Home ஆய்வுகள் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 3)

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 3)

311 Views

எனது இளமைக் காலத்தில் சங்க, இலக்கியங்களைச்  சாடியவர்களை தரிசித்தவர்களையெல்லாம் அரங்குகளிலும், ஏடுகளிலும், இதழ்களிலும் நான் சந்தித்துள்ளேன்!

தமிழர் தொல்குடி வரலாற்றை நம்பியவர்களும், சங்க இலக்கியங்களை நேசித்தவர்களும் அன்றைய இலங்கையின் கல்வி, கலை, இலக்கிய உலகின் ‘புத்திசீவிகளின்’ முன்னால்  அனுபவித்த சவால்களையும் நேரிற் கண்ட சமுதாயத்தில் வாழ்ந்தவன் நான்!

புலவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களென்றும், கவிதைக்கு உணர்ச்சி தேவையில்லையென்றும் வாதித்த பேராசிரியப் பரப்புரைகளின் மூலம், சங்க இலக்கியங்களின் உண்மைத்தனம் அன்று முற்றுமுழுதாக அறிவியற் பரப்பிலிருந்து அகற்றப்பட்டதை நேரிற் கண்ட அனுபவம் எனக்குண்டு!

தமிழர்களை வந்தேறு குடிகளாய் வரையறுத்தவர்கள், சிங்களப் பௌத்த அரசியல்வாதிகளும், மதவாதிகளும் மட்டுமல்ல, நம்முட் சிலரும்தான் என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை!

தொல்குடி மரபுக்கலைகளைக்கூட சாதி, இடம், குறிச்சி பார்த்து எடைபோட்ட இழிவு நிலையின் சொந்தக்காரர்களும் நாமே என்பதை மறந்து விடக்கூடாது!

கூத்து வடிவங்களையும், குலவழிபாடுகளையும், கலை இலக்கியப் பதிவுகளையும் கூடச் சாதி, இட, மத வேறுபாட்டுக் கண்களினூடு பார்த்த ஒருசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது!

எனவே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தேடலுக்கான உளவியற் பாங்கும் பரப்பும் தோற்றம் பெற்றது எனது இளவயதிலென்றே எண்ணத் தூண்டுகிறது!

எனது பிறந்த ஊரான வட்டுக்கோட்டையில் கலையும், கவிதையும், பாட்டும், கூத்தும் எனப் பல்வகையாலும் பல்வழிகளிலும் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டு வாழ்வியல் விழுமியங்களை யாம் தொடர்ச்சியாக நுகர்ந்து, பகிர்ந்து சுவைத்துச் சுமந்து வாழ்ந்த போதிலும், தமிழர் தொல்லியல் சார்ந்த, வரலாறு சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வையோ எமது இளமைக்காலங்களில் அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு எமக்குப் பெரிதாகக் கிட்டியதில்லை!

ஆகமிஞ்சிப் போனால், எமது கல்லூரி விழாக்களிலும், ஏனைய பொதுமக்கள் கூடுகின்ற கலைவிழாக்கள், கொண்டாட்டங்களிலும் தமிழகத்திலிருந்து அக்காலங்களில் வருகை தந்திருந்த தமிழறிஞர் பெருமக்கள் வரிசையில் கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சிவஞானம், அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார், வெள்ளை வாரணனார் ஆகியோரும் மற்றும் எமது தாயகத்தின் தமிழறிஞர்களின் வரிசையில் வித்துவான் வேலன், வித்துவான் வேந்தனார் க.கி.நடராஜன், வித்துவான் ஆறுமுகம் (ஸ்கந்தவரேதயாக் கல்லூரி) ஆசிரியர் சிவராமலிங்கம்   (யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி) ஆகியோரும் தமிழிலக்கியங்களினூடு தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று விழுமியங்களைப் பேசக் கேட்டிருப்போமேயொழிய இதற்கு மேலாக தமிழர் தொல்லியல் பற்றிப் பேசிய பலர் திராவிடக் கொள்கையைப் பற்றிய நம்பிக்கையையே மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்!

