உலகின் புதிய ஒழுங்குமுறை உருவாக்கக் காலமாவீரர் நாளின் முக்கியத்துவம்

 01-கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தின் தாக்கம்

02-உலகில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை சீனாவின் பொருளாதார மேலாண்மையுடன் கூடிய வல்லாண்மைக்கு எதிராக நிறுவ வேண்டிய அமெரிக்க அரசியல் மாற்றம்; தோன்றியுள்ளதன் விளைவான மாற்றங்களின் காலத்தின் தாக்கம்

03-சட்டத்தின் ஆட்சியும் பாராளுமன்ற வலுவேறாக்கமும் இல்லாத சிங்கள பௌத்த பெரும்பான்மை கொடுங்கோன்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ், அதன் மீயுயர் அதிகாரமுள்ள அரச அதிபரின் ஆட்சியில், ஒரே நாடு ஒரே இனம் ஒரே மதம் இனப்பிரச்சினை என்பதேயில்லை, பெரும்பான்மை மக்களுடைய விருப்புக்கு எதிராக அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வெளிப்படையான அரச கொள்கைப் பிரகடனங்களுடான ஆட்சியாகவும், தங்கள் நாளாந்த நிர்வாகத்தையே தங்களை இனஅழிப்புச் செய்த படைத்தலைமைகளே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடாத்துகின்ற ஆட்சியாகவும் உள்ள இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் தாக்கம்.

என்னும் மூவகையான காலத் தாக்கத்தை ஈழத்தமிழர்கள் எதிர் கொள்ளும் நேரத்தில்  2020 மாவீரர்நாள் இடம்பெறுகிறது.

உண்மையில் இந்த மாவீரர் நாள் ஈழத்தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும், இருப்பையும், அந்த இருப்பை சனநாயக வழிகளில் நிலைப்படுத்துவதற்கான வழிகாட்டலையும், தெளிவையும் பெறுவதற்கான ஆற்றலைத் தரக்கூடிய நிகழ்வாக வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

இம்மாவீரர் நாளுடன் ‘இலக்கு’ தனது இலக்கு நோக்கிய பயணத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இணைகின்ற பொழுது ஈழத்தமிழ்மக்கள் இன்று தங்கள் உரிமைகளைப் பெறுவதற்குச் சரியானதைச் செய்யவும் சரியான முறையில் செய்யவும் செய்ய வேண்டியன குறித்து இலக்கை வகுப்பது இலக்கின் கடமையாகிறது.

மாவீரர்கள் நினைவேந்தல் தென் தமிழீழத்தில் முதன் முதல் தொடங்கப்பட்ட காலத்திலும் இன்றைய சூழ்நிலை போன்றே ஈழத்தமிழர்களின் அரசியல் சமுக பொருளாதார நிச்சயமற்ற காலம் காணப்பட்டதையும், அந்த மாவீரர் நாள் நினைவேந்தல்களில் மாவீரர்களின் ஈக உள்ளத்தன்மையும் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் உறுதியின் உறைவிடங்களாக அவர்கள் விளங்கியமையும் உணரப்பட்டதினாலேயே அக்காலத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழ் உள்ளமும் திடம்பெற்று தங்கள் தாயகத்தைத் தேசியத்தை தன்னாட்சியைக் காப்பதற்கான உறுதியை ஈழமக்கள் பெற்றனர். அதன் விளைவாகவே ஈழமக்களின் அரசு நோக்கிய அரசு ஒன்று 18.05.2009 வரை உலகால் உணரப்பட்டதையும் அது சட்டபூர்வமான சட்ட அங்கீகாரத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறீலங்காவின் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் சிறீலங்கா மீண்டும் தன்னை ஈழத்தமிழர் மீதான ஆக்கிரமிப்பு ஆட்சியாக நிறுவிக் கொண்டதையும்  அனைவரும் அறிவர்.

இந்த இன்றைய ஆக்கிரமிப்பில் இருந்து சனநாயக வழிகளின் வழி எவ்வாறு விடுபட்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெறுவது என்பது இன்றுள்ள முக்கிய கேள்வி.

இரண்டு தளங்களை நிறுவிச் செயல்படுவதும் அவற்றுக்கு இடையான பலமான இணைப்புமே இந்தக் கேள்விக்கான விடையைத் தரும்.

முதல் தளம்; தாயகத்தில் இன்றைய ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமைகள் மறுக்கப்படும் விதங்களையும் முறைகளையும் ஒழுங்குபடுத்தித் தொகுத்து காலதாமதமின்றி உலகுக்கு வெளிப்படுத்துதவற்கான ஒன்றிணைந்த கூட்டுத் தலைமைத்துவ கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது தளம்; தாயகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிற உள்ளக தன்னாட்சி மறுப்பைத் தக்க சான்றுகளுடன் காலதாமதமின்றி எடுத்துரைத்து உலகநாடுகளையும் உலக அமைப்புகளையும்  ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பாதிப்புற்றுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் இறைமையைக் கடந்து உதவும்படி கோரக்கூடிய கூட்டுத் தலைமைத்துவ அமைப்பு தேசங்கடந்துறை தமிழர்களிடை பொதுவேலைத்திட்டம் ஒன்றினால் உருவாக்கப்படல் வேண்டும்.

இந்தத் தளங்களுக்கு சக்தி அளிக்கக் கூடியதாகவும், இன்றைய அரசியல் சூழல்களை மக்களுக்குத்  தெளிவாக விளக்கக் கூடியதாகவும், மக்களின் பொதுக் கருத்துக் கோளங்களை உருவாக்கி, எல்லா மக்களது தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ள ஈழமக்களுக்கான தேசிய ஊடகம் இன்றைய காலத்தின் தேவையாகிறது. இதுவும் கூட செயற்படும் திரள்நிலை ஊடகங்களின் கூட்டிணைப்பால் சாத்தியமாக்கப்படலாம்.

இவற்றை உருவாக்க மாவீரர்கள் எந்த பகிர்வு உள்ளத்தையும் தலைமைக்கான பணிவு உள்ளத்தையும் கொண்டிருந்தார்களோ அந்த உள்ளத்துடன் உழைப்பதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் சிறந்த வணக்கமாக அமையும்.