Home செய்திகள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாத்து தாருங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

அடிப்படை உரிமைகளையாவது பாதுகாத்து தாருங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

214 Views

எங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

“கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இவர்கள் யார்? இவர்கள் எதற்காக தம் உயிரை அர்ப்பணித்தார்கள்? இந்த இளையவர்கள் தமது இளவயதில் தமது இளவயதுக்கே உரிய ஆசைகளை துறந்து ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைக்காய் போராடி தம் உயிரை ஆகுதியாக்கியவர்கள்.

இவர்களும் எல்லோரையும் போல அம்மாஇ அப்பாஇ குடும்ப உறவுஇ உழைப்பு என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படி சிந்திக்காது எமது இனத்திக்காக தம் உயிரை ஈந்தவர்கள். எனவே இந்த மாவீரர்கள் அனைவரும் தமிழர்களின் பிள்ளைகள்.

எம்மினத்தின் உறவுகள். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்வதற்கான நாளே இந்த நவம்பர் 27. இந்த நாளில் 30 வருடங்களாக நாம் நினைவேந்தி ஈகை சுடரேற்றி வருகின்றோம். ஆனால் இந்த வருடம் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசால் இந்த உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பதவிக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் பல விதங்களிலும் ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். நில அபகரிப்பு, சிங்கள பெளத்தமயமாக்கல், மதவழிபாட்டு சுதந்திர மறுப்பு, கருத்து சுதந்திர மறுப்பு, நினைவு கூருவதற்கான உரிமை மறுப்பு என்பன திணிக்கப்படுகின்றன.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற மகாகவியின் கூற்றுப்படி எங்கள் உயிராம் தமிழுக்காய் உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூருவது எங்கள் கடமை மட்டுமல்ல எங்கள் உரிமை. எங்கள் உரிமைக்காகப் போராடிய எமது இனம், தற்போது உரிமை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வதற்காகப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் இன்றுடன் 1376 நாட்களாக நீதிக்காகப் போராடி 79 பெற்றோரையும் இழந்த நிலையில் நாங்களும் நோய்வாய்ப்பட்டு எமது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் கூட எமது பிள்ளைகளுக்குரிய நீதியைத் தர முன்வராத இந்த அரசும், நீதிமன்றமும் எம்மைத் துரத்தித் துரத்தி மாவீரர்களை நினைவேந்த தடைவிதித்த நீதிமன்ற ஆணையை எமக்கு கையளிக்கின்றது. இதுவரை முல்லைத்தீவு, அம்பாறை மாவட்டத் தலைவிகளுக்கு, மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் அனைவருக்கும் தடை உத்தரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேறு சிலருக்கு கையளிக்க முயன்றுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?
தமிழரின் வரலாற்று தாயக பிரதேசங்களில் தொடர்ச்சியான திட்டமிட்ட சிங்கள பெளத்த மயமாக்கம், பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டமை, தமிழரின் உரிமைக்கான சாத்வீக போராட்டங்கள் சிங்கள ஆயுத படைகளினால் கொடூரமாக அடக்கப்பட்டமை, தமக்குரிய பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்பட்டமை (தரப்படுத்தல் திட்டம்), தொழில் வாய்ப்பு என்பவற்றில் பாரபட்சம் காண்பித்தமையே தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த தூண்டியது.

தற்போது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையான தமது தந்தைக்கு, தாய்க்கு, சகோதரனுக்கு, சகோதரிக்கு, உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தடை விதித்தது முழு தமிழினத்தின்இ, குறிப்பாக இளைஞர்களின் மனதை பாதிக்காதா? தமது பிள்ளைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நித்தமும் தேடி அலையும் தாய்மாரினை குற்றவாளிகள் போல ஒவ்வொரு நினைவு தினங்களுக்கும் நீதிமன்றங்களினுடாக தடை விதிப்பதும், பொலிஸ், இராணுவ மற்றும் புலனாய்வுத்துறையினரால் அச்சுறுத்தப்படுவதும் எவ்வாறு சகஜ வாழ்வினை உருவாக்கும்? இது எங்களை மேலும் காயப்படுத்துவதுடன், எங்களை சொல்லோணா துன்பத்திற்கும் உள்ளாக்குகிறது.

மேலும் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சரத்து 21 இனால் பாதுகாக்கப்பட்ட ஒன்றுகூடும் உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்ட நிலையிலேயே தமிழர் தாயகத்தில் இன்று தமிழ் மக்கள் தொடந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். 17 செப்டம்பர் 2020, மனித உரிமைகள் குழுவின் பொது கருத்திலும் ஒன்றுகூடும் உரிமையும், நினைவேந்தல் உரிமையும் மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் சிறிலங்கா அரசானது சர்வதேச நியமனங்களை எப்போதும் புறந்தள்ளி ஒடுக்குமுறையையே தொடர்ந்து பிரயோகித்து வருகின்றது.
ஆகவே இந்த அறிக்கையின் மூலம் நாம் எமது உரிமைகளை பாதுகாக்கவும், எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கான வாழும் சாட்சிகள் ஆகிய எம்மை சர்வதேச நியமங்களுக்கேற்ப பாதுகாக்க முன்வருமாறும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்இ சர்வதேச சமூகத்திடமும் வேண்டி நிற்கின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version