இதற்கு அடுத்த தளத்தில் எமது பல்கலைக்கழகப் பரப்பில் தமிழர் தொன்மை பற்றிப் பேசியும், எழுதியும் வந்த பலரின் பார்வைகள் ஒரு மேற்குலக ஆய்வாளர்களின் வழிமொழிவாகவும், நாத்திக மாக்சியக் கோட்பாடுகளின் எதிரொலியாகவுமே எம்மை வந்தடைந்தன எனலாம்!

இந்நிலையிற் தமிழகத்திலிருந்து எழுந்த ‘திராவிடம்’ பற்றிய கூச்சலும், கூப்பாடுகளும் இப்பதத்தினுள்ளேயே தமிழர் தொல்லியல் வரலாற்றைப் புதைத்து மூடிமறைத்து விட்டதையும் நாம் புறக்கணிப்பதற்கில்லை!

நான் செய்த தவமோ என்னவோ இல்லை என் பிறப்புவழி யானடைந்த பேறின் பலமோ. எமது முன்னோரின் வாக்குகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஒருபோதும் எனது அகப்பீடத்திலிருந்து அகற்ற முடியாதவனாகவே வளர்ந்து வந்தேன்!

ஒரு முதுதமிழ்ப் புலவனுக்கும் எனது ஒன்றரை வயதில் நிகழ்ந்த அவனது மறைவின் பின்னரும் அப்புலவனது சத்திய ஒளியையும், புலமைத்துவ சக்தியையும்  என்னுள் விருத்தி செய்து வியாபிக்க வைத்த என் தெய்வத் தாய்க்கும் பிள்ளையாகப் பிறந்ததன் விளைவாகவும் மட்டுமன்றி, நான்  எனது கல்லூரிக் காலங்களிற் சந்தித்த எனது ஆசான்கள் வழி பெற்ற தற்தேடலின் விளைவாகவும் நான் என் முன்னோர்களின் முகங்களை என்னுட் தொடர்ச்சியாகத் தரிசித்து வந்தேன்!

குறிப்பாக எனக்கு இதுவிடயத்தில் எனது கல்விக் காலத்தில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ஊக்கமும், உந்துசக்தியும், உத்வேகமும் அளித்த அமரர் திரு கைலாயநாதன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையவனாகவேயிருக்கிறேன்!

தமிழர்களுடைய இன அடையாளத்தைப் பூர்வீகத்  தொல்குடி சார்ந்த தொல்லியற் சான்றாதாரங்கள் வழியாகத் தேடும் ஆய்வியற் போக்கு இன்றிருப்பது போல அன்று இருக்கவில்லையென்பதை நாம் ஒருபோதும் புறக்கணித்துவிடக் கூடாது!

எனவே என்னுடைய சொந்தத் தேடலின்  அனுபவத்திற் தொல்குடித் தமிழர் அறிவியல் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றுத் தரவுகள் பதிவுகள், தகவல்களில் நான் கண்ட – காண்கின்ற ஆய்வு அணுகுமுறைகளிலுள்ள மாற்றங்களைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்மாகும்!

தமிழர் தொல்குடித்தேடலை ஊக்குவித்த உளவியற் காரணிகள்:

ஆங்கிலப் புலமையும், அந்நிய அரசியல் இலக்கிய ஆளுமையும் கொண்டவர்களுக்கு முன்னால் தமிழ்த்தேசிய உடையோடு தமிழ்க் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களை இந்தப் புத்திசீவிகளின் கூட்டம் எவ்வாறு நோக்கியதென்பதை நாம் பல இடங்களில் அவதானித்திருக்கிறோம்!

குறிப்பாக மேற்குலக ஆய்வாளர்களும், அறிஞர்களும் பதிவு செய்த, அல்லது பகருகின்ற வரலாற்றுத் தத்துவங்களையும், காலக்கணிப்பீடுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனோநிலை நம்மிடை உலவிய பேரறிஞர்கள் பலருக்கு அன்று இருந்ததை எவரும் மறுத்துவிட முடியாது!

