Home ஆய்வுகள் ஈழத்தமிழினத்தின் நீதித் தேடலில்இளையோரும் வரைகலை வடிவமைப்பும்

ஈழத்தமிழினத்தின் நீதித் தேடலில்இளையோரும் வரைகலை வடிவமைப்பும்

296 Views

ஆக்கபூர்வமான, புத்தம் புதிய முறைகளைப் பயன்படுத்தி மாற்றங்களைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் கவனஞ்செலுத்துகின்ற, இலத்திரனியல் நிறுவனமான ரெம்பிளோவின் (TEMPLO) இணை தாபகராக, இலண்டனைச் சேர்ந்த பாலி பாலவதனன் விளங்குகிறார்.

காத்திரமான அரசியல் மாற்றத்தை தோற்றுவிப்பதற்கு, வரைகலை வடிவமைப்பை (design) புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா எனப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு ‘ரெம்பிளோ’ (TEMPLO) என்ற இந்த நிறுவனம் 2013 இல் தாபிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை, பசுமை அமைதி (Green Peace),  புலம்பெயர்ந்தோர்க்கான உதவி நிறுவனம் (Migrant Help),  பன்னாட்டு மன்னிப்புச்சபை (Amnesty International), காலநிலை மாற்றத்துக்கான குழு (Climate Change Committee) போன்ற உலகப் புகழ்பெற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இலக்கின் 100ஆவது இதழுக்காக பாலி பாலவதனன் பிரத்தியேகமாக அளித்த ஆங்கில நேர்காணலின் மொழியாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

வினா :

சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் வரைகலை வடிவமைப்பில் (graphic design) உங்களுக்கு இருக்கின்ற நிபுணத்துவத்தை நீங்கள் பயன்படுத்தி வந்திருக்கிறீர்கள். இதே நோக்கத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கின்ற பன்னாட்டு அமைப்புகள் சிலவற்றுடனும் நீங்கள் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள். இந்த அனுபவத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :

ஏழு வருடங்களாக இந்தத் தளத்தில் நாங்கள் பணியாற்றிக்கொண்டு வருகிறோம். அத்துடன் இந்தத் தளத்தில் பணிபுரியும் அமைப்புகளிற் பல, குறிப்பிட்ட நிலப்பிரதேசங்களுக்காக மட்டும் பணிபுரிபவை என்பதுடன், பல விடயங்களில் அவை சமரசம் செய்து விடுகின்றன. ஆகவே எமது நீதிக்கான தேடலில் நாங்கள் எந்த அமைப்புடன் பணிபுரிய வேண்டும் என்பதை மிகக் கவனமாக நாங்கள் தெரிவு செய்கிறோம்.

இந்தத் தளத்தில், இதுவரை நாங்கள் இணைந்து பணியாற்றிய அமைப்புகளைப் பார்க்கும் போது, யஸ்மின் சூக்காவின் (Yasmin Sooka) தலைமையில் இயங்குகின்ற உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Project for Truth and Justice – ITJP)  என்ற அமைப்புடனான எமது பயணம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இந்த அமைப்பில் ஒரு திறந்த மனநிலை காணப்படும் அதே வேளையில் நாம் கதைத்துப் பேசி விட்டுக்கொடுத்துச் செயற்படக்கூடிய ஒரு இறுக்கமற்ற இளகிய நிலை காணப்படுகிறது. எமது தனித்துவம் மிக்க திறன்களைப் பொறுத்தவரையில், எமக்கிடையே ஒருவரையொருவர் மதிக்கின்ற பண்பு இங்கே அதிகமாகக் காணப்படுகிறது என்பதோடு மட்டுமன்றி, எமக்கிடையேயான உறவுகள் நீண்டகாலமாகத் தொடர்வதால் ஒவ்வொருவரும் செயற்படும் முறைகளையும் அவரவர் ஆற்றல்களையும் ஏற்று, மதித்து நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் மேற்கொண்ட செயற்பாடுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்றால், அது ‘சித்திரவதையை நிறுத்து’  (Stop Torture campaign) என்ற பரப்புரையாகும். இந்தப் பரப்புரையை ஆரம்பித்து வைக்க நாங்கள் உதவியாக இருந்தோம். இந்தப் பரப்புரையில் நாம் முன்னெடுத்த வழமைக்கு மாறான அணுகுமுறை, ஐக்கிய நாடுகள் அவையையும் கடந்து, விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளைக் கண்டறிவதற்கு மேற்குறிப்பிட்ட (ITJP) அமைப்பைத் தூண்டியது. இவற்றுடன் பிரபல்யமான ஒருவரது ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு, ‘Wired magazine’ என்ற பெயருடன் இணையத்தளம் மற்றும் அச்சு ஊடகமாக அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் சஞ்சிகையில் ஒரு ஆக்கம், மற்றும் மாயா (M.I.A.) என்ற பிரபல பாடகியால் வெளியிடப்பட்ட ஆவணப் படத்தைத் திரையரங்குகளில் திரையிடல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிலிருந்து இன்னும் பல செயற்பாடுகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம். அவற்றுள் சித்திரவதை முகாம்களைச் சித்தரித்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர எவரும் பதிவேற்றம் செய்யக்கூடிய ஒரு இணையத்தளம், ‘சோஆஸ்’ (SOAS) என்ற இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ‘பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்’ என்ற தலைப்பில் கண்காட்சி, இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் சித்திரவதைகளை அடையாளங்கள் மூலம் சித்தரித்தல், விசாரணையாளர்களுக்கு உதவும் முகமாக கூகிள் செயலியின் (Google Earth) உதவியோடு வரையப்பட்ட திரிகோணமலை சித்திரவதை முகாம் பற்றிய வரைபடம், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களின் உதவியுடன் சித்தரிக்கப்பட்ட வவுனியா யோசெப் முகாமிலுள்ள சித்திரவதைக்கூடங்கள் தொடர்பான வரைபடம், சிறீலங்காக் கடற்படையின் தற்போதைய கட்டமைப்பு, நாடாளுமன்றத்தின் கட்டுபாட்டுக்கு உட்படாத கோட்டாபயவின் செயலணிகள் என்பவை உள்ளடங்கும்.

