Home ஆய்வுகள் ‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்

‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், ஊடகம் என்பது செய்தி – தகவல் – விமர்சனம் என்பவற்றோடு கருத்துருவாக்கம், கருத்துப் பரிமாற்றம் என்பவற்றை உள்ளடக்கியதால், இதனை ஜனநாயகத்தின் காவல் நாய் (watch dog) என்பர்.

அதனால், ஊடகம் எப்போதும் காய்தல், உவத்தலின்றி உண்மையை உண்மையாகக் கூறுவதாக (நடுநிலை என ஒன்றில்லை) இருக்க வேண்டும். அதேசமயம், மக்களின் கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடமளிப்பதாகவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக, கருத்துகள் புனிதமானவை, விமர்சனங்கள் சுதந்திரமானவை என்பது ஊடகங்களுக்கான வேதவாக்கியமாக உள்ளது.

“உன்னுடைய கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் அந்தக் கருத்தைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையை நான் எனது உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுவேன்” என பிரபல பிரெஞ்சுத் தத்துவஞானி வொல்டயர் (Voltaire) தெரிவித்த கூற்று எந்தளவுக்கு ஊடகங்களால் பேணப்படுகிறது என்ற கேள்வி இன்று அவசியமாகிறது.

கருத்துகளைக் கூறும் சுதந்திரம், அச்சமின்றியும் சலுகைகளை எதிர்பாராதும் இயங்கும் நெறிதளம், சமூகத்தை மாற்றியமைக்கும் வல்லமை என்பவை ஊடகங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென யுனெஸ்கோவின் உலக ஊடக நாள் பிரகடனங்கள் சுட்டியுள்ளன.

இதனால், சமூக மற்றும் அரசியல் மாற்றத்துக்கான சாரதிகளாக ஊடகங்கள் செயற்பட வேண்டும். (Media as drivers of change) என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமானதாக ஊடக சுதந்திரமானது, மனித உரிமைகளின் மூலைக்கல் – அதாவது ஆதாரத்தூண் (Press freedom is a cornerstone of human rights) என்று வரையப்பட்டுள்ளது.

vietnam kim 'மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்'- திரு எஸ். திருச்செல்வம்

உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்களும், நாடுகளுக்கிடையேயான போர்களும் அதிகரித்துள்ள கடந்த/நிகழ்கால கட்டத்தில், போருக்குப் பின்னரான செயற்பாடுகளில் (Role of media in post conflict countries) ஊடகத்தின் வகிபாகம் எவ்வகையாக அமைய வேண்டும் என்பது பற்றி பல்வேறு அரங்குகளில் பேசப்படுகிறது.

சில நாடுகளின் போர்களின்போது அல்லது மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளின்போது சில ஊடகங்கள் அவற்றை துணிகரமாக அம்பலப்படுத்தி அல்லது கள நிலைவரத்தை துல்லியமாக எடுத்துக்காட்டி வரலாற்றை மாற்றியமைத்ததை இங்கு சுட்ட வேண்டும். இவை அனைத்தும் கடந்த அரை நூற்றாண்டுக்குள் இடம்பெற்றவை.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் போரில் எரிகுண்டுக்கு இலக்காகி உடம்பில் ஆடையேதுமின்றி கைகளை மேலே தூக்கியவாறு ஓலமிட்டுக் கொண்டு வீதியால் ஓடிய ஒன்பது வயதுச் சிறுமி கிம் புக் என்பவரை எவரும் மறந்திருக்க முடியாது. இதனை ஒளிப்படத்துடன் செய்தியாக்கினார் நிக் உற் என்ற ஊடகவியலாளர். இந்தப் படமே அமெரிக்க யுத்தவெறி முகத்தை பகிரப்படுத்தி அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

1993இல் அமெரிக்க இராணுவ சார்ஜன்ட் வில்லியம் கிளிவ்லான்ட் என்பவரின் சடலத்தை சோமாலியர்கள் கயிறுகளால் பிணைத்துக் கட்டி மொகாடி நகரம் வழியாக இழுத்துச் சென்றதை ‘ரொறன்ரோ ஸ்டார்’ பத்திரிகையின் செய்தியாளர் போல் வாற்சன் செய்தியாக்கி அந்த யுத்தத்துக்கு முடிவு கட்டினார்.

நேற்றோ படையினர் 1999இல் கொசோவாவில் தரையிறக்கப்பட்டவேளை, ஐரோப்பாவில் நாட்டாண்மை செலுத்திய அமெரிக்க நுழைவுக்கு ஊடகங்களின் பலமே துணையானது. 2018இல் அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகத்தில் நடந்த சம்பவம் இன்னொன்று. அங்கு எல்லை தாண்டிச் சென்ற மெக்சிகோவினரை தண்டிக்கும் வகையில் பெற்றோருடன் வந்த குழந்தைகளைத் தனிமைப்படுத்தி காப்பகங்களுக்கு அனுப்பினார் ட்ரம்ப். இந்த மனித உரிமை மீறலின்போது குழந்தையொன்று தன்னிடமிருந்து பிரிக்கப்படும் தாயின் காலைப் பிடித்து கதறியழும் காட்சியை, யான் முறே என்ற ஊடகவியலாளர் வெளிப்படுத்தி அந்த அட்டூழியத்தை நிறுத்தச் செய்தார்.

