதிரலை தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் என்றும் நாம் அவதானிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம், தனிநபர் அரசு அதிகாரம், ஒற்றை அரசியல் பண்பு இவை அனைத்தும் தமிழ் மக்களை ஒரு புதிய அரசியல் களத்தினை உருவாக்கவும், மற்றும் எழுச்சிகரமான அரசியல் தளத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பாக உள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். எல்லாவிதமான  சோதனைகளான காலங்களும் நமது சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன.

இந்த 20ஆவது திருத்தச் சட்டம், இலங்கை அரசியலில் சிங்கள பேரினவாதத்திற்கு சாதகமாக இருந்தாலும், சிங்கள மக்களிடையேயும் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றதை நாங்கள் பார்க்கின்றோம். இந்தச் சட்டத் திருத்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும் தமிழர்களின் நிலைகளை பார்த்தால். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமை, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள், அரசியல் சூழ்நிலைகளில் இன்றைய நிலையில் 20ஆவது சட்டத் திருத்தத்தின் பின் தமிழர்களுக்கு எவ்வாறான ஒரு நிலைப்பாடு இருக்கின்றது என்பதை நோக்குவதுடன், அரசியலில் ஒரு புதிய களத்தினையும் தளத்தினையும், வாய்ப்புக்களையும் உருவாக்க சிந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.

20ஆவது சட்டத் திருத்தம் இலங்கை அரசியலில் ஒரு புதிய மாற்றமாக இருக்கும் என நான் பார்க்கவில்லை. ஜே.ஆர். காலத்தில் 1978இல் கொண்டுவரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் அடங்கிய அரசியலை மகிந்த குடும்பத்தினர் மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர், ஆனால் இப்போது மிகவும் ஆழமான சிங்களப் பேரினவாதம் ஒரு உச்ச நிலையில் உள்ளது.  தனி ஒரு மனிதனுக்குரிய – ஜனாதிபதிக்கு உரிய – அதிகாரம், அனைத்து அரசியல் அமைப்புகளின் அதிகாரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு சர்வாதிகாரப் போக்கான அரசியலில் இலங்கை சென்று கொண்டிருப்பதைப்  பார்க்கிறோம். தமிழர்கள் உலக அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் தமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான கருவிகளைத் தேட வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற கருத்தினைத் தான் முன்வைக்க விரும்புகின்றேன்.

Exit mobile version