ஈழத்தமிழர் மனித உரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை

இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’  இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

மறுநாள் 10ஆம் திகதி  உலகின் முக்கியமான நாள், ‘அனைத்துலக மனித உரிமைகள் தினம்.’.

ஆயினும் இந்த அனைத்துலக மரபுசாசனங்களுக்கோ அல்லது அனைத்துலக சட்டங்களுக்கோ, முறைமைகளுக்கோ சிறிதளவேனும் மதிப்பளிக்காது ஈழத்தமிழர்களைச் சிறீலங்கா இனஅழிப்புச் செய்து, இன்று இனத்துடைப்புச் செய்து வருவது உலகறிந்த உண்மை.

சிறீலங்கா  தனது ஈழத்தமிழின அழிப்பின் உச்சமாக 2009 இல் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழின அழிப்பை நடாத்தி, ஹிட்லரை விட மோசமான இனஅழிப்பு வரலாற்றை 21ஆம் நூற்றாண்டில் பதிவு செய்து கொண்டது.

அதனை இன்று வரை உலகநாடுகளும் அமைப்புகளும் உண்மை கண்டறியும் முறையிலோ, நீதியை நிலைநாட்டும் வகையிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு புனரமைப்பை வேகப்படுத்தும் நிலையிலோ நெறிப்படுத்தி விரைவாக ஒழுங்குபடுத்தாது வெறுமனே வழிகாட்டல் முறைமைகளையே மேற்கொண்டு வருகின்றன.

இதனால் உற்சாகமடைந்த சிறீலங்கா இன்று இனத்துடைப்பை இலக்காகக் கொண்டு   ஈழத்தமிழ் சிவில் சமுகத்தினரைப் பலவழிகளில் தொல்லைப்படுத்தியும், ஈழத்தமிழ் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை இராணுவமயப்படுத்திய சூழலில் இனங்காணக் கூடிய அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியும்  அவர்களின் உள்ளக தன்னாட்சியை நிராகரித்து வருகிறது. இது மனித உரிமை சாசனத்தின் ‘மக்களின் உரிமை’க்கு எதிரான குற்றம்.

கோவிட்-19இற்குப் பின்னரான மனித உரிமைகள்,  வேறுபாடற்ற சேவைகளையும் வழங்கல்கல்களையும் உறுதிப்படுத்தலுக்கு முன்னுரிமை கொடுத்தல் மூலமே நடைமுறைப்படுத்தப்படலாம் என்னும் விருது வாக்கியத்துடன், இம்மாதம் 10ஆம் திகதி அனைத்துலக மனித உரிமைகள் தினம் அனைத்துலக மன்றத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கு கோவிட்-19 காலத்திலும் பல்வேறு வேறுபாடுகளும், ஒதுக்கல்களும், விலக்கல்களும் சிறீலங்காவால் இருந்தன என்பதைத் தகவல்கள் உறுதி செய்கின்றன. இதுவும் ஈழத்தமிழரின் உள்ளக தன்னாட்சியை சிறீலங்கா நிராகரித்து, அவர்களின் மக்களுக்கான உரிமையை மீறும் குற்றச் செயலாக உள்ளது.

இந்நிலையில்  ஈழத்தமிழர்கள் தாங்கள் உலகின் குடிகள் என்ற முறையில் தங்களின் உரிமைகள் குறித்த குரலையும் அனைத்துலக மன்ற உறுப்பு நாடுகள் கேட்க வேண்டும்  எனவும், தங்களுக்கு வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக நாடுகள் உடன் உதவ வேண்டும் எனவும் கேட்பது  அனைத்துலக சட்டங்களுக்கும், முறைமைகள், வழக்காறுகளுக்கும் ஏற்புடைய கோரிக்கையே. என்பதை அனைத்துலக நாடுகள் மன்றத்திற்கு உலகத் தமிழர்கள் உணர்த்த வேண்டும்.

ஆனால் இந்தக் கோரிக்கை கேட்கப்படாதிருப்பதற்கு ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைச் சிறீலங்காவின் மனித உரிமைகள் என்ற நோக்கில் எடுத்து நோக்கி, சிறீலங்காவின் இறைமை எல்லைக்குள் அதனது நீதிமுறைமை கொண்டு உறுதிப்படுத்த உலகநாடுகளும், அமைப்புக்களும் முயல்வதே காரணமாகிறது. இதன் விளைவாகவே ஈழத்தமிழர்களுக்கு இனஅழிப்பு முற்தடுப்பையோ, பாதுகாப்பையோ இனஅழிப்புக் குற்றத்திற்கான நீதியையோ உலகால் வழங்க இயலாதுள்ளது. எனவே ஈழத்தமிழர் மனித உரிமை குறித்த சிறப்பான அணுகுமுறை ஒன்று பாலஸ்தீனிய மக்கள் குறித்து எடுக்கப்பட்ட பாணியில் அமைய வேண்டும். பிரித்தானியப் பிரதமர் மாண்புமிகு பொரிஸ் ஜோன்சன் அவர்கள் ஒரு ஆட்சிக்குள் இருவேறான ஆட்சிகள் காலனித்துவ அரசால் உருவாக்கப்பட்ட பிரச்சிகைள் அனைத்துலகப் பிரச்சினையாக இன்று உள்ளன என்ற கூற்றுக்கு உதாரணமாக ஈழத்தமிழர் பிரச்சினை உலகப் பிரச்சினையாகவே தொடர்கிறது. இதனால் ஈழத்தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாகக் கருதி ஈழத்தமிழரின் இன்றைய அதீத மனிதாயத் தேவை நிலையில், 1992இல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் கியூட் அவர்கள் அதீத மனிதாய தேவையில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டின் இறைமையை மீறி உலகநாடுகளாலும்,  அனைத்துலக அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற வகைமைக்குள் உள்ளனர். ஆகவே அனைத்துலக அமைப்புகளும், நாடுகளும் சிறீலங்காவின் இறைமையை மீறி மிகவும் நலிவுற்ற ஈழத்தமிழ் மக்களுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் நேரடியான மனித உரிமைகள் பாதுகாப்பையும்,  புனர்வாழ்வு, புனரமைப்பு உதவிகளையும்  அளிக்க வேண்டும் எனப் புலம்பெயர் தமிழர்கள் குரல் எழுப்பல் அவசியம்.

இதனை விரிவுபடுத்தி ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து, உலகின் பலநாடுகளிலும் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் அனைத்துலக மன்றமும்,  நாடுகளும் தங்களின்  நேரடித் தொடர்புகளை வேகப்படுத்த வேண்டும்.

இதற்கான ஊக்கத்தையும் தகவல்களையும் தொடர்ச்சியான முறையில் உலக மன்றத்திற்கும் உலக நாடுகளுக்கும்  அளிப்பதற்கான வேலைகளையும் புலம்பெயர் தமிழர்கள்  வேகப்படுத்த வேண்டும்.

இந்த இருதரப்பு தொடர்பாடலே ஈழத்தமிழரை இனஅழிப்பில் இருந்து காத்து, இனத்துடைப்பில் இருந்து விடுவித்து அவர்களுக்கும் மனித உரிமைகள் மரபுசாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.