Tamil News
Home ஆய்வுகள் அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்கா திட்டமிட்டுள்ள புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தான் இணைந்துகொள்ளப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகப்பெரும் நாடுகள் தாம் முன்னர் மேற்கொண்ட உடன்பாடுகளை கடைப்பிடிக்கத் தவறுகின்றன. அதிகரித்து வரும் இந்த உறுதியற்ற தன்மை உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

சில பெரிய நாடுகள் தமது அணு ஆயுத மற்றும் ஏவுகணை வளங்களை அதிகரித்த பின்னர் ஒரு உடன்பாட்டில் இருந்து விலகி வேறு ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றன என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லு காங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்னர் ரஸ்யாவுடன் மேற்கொண்டிருந்த ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகிய பின்னர் அதன் அதிபர் டெனால்ட் ரம்ப் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கைக்கு சீனாவை அழைத்துள்ளார் இந்த நிலையில் சீனா தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நகர்வு உலகின் உறுதித்தன்மைக்கு ஆபத்தானது. சீனாவும், ரஸ்யாவும் தமது கூட்டு வியூகங்களை வலுப்படுத்த வேண்டும் என நம்புகின்றன. எனவே சீனாவின் முடிவு தெளிவானது அதாவது சீனா ஒருபோதும் இந்த முத்தரப்பு ஆயுதக்கட்டுப்பாட்டில் இணைந்து கொள்ளப்பொவதில்லை.

1987 ஆம் ஆண்டு ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடுத்தர அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா தன்னிட்சையாக விலகியிருந்தது.

இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் 310 மைல்கள் தொடக்கம் 3,420 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகளை ஏனைய நாடுகளில் நிறுத்துவதில்லை மற்றும் மட்டுப்படுத்துவது என்ற முன்னைய உடன்பாட்டில் இருந்தே அமெரிக்கா வெளியேறியிருந்தது. ரஸ்யா அண்மையில் தயாரித்த 9எம்729 என்ற ஏவுகணை இந்த உடன்பாட்டை மீறியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் ரஸ்யா அதனை மறுத்திருந்தது.

அமெரிக்காவும் சீனாவும் பொருளாதாரப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இந்த சமயத்தில் தற்போது எழுந்துள்ள ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாடு மேலும் விரிசல்களைத் தோற்றுவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version