பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் – சீ.இனியவன்

தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பன்முக ஆளுமையுடன் மக்களிடத்திலும் அனைத்துலகப் பரப்பிலும் அதிகம் அறியப்பட்ட ஓர் உன்னதமான போராளியே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

இதனால் தான் இவரது இழப்பு குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 03.11.2007 அன்று தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற அறிக்கை குறிப்பின் மூலம் “தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் - சீ.இனியவன்

நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாக நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்திருந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன்.

இலட்சிய போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகத்தோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்” என தனது  உள்ளார்ந்த உணர்வில் இருந்து குறிப்பிட்டிருந்தார்.

02.11.2007.அன்று சிறீலங்கா அரசின் நன்கு திட்ட மிட்ட நயவஞ்க விமானக் குண்டுத் தாக்குதலில் வீரச் சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுத் தடங்களை மீட்டுப் பார்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர்  குறிப்பிட்டது போல,  தமிழ்ச்செல்வன் அண்ணன் தாயக விடுதலைக்காக இணைத்துக்கொண்ட காலம் முதல் தமிழீழ மக்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும்  விசுவாசமிக்க அற்புதமான போராளியாக, போர்க் கள தளபதியாக, நிர்வாக பணிமிக்கவராக, அரசியல் பணிக்குரிய பொறுப்பாளராக, அரசியல் இராஜதந்திர பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட தளங்களில் நாளந்தம் சுழன்று கொண்டிருந்தார்.

இதனை விட வெளியே அறியப்பட்டதற்கு அப்பால், தேசியத் தலைவரின் பிரத்தியேகமான வெளியே சொல்லமுடியாத பாரிய பணிகள் இவரது தோள்களில் இருக்கும். இவற்றுள் புன்னகை உதிர்த்த முகத்தோடு ஒவ்வொரு போராளிகளிடத்திலும் பொறுப்பாளர்களிடத்திலும் அவரவர் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து, அதற்கான வழிகாட்டல் ஆலோசனை தேவைகளை நிறைவு செய்து முடியும் என்ற நம்பிக்கை ஊட்டலுடன் ‘அண்ணையின் எதிர்பார்ப்பு’ என வார்த்தைக்கு வார்த்தை சொல்லி  உற்சாகமூட்டி மக்கள் மத்தியில் அரசியல் பணி செய்ய அனுப்பி வைக்கும் உன்னதமான அரசியல் பொறுப்பாளன்.

இவர் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக  பொறுப்பேற்ற காலத்திலிருந்து தேசியத் தலைவர் அரசியல் பணிக்குரிய போராளிகள் மக்கள் மத்தியில் எவ்வாறு பணி செய்ய தயார்படுத்தப் பட்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தாரோ அதனை நிறைவான தெளிவூட்டல் மிக்கவர்களாக பயிற்றுவிக்கப்பட்டு பல்வேறு தளங்களில்  ஒவவொரு போராளிகளின் ஆற்றல் ஆளுமையை இனங்கண்டு அரசியல் பணிக்குரிய தளத்தில் வளர்த்தெடுத்து இரவு பகல் பாராமல்   மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென ஊக்கம் தந்தவர் தமிழ்ச்செல்வன் அண்ணன்.

இவர் அரசியல் பணியை பொறுப்பேற்ற காலத்தை தொடர்ந்து தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறீலங்கா அரசு பல கிராமங்களை, பிரதேசங்களை ஆக்கிரமித்து முன்னேறி  மக்களை இடம்பெயர வைத்த நிர்க்கதியான சூழலில், மக்களை வாழ்வதற்கு வழிகாட்டி நம்பிக்கையூட்டி போராளிகள் இடம்பெயர்வு தளத்தில் நின்று பணி செய்யவேண்டுமென்று வழிகாட்டியவர்.

