Tamil News
Home செய்திகள் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் பதில் கூறவேண்டும்- சுரேன் ராகவன் வலியுறுத்தல்

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் பதில் கூறவேண்டும்- சுரேன் ராகவன் வலியுறுத்தல்

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும் என  நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது எனவும் தெளிவுபடுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான விளக்கத்தை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவையேற்படின் இது தொடர்பில் நாடாளுமன்ற விவாதமொன்றை ஒழுங்குசெய்யுமாறும் கூறிய சுரேன் ராகவன், யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பல அரசியல் கைதிகள், முன்னைய ஆட்சிக் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது எஞ்சியிருப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தியோ அல்லது பொது மன்னிப்பளித்தோ சமூகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஆலோசனை குழுவொன்றினை நியமித்து அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர், நீதி அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version