இந்தப் பின்னணியில் இலங்கையில் தங்கள் மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக போராடியவர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட/இன்றும் மேற்கொள்ளும் இனவதை, இனரீதியான தாக்குதல், இனச்சுத்திகரிப்பு, இனவழிப்பு என்பவைகளைத் தடுக்க முடியாத நிலை எமது ஊடகங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை ஆழமாக மீள்நோக்க நேரிடுகிறது.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துள்ளது. அந்தப் பேரவலம் நடைபெற்றவேளை, அங்கிருந்த மனிதநேய அமைப்புகளும் வெளிநாட்டுப் பணியாளர்களும் சிங்கள அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

சாட்சிகளற்ற சூழலை உருவாக்கிய சிங்கள தேசத்துக்கு, மக்களை மீட்பது என்ற நாமத்தில் வகைதொகையின்றி அவர்களைப் படுகொலை செய்வதும், காணாமலாக்குவதும் சுலபமாயிற்று. மன்னார் ஆயராகவிருந்தவரால் தெரிவிக்கப்பட்ட உறுதியான எண்ணிக்கைகூட காணாமலாக்கப்பட்டு விட்டது.

போராட்டக் காலத்தில் சில சம்பவங்களை மட்டும் அவ்வப்போது உலக ஊடகங்களுக்குத் தெரிவித்து வந்த மருத்துவப் பணியாளர்களின் தகவல்களை, அவர்களை கைதுசெய்த பின்னர் அவர்களின் கட்டாய ‘ஒப்புதல் வாக்கு’ ஊடாக பொய்யாக்கியது அரச இயந்திரம்.

தமிழர் வசம் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் இருந்தும் சிங்கள தேச ஊடகங்களின் பொய்யுரைகளை முறியடிக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி இன்றும் உள்ளது. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் விடுத்து இனி என்ன நடக்க வேண்டுமென வலுவான பகுப்பாய்வுச் சிந்தனையை தமிழினம் மேற்கொள்ள வேண்டும்.

உண்மை வீட்டுவாசலுக்கு வருவதற்கு முன்னர் பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும் என்பது போன்று, தமிழ் தேசிய விடுதலை உணர்வும், அதற்கான செயற்பாடுகளும் புலம்பெயர் தமிழரிடையே இன்று எழுநிலையிலுள்ளபோதிலும், சிங்கள பௌத்த பெரும் தேசியம் அதனையும் மீறி சர்வதேச வட்டகையில் பொய்ப் பரப்புரைகளை விதைத்து பயிராக்கி வருகிறது.

புலம்பெயர் தமிழர் பல அமைப்புகளாகவும், குழுக்களாகவும் சிதறுண்டு அவர்களின் கொள்கைப்பாதை குன்றும் குழியுமாகி வருவது சிங்களத் தரப்புக்கு வாய்ப்பாகியுள்ளது. இதனால் பேரினவாதத்தின் அரூரக் கரங்கள் தமிழர் சமூகத்துள் புகுந்து மேலும் பிளவுகளை வியாபிக்கச் செய்துள்ளது.

இதனால், தமிழரால் தமிழருக்கென நடத்தப்படும் ஊடகங்கள் – முக்கியமாக புகலிடத் தமிழர் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி நோக்கப்பட வேண்டும். புற்றீசல்போல் தோன்றியுள்ள சமூக ஊடகங்களை முதலில் நேர்படுத்தி ஒழுங்கமைக்க வேண்டும்.

ஒன்றுபட்ட, பிளவுபடாத, ஒத்த கருத்துடைய தமிழ்த் தேசிய தளத்தில் நிற்கும் தமிழர் ஊடகங்களை ஒன்றிணைக்கும் அனைத்துலக ஊடக அமைப்பொன்று இன்று அவசியமாகிறது.

தாயக உறவுகளின் வாழ்வுரிமை, வாழ்வாதாரம் இரண்டையும் சமதளத்தில் எடுத்துச் செல்லும் கருத்தாதரவு சிந்தனைக்குழாமொன்று இதற்காக உருவாக்கப்பட வேண்டும்.

தளமும் வளமும் கொண்ட தமிழர் ஊடகப் பரப்பு, தாம் வாழும் நாடுகளில் அனைத்துலக மொழிகளில் பரப்புரைகளை மேற்கொள்வதோடு, அங்கு வாழும் மற்றைய இன மக்களின் சமூக அமைப்புகளுடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தி, அவர்களையும் உள்வாங்க வேண்டும்.

மக்களுக்காகப் பேசுவதும் மக்களைப் பேச வைப்பதுமே ஊடகத்தின் தலையாய பணி.

Exit mobile version