காரணம் நவீன அறிவுலகம் எல்லாவற்றிற்கும் சான்றாதாரங்கள் கேட்கிறது! அதுவும் பௌதீகச் சான்றாதரங்கள் கேட்கிறது! அப்போது தான் உங்கள் தொல்குடி வரலாறு பற்றி நாம் நம்புவோம் என்று வெகுவாக அடம்பிடிக்கிறது! விசித்திரமென்னவென்றால், இதில் ஒருவித நியாயமும் இருக்கிறது!

நகைச்சுவையென்னவென்றால், கேட்பவருக்கு அறுநூறு ஆண்டு வரலாற்றுப் பின்னணிகூட இல்லை! அவர்தான் உலக பூர்வீகக்குடிகளின் தொல்குடி வரலாற்றைப் பதிவு செய்யும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருக்கிறார்! என்செய்வது! எமக்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி இருப்பதை நாம் ஆழமாக உணர்கிறோம்! இதற்கான வரலாற்று ஆவணப் பதிவுகளாக எமது இலக்கியங்கள் சான்று பகர்கின்றன! புலவர்களின் ஒவ்வொரு பதமும் சத்தியத்தின் ஓசையாக எம்முள் ஒருசிலருக்கு மட்டும் செவிகளிற் கேட்கிறது!

இவ்வாறான ஓர் இக்கட்டான சூழலில் முக்கடற்கோள்கள் பற்றியும், கடலில் மூழ்கிய தமிழர் தொல்குடி நாகரீகம் பற்றியும் பேசுவதையே சுத்தப்பட்டிக்காட்டுத்தனமாகக் கருதிய பலர், நம்மிடையே அன்று வலம் வந்திருக்கிறார்கள்!

எனது தனிப்பட்ட அனுபவத்தில் எனது ஊரின் கலை, நாட்டுக்கூத்து, நாடக இயக்கங்கள் இவற்றுடன் எமது மண்வாசனையை எமக்குத் தொடர்ச்சியாக ஊட்டி வந்த நடிகமணி வைரமுத்து, கலைமாமணி சின்னமணி மற்றும் பாசையூர் நாடகக் குழுவினர் ஆகியோரின் ஒப்பற்ற இசை நாடகங்கள் மற்றும் கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, கவியரங்கம், நாடகம் எனும் அவைக்காற்று கலைகளினூடு எனது முன்னோர்கள் பற்றி நான் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்ட அற்புதமன அபரிமிதமான விடயங்கள் அனைத்தும் என்னைத் தமிழ்த் தேச தேசிய தெய்வச் சிந்தனைகளோடும், செல்நெறியோடும் பிணைத்து வளர்ந்தன என்றால், அது மிகையாகாது!

குறிப்பாக அக்காலங்களிற்றான் தமிழகத்தில் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரான தமிழ்நாட்டுக்கான தமிழ்த்தேசிய எழுச்சிக் குரலை சிலம்புச்செல்வர் ம.பொ.சி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் நிகழ்த்தி வந்தார்கள்!

இது இவ்வாறிருக்க, எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தாரின் கூற்றுக்களையும், கொள்கைகளையும் அடியொற்றி, அணிவகுத்த பாரம்பரியம் கொடிகட்டிப் பறந்த காலமொன்று அன்று இருந்துள்ளது! உலகத் தொல்குடி வரலாறு பற்றிய காலக்கணிப்புகள் கூட எம்மீது பிறராற் திணிக்கப்பட்வையாகவே நான் எனது இளமைக்காலத்திலிருந்தே உணர்ந்து வந்திருக்கிறேன்!

இதற்கான இன்னுமொரு காரணத்தையும் நான் ஈண்டு பதிவுசெய்யவேண்டியுள்ளது!

எம்மடையே மலிந்து கடந்த சாதி சமய இடஆணாதிக்க ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக எம்முள் வந்து நுழைந்து கொண்ட நாத்திக மாக்சிய சோசலிச வாதப்பிரதி வாதங்களும் அரசியல் சமூக அலைகளும் எமது தொல்குடிவரலாற்றுத் தேடலுக்கான சூழலைச் சூனியமாக்கன என்றே கருதத் தூண்டுகிறது!

