Home நேர்காணல்கள் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின்...

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

861 Views

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது.
சிறீலங்கா அரசின் இந்த ஏமாற்றுத்தனங்களை தகர்த்து அதன் மீது அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகப்பெரும் தடைகளைச் சந்தித்து வருகின்றன.

அவற்றில் முக்கியமானது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒரு அணியில் இணைந்து செயற்பட தயங்குவது தான். அதாவது விடுதலைப்பாதையில் முன்நகர்வதற்கு தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் மிகப்பெரும் தடைகளை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் பிரதிநிதியுமான யஸ்மின் சூக்கா அவர்களுடன் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளத்தின் குழு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

ஏறத்தாள ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பல விடயங்கள் ஆராயப்பட்டன. நாம் யஸ்மின் சூக்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மிகவும் நீண்டதாக அமைந்ததால் அதனை பகுதிகளாக இங்கு தருகின்றோம்.


வினா:
இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற இத்தருணத்தில், போராலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதில், உலகெங்கும் பரந்திருக்கின்ற தமிழ் அமைப்புக்களின் முயற்சிகளை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்

பதில்: இதனைப் பலகோணங்களில் நோக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சியின் மூலம் யார் அதிகமாக சாதிக்கின்றார்கள் என்ற போட்டி மனப்பான்மை அவர்களுக்கிடையில் காணப்படுகின்றது.

சர்வதேச கடமைகளைப் பொறுத்தவரையில் இலங்கை அரசு தனது பங்கை தான் சரிவர ஆற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டுமானால் தமிழ் அமைப்புகள் ஒன்றுபட வேண்டியது கட்டாயமானதாகும்.

தமிழ் அமைப்புக்கள் தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள அரசுகள் சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்வண்ணம் இன்னும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்கலாம். இந்தத் தமிழ் அமைப்புக்கள் தங்களது ஆற்றலை பயன்படுத்துகிறார்களா அல்லது அதனை உணர்ந்துகொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

உதாரணமாக, போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நேரத்தில் ரொறன்ரோ போன்ற ஒரு நகரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது.

ஆகவே கனேடிய, பிரித்தானிய, அமெரிக்க அரசுகள் மட்டில்  இதுவரை எதற்காக அவர்கள் அதிக அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்பது நியாயபூர்வமான வினாவாகும்.

புகைப்படங்கள் எடுப்பதைவிட அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்களால் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்தார்களா என்பது வினாக்குறியே.

மற்றைய விடயம் என்னவென்றால், ஒரு சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருந்தன. இலங்கை அரசு தான் செய்யவேண்டிய பணிகளைச் செய்வதற்கு உரிய அழுத்தங்களை இத்தமிழ் அமைப்புகள் பிரயோகித்தார்களா என்பது தெரியவில்லை.

அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய அவசியம் இருக்கின்றது.

மீண்டும் ஒருதடவை ஐ.நா. ஒரு வெறுமையான தீர்மானத்தை கொண்டுவராமல் இருப்பதற்கும் ஐ.நா. தனது கடமையை சரியாக செய்வதற்கும் தாம் செய்யவேண்டிய ஐந்து விடயங்கள் எவை என்பதை இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து சிந்திக்கலாம்.

நீங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் மட்டில் அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டும் போதாது. அத்துடன் ஜெனீPவாவிற்கு போவதாக இருந்தால் அங்கு போவதன் நோக்கம் என்ன என்பதைப்பற்றியும் ஆராய வேண்டும்.

உண்மையில் ஜெனீவாவில் என்ன செய்யவேண்டும் என்பதையும் அங்குள்ள இடைவெளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இவர்கள் சரியாக புரிந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை பின்னோக்கிப் பார்க்கும் போது, அக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட விடயங்கள் அதிவிசேடமானவை. என்னைப் பொறுத்தவரையில் மற்றைய நாடுகளிலுள்ள ஏனைய போராட்டங்களுக்கு உதவுவதற்கு தமிழ் அமைப்புக்களிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

நவீன கணனி நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தி சிறப்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது வினாக்குறியே.

ஐ.நா. மேற்கொண்ட தீர்மானத்தின் ஏனைய அம்சங்களைப் பொறுத்தவரையில் ஐ.ரி.ஜே.பி. அமைப்பு நாட்டிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் சரி வெளியே இருப்பவர்களுக்கும் சரி செயற்படுவதற்கான வழிவகைகளை திறந்துவைத்திருக்கின்றது.

உதாரணமாக, நில காணி விடயம் தொடர்பாக என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது? உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? எவ்வளவு மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளார்கள்? இப்படிப்பட்ட விடயங்கள் ஆதாரபூர்வ அறிக்கைகளாக தயாரிக்கப்பட வேண்டும்.

ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா. தீர்மானத்தைப்பற்றி பேசும்போது மேற்படி விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை நாங்கள் நிரூபிக்கலாம்.

உண்மையில் இப்படிப்பட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு அவசியம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.  ஆரம்பகால அறிக்கைகள் அவற்றைக் கொண்டிருந்தன.

நவீன உத்திகளைப் பயன்படுத்தி, இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்குமானால், அவற்றின்மூலம் தற்போதைய இராணுவ மயமாக்கலை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம்.  இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்த ஜெனீவா அமர்வுக்கு முதல் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட்டு இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படத் தவறினால் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து இலங்கை அரசு மறைந்துபோகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

ஐ.நா.வுக்கு செல்வதால் என்ன பலன் என்று பலர் வினா எழுப்புகின்றார்கள்.  சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு தொடர்ந்து இருப்பது முக்கியமானது.  ஏனெனில் அப்பொழுதுதான் இலங்கை அரசின் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் மற்றைய நாடுகளும் இலங்கை அரசின் செயற்பாடுகள்பற்றி தீர்ப்பிடுவதற்கு ஏதுவான நிலையிருக்கும். ஏனைய நாடுகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு தமிழ் அமைப்புக்கள் அயராது உழைக்கவேண்டும்.  அதுமட்டுமன்றி அவர்கள் ஐ.நா. மட்டிலும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

வெறுமனே துறைசார் வளங்களை வழங்கும் கதையை ஐ.நா. நிறுத்தி மனித உரிமைகளை கண்காணிக்கும் பணியில் ஐ.நா. அதிக கவனத்தை செலுத்தவேண்டும் என்பது வலியுறுத்தப்படவேண்டும்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் விடயங்கள் தொடர்பாகவோ அல்லது முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிக்காப் அணிவது தடைசெய்யப்பட்டது தொடர்பாகவோ ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு எந்தவிதமான அறிக்கைகளையும் வெளியிடாது மௌனமாக இருக்கின்றது.

ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் உண்மையில் என்ன செய்யவேண்டும் என்றால், நீங்கள் இதை செய்யுங்கள் நாங்கள் இதை செய்கிறோம் என்று தமக்கிடையே வேலைத்திட்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட விடயங்கள் ஆராயப்படாவிட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துவிடும்.

உலக அளவில் இன்று மனித உரிமைகள் விலங்கிடப்பட்டிருக்கும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்காத பல நியாயமற்ற அரசுகள் எங்கும் வியாபித்திருக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலே நீங்கள் எங்களுடன் இணைவீர்களானால் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவிருக்கிறோம் என்று அரசுகள் கூறுகின்ற இந்தச் சூழலில் மனித உரிமைகள் என்பதன் முக்கியத்துவம் மறைந்துபோகின்றது.

இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.

தொடரும்……….

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version