கடந்த காலங்களில் நாங்கள் பணியாற்றிய அல்லது இணைந்து பணியாற்றிய பெரிய அமைப்புகள் உண்மையில் எப்படி இயங்குகின்றன என்று நாம் கற்றுக்கொண்ட விடயங்கள், இந்த இணைந்த செயற்பாடு வெற்றிகரமாக அமைந்ததற்கான காரணமாக இருக்கலாம். உதாரணமாக, Global Witness, இலண்டன் பொருளியல் கல்லூரி, ஐக்கிய நாடுகள் போன்ற புகழ்பூத்த அமைப்புகளுடன் ‘ரெம்பிளோ’ (TEMPLO)  பணியாற்றியிருக்கிறது.

சிறீலங்காவில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கான நீதிக்காகப் போராடுகின்ற புலம்பெயர் அமைப்புகளைப் பொறுத்தவரையில், எனது அவதானிப்பு என்னவென்றால், இவை மிகவும் மந்த கதியிலேயே செயற்படுகின்றன. அத்துடன் இப்படிப்பட்ட முன்னெடுப்புகளுக்கு அதிக நிதியைச் செலவிட இந்த அமைப்புகள் தயாராக இருப்பதில்லை என்பதுடன், புத்தாக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முன்வருவதில்லை. இது மிகவும் ஓர் கசப்பான உண்மையாகும்.

வினா :

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோரே எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் :

கொள்கையளவில் இது உண்மைதான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளையோர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘மனித உரிமைகள்’ என்ற வட்டத்துக்கு வெளியே வந்து, ஏனையோருடன் இணைந்து பணிபுரிய பெரும்பாலான இளையோர் இன்னும் தயாராக இல்லை என்பதே நடைமுறையில் நாங்கள் அவதானித்த விடயமாகும். இது பண்பாடு மற்றும் திறன்கள் மட்டில் இருக்கின்ற இடைவெளியோடு தொடர்புபட்டது. பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் தொழில்களான சட்டத்துறை, கல்வித்துறை, ஊடகத்துறை போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, இத்துறைகள் ‘தாழ்ந்தவை’ என்ற மனப்பாங்கும் இதற்கு இன்னொரு காரணமாகும். ஒரு மாற்றத்தைத் தோற்றுவித்து, உலகம் எம்மை நிமிர்ந்து பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு, இருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, எமது போராட்டத்துக்கு வெளியில் நிற்பவர்களும் உள்ளேவர நாம் வழிவகை செய்ய வேண்டும். எமது ஆற்றல்களைப் பகிர்ந்துகொள்ள நாம் பயமின்றியும் திறந்த உள்ளத்துடனும் செயற்பட வேண்டும்.