ஆயிரமாயிரமாண்டு காலங்களாகத் தமிழர் தொல்குடியிடம் நிறைந்து கிடந்த அறிவியல் வளங்களை தேச தேசிய தெய்வ வழிபாட்டு வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களையெல்வாம் முற்றுமுழுதாக விழுங்கிக்கொண்ட பலவீனங்கள் சூழ்ந்த ஓரினமாகப் பரிணாமமெடுத்த ஒரு நாத்திகவரலாற்றின் விளைவுகள் பல!

தொழிலேற்றத்தாழ்வுகள் மூலம் வரையறுக்கப்பட்ட சாதிப் பெயர்க்குறியிடுகளையும், ஊர் குறிச்சிப் பிரிவுகளையும் ஆதிக்க அரண்களையும் அணுகுமுறை முரண்களையும் சூடிக்கொண்டு சூளுரைத்த  ஒருமக்களாக எமது தமிழர்குடி தன்னைத்தானே அழித்துக்கொள்ள நின்ற ஒருகாலகட்டத்திற்றான் நாத்திகமும் அந்நிய தத்துவ ஏற்புடைமைக் கலாச்சாரமும் மதமாற்றங்களும் இனஅடையாளத் தேய்வும் தேக்கநிலையும் உருவாக்கம் பெற்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும்!

ஆலயங்கள் சமயபீடங்கள் ஊர்மன்றங்கள் நகர்மன்றங்கள் ஆட்சிமன்றநங்கள் அமைச்சுகள்  கல்விப்பீடங்கள் என இவற்றையெல்லாம் ஊடுருவி நின்ற தொழில் சார் சாதிமயப்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் எல்லைக்கோடுகளுமே எமது வரலாற்றுத்தேடலிற்கான வரம்புகள் வாய்க்கால்களை உடைத்தெறிந்தன் என் நான் எனது இளமைக்காலத்தில் இனங்காணத் தொடங்கினேன்!

தமிழர்தொல்குடி வரலாற்றை அவர்தம் வாழ்வியல் பண்பாட்டு விழுமிய்ஙகளைப்  பிரதிபலித்த அவற்றின் விம்பங்களாக விளங்கிய இலக்கியங்களைக் குடைந்து அவற்றினுள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த மானிடவழுக்களைத் தேடியடைந்து அவற்றை இழுத்துவந்து உரைச்சித்திரங்களாகவுத் எழுத்தோவியங்களாகவும் காட்டிய மேதாவிகளால் ‘மூளைக்கழுவல்’ செய்யப்பட்ட ஒரு மாணவ சமுதாயம் எமது மண்ணில் விருத்திசெய்ப்பட்டது ஒரு கசப்பான உண்மையாகும்!

ஒட்டுமொத்தமாகத் தமிழர் தொல்குடி வரலாற்றை எமது முன்னோர்களின் வாழ்வியல் பண்பாட்டோடு அத்தொல்குடியின் பல்லாண்டுகால உலகியல் இயல்பியல் அனுபவத்தோடு… ஈடுபடுத்தும் ஆற்றலும் ஆளுமையும் அனுபவமுமற்ற அதாவது அவற்றை ஆழமாக ஞான நிலையிலும் பேரறிவு நிலையிலும் பேரன்புநிலையிலும் அகநிலையிலும் புறநிலையிலும்  ஆன்மிக நிலையிலும் பிரதிபலிக்கின்ற பண்டைத்தமிழிலக்கியங்களோடு ஒப்பிடடுப்பார்க்கும் அனுபவமோ அக்கறையோ பொறுப்புணர்வோ அற்ற ஓர் ஆய்வுலகின் ஆதிக்கத்திற்றான் எமது தமிழர்தொல்குடி வரலாறு பற்றிய செல்நெறியும் சொல்நெறியும் அன்று இருந்து வந்துள்ளதை நான் உணர்ந்திருக்கிறேன்!

