Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் மாவீரரைப் போற்றுதல் அடிப்படை மனித உரிமைஅதனை உலகுக்கு வெளிப்படுத்தல் நம் கடமை

மாவீரரைப் போற்றுதல் அடிப்படை மனித உரிமைஅதனை உலகுக்கு வெளிப்படுத்தல் நம் கடமை

கார்த்திகை மாதத்திற் தான், “ தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க முதல்நாள் பிள்ளையொன்று விழி திறந்தது. தமிழரின் நெஞ்சில் இடிசொருகி விட்டு மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது. ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின.

இது தற்செயலான சம்பவம் அல்ல ஒரு சரித்திரமான அதிசயம். கார்த்திகை 27 மாவீரர் நாள்” என்னும் “சாவரினும் தளரோம் – யார்வரினும் பணியோம் – வெந்துதணியாது வீரநிலம்” என்னும் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதையில் வரும் வரிகள் தேசியத் தலைவரின் கண்விழிப்பும் மாவீரர் சங்கரின் கண்மூடலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்கான விழிப்பையும், உறுதியின் உறைவிடமாக அவர்கள் வாழ்வையும் மாற்றிய வரலாற்றை மிகச்சுருக்கமாகப் பதிவு செய்கின்றன.

“மாவீரர் நாள். கார்த்திகை 27. காவற் தெய்வங்களின் காணிக்கைத் திருநாள். ஊர் திரண்டு ஒப்பாரி வைப்பதில்லை. உருக்கொண்டாடி உறுதியெடுத்துக் கொள்கிறது. தீயிடும் ஆரிய மரபழித்த நடுகல் வழிபாடிது. தமிழரின் பழைய மரபு புதுப்பிக்கப்படுகிறது. ஈமத்தாழியும், நடுகல்லும்., வெறியாட்டுமே நமக்கிருந்த வழிபாடு. வெற்றி வீரர்கள் வீரத் தெய்வங்களாயினர். இவர்கள் கற்பனையற்ற கடவுளர். பகைவரும் திசைபார்த்து எல்லைப்புறங்களில் இவர்களுக்கு கோயிலிருந்தது. சாவடைந்த பின்பும் இவர்களுக்கோர் சக்தியிருந்தது. வீரமாதேவியின் விழிகள் திறந்தேயிருந்தன. இன்றும் நிலத்தில் விதைக்கின்றோம்; எங்கள் நிர்மலரூபங்களை. இது விடுதலைக்கான விதைப்பு. கட்டறுப்புக்கான விலைகொடுப்பு. உழவும், விதைப்பும் நாளை நமக்கெனவாகும் அறுவடைக்கானது. நம்பிக்கையின் ஒளித்திசையில் பயணம். இது கார்த்திகை மாதம். ஊர்முற்றமெங்கும் ஒளி வெள்ளம். சுடரேற்றித் தொழுகின்றோம். பாட்டோடு சேர்ந்த பரவசம்” இது தாயகத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் 2002ஆம் ஆண்டு மாவீரர்தினம் ஈழத்தமிழர்களின் தேசியத்தினமாகவும் வழிபாட்டுக்குரிய பண்பாட்டுத் தினமாகவும் எவ்வாறு அமைகிறது என்பதை எடுத்து விளக்கி எழுதப்பட்ட கவிதாவரிகள். இந்தப் பாடல்வரிகள் மாவீர்நாள் ஈழமக்களின் பண்பாட்டுப் பெருவிழா, வழிபாட்டு உரிமை என்பதனை உலகுக்குத் தெளிவாக்குகிறது.

இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் 1இன் 14(1) ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு உரித்துடையவராவர் :-

(அ) வெளியிடுதலுட்படப் பேச்சு சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும்;

(ஆ) அமைதியான முறையிலே ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்;

(இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்;

(உ) தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்;

(ஊ) தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரம்.

என இலங்கைக் குடிமக்களுக்குரிய உரிமைகளைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அத்துடன் இலங்கை அரசியலமைப்பின் “அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும், அடிப்படைக் கடமைகளும்” என்னும் 6வது அத்தியாயத்தின் 2 (எ) பிரிவும் கூட “மக்களின் ஒழுக்கத் தரத்தையும் உயர்த்துதலும், மனித ஆளுமையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தலும்” அரசாங்கத்தின் கடமையாகப் பிரகடனப்படுத்துகிறது.

இந்நிலையில் இன்றைய சிறீலங்கா அரசாங்கம் மாவீரர் நினைவேந்தலுக்கு நீதிமன்றத்தாலும் கொரோனாச் சட்டங்களாலும் ஏற்படுத்த முற்படும் தடைகள் என்பன இலங்கையின் அரசியலமைப்பை மீறுகின்ற செயற்பாடாக மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளையும், கடமைகளையும் மறுக்கும் அதன் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் நேரடியான வெளிப்பாடாகவும் அமைகிறது.

இந்த ஈழத்தமிழரின் மனித உரிமைகளை தடைசெய்யும் இச்செயற்பாடு, ஈழத்தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடாத்தி, அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அதன் அரசியற் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவும், பண்பாட்டு இனஅழிப்புக்கான அதன் இலக்கை அது நாளாந்த வாழ்வில் நிலைப்படுத்தி படைபலம் கொண்டு இனங்காணக் கூடிய அச்சத்தை ஈழமக்களுக்குத் தொடரும் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவும் உள்ளது. எனவே ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையினை உலகநாடுகளும், அமைப்புகளும் ஏற்று அவர்களுக்கான அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையையும், மனிதாய உதவிகளையும் அவர்கள் பெறுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் உடன் செய்து, அவர்களை சிறீலங்காவின் இனஅழிப்பில் இருந்தும், பண்பாட்டு இனஅழிப்பில் இருந்தும் காலந்தாழ்த்தாது காக்க வேண்டுமென்பதையே இம்மாவீர்கால நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. இதனை உலக நாடுகளுக்கும், அமைப்புகளுக்கும் எடுத்துரைக்கும் தார்மீகக் கடமையில் புலம்பெயர் தமிழர்கள் இன்று உள்ளனர்.

Exit mobile version