உலகுக்கு எமது வரலாற்றை உரத்துச் சொல்லி, அரசியல்வாதிகள், அரசுகள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் பரப்புரைக்கு இலத்திரனியல் உலகிலுள்ள அனைத்துத் தளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இச்செயற்பாடு ஆங்கிலத்தில் ‘Branding’ என அழைக்கப்படுகிறது. இந்த உத்தி மூலமாக புள்ளிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, அனைத்து அரசியற் கட்டமைப்புகளையும் ஊடறுத்து, எல்லைகள் எல்லாவற்றையும் கடந்து சென்று, காட்சிகளால் கதை சொல்லி, உண்மையை ஆணித்தரமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.

தமது வரலாற்றை உலகுக்கு எடுத்துச் சொல்ல திரைப்படம், கலை, வரைகலை வடிவமைப்பு, நகைச்சுவை, இசை போன்ற பல்வேறு விடயங்களை, யூத மக்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பது இவ்விடயத்தைப் பொறுத்த வரையில் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. ஸ்பீல்பேர்க் (Spielberg) என்பவரது ‘ஷின்லரின் பட்டியல்’ (Schindler’s list) என்ற திரைப்படம், டானியேல் லீபர்ஸ்கின்ட் (Daniel Libeskind) உருவாக்கிய யூத அருங்காட்சியகம், ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் யூத மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர பேர்லினில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் என்பவற்றையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். வெவ்வேறு ஊடகங்கள் வாயிலாகச் செய்தியைப் பரப்பும் போது, பாரம்பரிய தளங்களுக்கு அப்பால் அதிகமானோரைச் செய்தி போய்ச் சேர்ந்து, வேண்டிய தாக்கத்தை அது ஏற்படுத்துகின்றது.

வினா:

தமிழரது பிரச்சினை தொடர்பான மனித உரிமைகள் சார்ந்த பணியில் பெரியவர்களுக்கும், இளையோருக்கும் இடையே பரம்பரை இடைவெளியை இனங்காண்கிறீர்களா? இந்த இடைவெளி எப்படி நிரப்பப்படலாம் எனக் கருதுகிறீர்கள்?

பதில்:

தமிழ் மக்களின் நீதிக்கான தேடலில், பெரியவர்களின் அறிவும், அனுபவமும் காத்திரமானது என்பதுடன் இது இழக்கப்படக்கூடாது என்பது எனது கருத்து. இவ்விடயத்தை தற்கால நவீன உலகுக்குப் பொருந்தக் கூடிய வகையிலும், எல்லோரையும் சென்று சேரக்கூடிய வகையிலும், இதனை முன்னெடுத்துச் செல்லும் பணி இளையோரையே சார்ந்தது. இந்த நீதிக்கான தேடலில், புதிய திறன்களையும், புதிய துறைகளையும் இணைத்து எவ்வாறு விவேகமாக செயற்படலாம் என்பது இளையோரின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.

வினா:

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் தமிழ் மக்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் பயனுள்ள விளைவுகளைத் தரவேண்டுமாயின், இலத்திரனியல் உலகை சரியாகவும், விவேகமாகவும் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இந்தக் கருத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்:

இது முற்றிலும் உண்மை தான். எமது வரலாற்றை எடுத்துச் சொல்லவும், உலகுக்கு இவ்விடயங்கள் போய்ச்சேர்வதை உறுதிப்படுத்தவும் இது மிகவும் முக்கியமானது. சிறீலங்காவை உலகின் முன் நிறுத்துவதற்கு, தனியே மாயா என்ற பாடகியில் மட்டும் நாங்கள் தங்கியிருக்க முடியாது. இன்னும் பல புதிய வழிமுறைகளை நாம் இனங்காண வேண்டும்.

புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ்ச்சமூகம், தற்காலத்துக்குப் பொருத்தமான முற்றிலும் புதிய அணுகுமுறைகளை இனங்காணவேண்டும். ஈழத்தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, ஆவணப்படுத்தி வைப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், எமக்கான பரப்புரையைச் செய்வதற்கு இலத்திரனியல் தளங்கள் அனைத்தையும் பயன்படுத்துவதையும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையகத்துக்கு வெளியேயுள்ள அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு சமூக வலைத்தளங்களை புத்திசாதுர்யத்துடன் பயன்படுத்துவதையும் இது குறிக்கிறது.

ஒரு சிலர் மட்டும் வாசிக்கின்ற, எழுத்து வடிவிலான அறிக்கைகளை மட்டும் தயாரிப்பதோடு நின்றுவிடாது, உண்மையான மாற்றத்தை தோற்றுவிக்க நாம் முயல வேண்டும். தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு உலக சமூகம் மனமுவந்து தனது ஆதரவுக்கரங்களை நீட்டக்கூடிய ஒரு சூழலை நாம் விரைவாக உருவாக்க வேண்டும்.

-பாலி பாலவதனன்-

தமிழ் வடிவம் : ரெஜி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version