ஆங்கிலத்திற் சரளமாகப் பேசத்தெரிந்தவரே.. மற்றும் ஆங்கில இலக்கியங்களை நன்கு மனப்பாடஞ்செய்து அரங்குகளிலும் நிகழ்வுகளிலும் ஆற்றுகையும் அளிக்கையும் செய்யவல்லவரே கற்றவர் எனும் நம்பிக்கை ஊட்டப்பட்டு மேற்குலகப் பல்கலைக்கழ்கத்திற் கற்றவரே ‘படித்தவர்’  எனும் பார்வை பரவவிடப்பட்ட காலம் ஒன்று எமது தாயகங்களில் இருந்துள்ளது என்பதை என்போன்ற பலர் தமது அனுபவத்திற் கண்டிருப்பர்!

இதைவிட மிகவும் வேடிக்கையான விடயம் ஒன்றுண்டு!

எமது தாயகநிலங்களுக்கு அந்நியர்கள் வந்ததாற்றான் நாம் அறிவு பெற்றோம் என உறுதியாக நம்பிய பலர் நம்மிடையே ஒருகாலத்தில் இருந்திருக்கிறார்கள் என்றால் அது பொய்யான கூற்றாகாதென நம்புகின்றேன்!

தமிழிலக்கியங்களிற் புதைந்து கிடந்த அறிவியல் நுணுக்கங்களையோ அல்லேல்  பூகோளப்பரப்பிலும் அதனடியிலும் பரவிக்கிடந்த கல்லறைகள்  நடுகற்கள் கட்டடங்கள் வணிக வரலாற்றுச் சின்னங்களையோ கல்வெட்டுகள் செப்பேடுகளையோ தேடிச்செல்லக்கூடிய ஓர் கல்விப்பண்பாட்டைக் கூட நாம் எமது இளவயதிற் சந்திக்கவில்லை!

தமிழில் மேற்படிப்புப் படிப்பதற்குக்கூட வெளிநாடு சென்றவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்!

அரங்க இலக்கியங்கள்  என்று வந்தபோதும் கூட தமிழ் மொழியிலான படைப்பாக்கச் செல்நெறியை நிராகரித்துத் தழுவல்களையே தஞசமடைந்தவர்களும் இருக்கிறார்கள்!

 தமிழர்களை வந்தேறுகுடிகளாய் வரையறுத்தவர்கள் சிங்களப்பௌத்த அரசியல்வாதிகளும் மதவாதிகளும் மட்டுமல்ல நம்முட் சிலரும்தான் என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறுப்பதற்கில்லை!

தொல்குடிமரபுக்கலைகளைக்கூட சாதி இடம் குறிச்சி பார்த்து எடைபோட்ட இழிவுநிலையின் சொந்தக்காரர்களும் நாமே என்பதை மறந்து விடக்கூடாது!

கூத்து வடிவங்களையும் குலவழிபாடுகளையும் கலை இலக்கியப் பதிவுகளையும் கூடச் சாதி இட மத வேறுபாட்டுக் கண்கனினூடு பார்த்த ஒருசமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது!

எனவே தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தேடலுக்கான உளவியற் பாங்கும் பரப்பும் தோற்றம் பெற்றது எனது இளவயதிலென்றே எண்ணத் தூண்டுகிறது!

தமிழர்களுடைய இனஅடையாளத்தைப் பூர்விகத் தொல்குடிசார்ந்த தொல்லியற் சான்றாதாரங்கள் வழியாகத் தேடும் ஆய்வியற் போக்கு இன்றிருப்பது போல அன்று இருக்கவிலலையென்பதை நாம் ஒருபோதும் புறக்கணித்துவிடக்கூடாது!

எனவே என்னுடைய சொந்தத் தேடலின்  அனுபவத்திற் தொல்குடித்தமிழர் அறிவியல் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றுத் தரவுகள் பதிவுகள் தகவல்களில் நான் கண்ட காண்கின்ற ஆய்வு அணுகுமுறைகளிலுள்ள மாற்றங்களைப் பதிவுசெய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்!

-புலவர் நல்லதம்பி சிவநாதன்-

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version