இந்த சூழ்நிலையில் நாம் மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாவிட்டாலும் மக்கள் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொள்ள தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழ சுகாதார சேவை, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், குழந்தைகள், சிறுவர், பெண்கள், மற்றும் மூதாளர் நலன்பேண் போன்ற அமைப்புகள், தமிழீழ கல்விக் கழகம், மாணவர் அமைப்பு, ஏனைய மனித நேய அமைப்புக்கள் என அரசியல் துறை ஆளுகைக்குட்பட்ட பிரிவுகள் ஊடாக  உடனடி மனிதாபிமான பணிகளை கண்டறிந்து மக்கள் நலன்சார்ந்த தேவைகளை நிறைவு செய்த அரசியல் தொண்டனாக தமிழ்செல்வன் அண்ணனை மக்கள் கண்டனர்.

இவ்வாறான நிலையில்,  மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு விடுதலைப் போரிலும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை உடையவர்களாகவும் எதிரியின் மீது கோபமும் எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர்.

வாழ்வின் அவலமோ  நிலமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்கு கொண்டு வந்தது. களத்தில் அகப்புற சூழ்நிலையை புரிந்து கொண்டு பாசறைக்குள் வருகை தரும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை  சிறீலங்கா அரசு, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு காடுகளுக்குள்  திணற வைக்க காரணமாக அமைந்தது.வன்னியின் ஊர்களின் ஒரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி செய்யத்தொடங்கினர்.இது தமிழ்செல்வன் அண்ணனின் வழிகாட்டலில் அரசியல் திரட்சியின் மக்கள் புரட்சியாக பரிணமித்தது.இதுவே ஓயாத அலைகள் 1,2,3 வெற்றியின் அறுவடையாக இழந்த நில மீட்பாக மாற்றித்தந்தது.

முப்பது வருட போராட்டத்திற்கு எழுந்த நெருக்கடியை தேசியத் தலைவருக்கு தோள்கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம் எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப்போட்டது. வந்த நெருக்கடியை நோக்கி அரசியல் துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார்.

தமிழ்ச்செல்வன் அண்ணன் எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார்.

போர் நிறுத்த உடன் பாட்டுடன்  நோர்வே நடுவன் சிறிலங்க அரசு பேச்சுவார்த்தைக்கு முகம் கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழச்செல்வன் அண்ணனை சார்ந்ததாகவே இருந்தது. தலைவரது உணர்வுகளை புரிந்துகொண்டு அரசியல் தலைவனாக இராஜதந்திரியாக பேச்சுவார்தையாளனாக பாலா அண்ணையின்  அனுசரணையோடு பரிணமித்தார். இவரது இராஜதந்திர திறனும் சிறப்பாற்றலும் நேர்மையான விடுதலைப் பற்றினையும் தாயகம் தேசியம் தன்னாட்சி கொண்ட  தமிழீழ தனியரசுக்கான மக்களின் அடிப்படை அபிலாசைகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்துச்சென்றவர்.

சமாதான பேச்சு வார்த்தை காலத்திலும் தனக்கு கிடைத்த நேரகாலத்தை  மேற்குலக நாடுகளில் தனது இராஜதந்திர சந்திப்புக்களையும் இந்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தில் தாயக விடுதலைப்போராட்டத்தில் கொணடிருக்கும் பற்று உறுதி செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் நம்பிக்கை ஊட்டி கருத்துருவாக்கம் ஆலோசனைகளோடு அமைப்புகளிடையே நல்லுறவை கட்டியமைத்தவர்.

எனவே தனது புன்னகையையும் அரசியலுக்கு ஆயுதமாக்கி, வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு மக்கள் மனங்களுக்குள் நிறைந்து நிற்கும் உன்னதமான மாவீரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் அலெக்ஸ்,மேஜர் மிகுதன்,மேஜர் செல்வம்,மேஜர் நேதாஜி,லெப் ஆட்சிவேல்,லெப் மாவைக்குமரன் ஆகியோருக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறோம். எமது இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த இவரது குரல் இன்னும் ஓயவில்லை இனியும் ஓயாது எமது தாயக தாயக விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயாது என உறுதியுடன் பயணிப்போம்.