மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது.

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015முதல் ஹவுதிப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களில் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் கொண்டிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளித்து,  ஆயுதங்கள், பயிற்சிகளை அளிக்கின்றது.

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும், சவுதி இராணுவத்தினருக்கும் இடையே சண்டை ஏற்படவுள்ள நிலையில் கடந்த மே 14ஆம் திகதி, சவுதி அரேபிய அரசிற்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் குழாய் அமைப்பை தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்துள்ளனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் குழாய் ஒழுங்கமைப்பின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இன்று (மே 20) அதிகாலை 4மணிக்கு, சவுதி அரேபிய நகரான டைப் மீது வந்த ஏவுகணை ஒன்றை, சவுதி இராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்து தகர்த்தெறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சிலமணிநேரங்களில் மீண்டும் ஒரு ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர்.

ஜெட்டா நகர் மீது அந்த ஏவுகணை பறந்த போது, சவுதி விமானப்படையினர் இடைமறித்து அழித்தனர். இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்லான் நோன்பு நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளதானது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் இராணுவம் தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை இத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பது உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.